

புதிய வண்ண துணிகள் முதல் துவைப்பிலேயே சாயம் கரைந்து நிறம் மங்கிவிடாமல் இருக்க கல் உப்பு சேர்த்து ஊறவைத்தல், குளிர்ந்த நீரில் தனியாக துவைத்தல், அதிக சோப்பு தவிர்த்தல், வெயிலில் நேரடியாக காய வைக்காமல் நிழலில் உலர்த்தல், துணி லேபிள் வழிமுறைகளைப் பின்பற்றுதல் போன்ற எளிய டிப்ஸ்கள் மூலம் துணிகளின் ஆயுளையும் பளபளப்பையும் நீண்ட காலம் பாதுகாக்கலாம்.
புதிய வண்ண ஆடைகளை அணியும்போது இருக்கும் ஆனந்தம் துவைக்கும்போது இருப்பதில்லை. ஏனெனில் புதிய ஆடைகளை துவைக்க ஊறவைக்கும்போது சாயம் கரைந்து மற்ற ஆடைகளிலும் படிந்துவிடுகிறது. மேலும் புதிய ஆடையின் நிறமும் மங்கிவிடுகிறது. அந்த வகையில் புதிய ஆடைகள் நிறம் மங்காமல் பாதுகாக்கும் டிப்ஸ்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
புதிய வண்ண ஆடைகள் சாயம் போகாமல் இருக்க டிப்ஸ்:
1. புதிய வண்ண ஆடைகளை முதல் முறை ஊறவைக்கும் போது ஒரு லிட்டர் குளிர்ந்த நீரில் 2 தேக்கரண்டி கல் உப்பு கலந்து 30 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் தனியாக துவைத்தால் சாயம் எளிதில் கரைவது குறைந்து புதிய (துணி பராமரிப்பு) நிறம் மங்காமல் இருக்கும்.
2. புதிய ஆடைகளில் குறிப்பாக சிவப்பு, நீலம், கருப்பு, பச்சை போன்ற அடர் நிற ஆடைகளில் அதிகப்படியான சாயம் இருக்கும் என்பதால் முதல் இரண்டு அல்லது மூன்று முறை தனியாக துவைப்பது பாதுகாப்பானது. இதனால் மற்ற வெளிர்நிற ஆடைகளில் சாயம் படிவது தடுக்கப்படும்.
3. வாஷிங்மெஷினில் துவைக்கும் போது மென்மையான துணிகளான கால் உறைகள், குழந்தைகளின் சிறிய ஆடைகள், முகக் கவசங்கள் உள்ளாடைகள் போன்றவை கிழியாமல் பாதுகாக்க ஒரு வலை சலவைப் பையில் (Mesh Laundry Bag) வைத்து துவைப்பது பாதுகாப்பானது.
4.அச்சிடப்பட்ட டி-ஷர்ட்கள், ஜீன்ஸ், எம்பிராய்டரி செய்யப்பட்ட ஆடைகள், அடர்நிற ஆடைகளின் வெளிப்புறம் நேரடியாக உராய்வதை தவிர்க்க எப்போதும் ஜிப்புகளை முழுமையாக மூடியும், நாடாக்களை கட்டியும் ,தலைகீழாகத் திருப்பியும் துவைப்பது நல்லது.
5. அதிக வெப்பமான நீரில் வண்ண ஆடைகளை துவைத்தால் சாயம் கரைவது அதிகரிக்கும் என்பதால் குளிர்ந்த நீரில் துவைப்பதன் மூலம் துணியின் தரத்தையும் நிறம் மங்காமலும் பாதுகாக்கலாம்.
6. வண்ண ஆடைகளை நீண்ட நேரம் கடுமையான வெயிலில் காய வைத்தால் நிறம் மங்கிவிடும் என்பதால் புதிய ஆடைகளை தலைகீழாக திருப்பி வெயில்படாத நிழலான இடத்தில் உலர்த்துவது நல்லது.
7. பருத்தி, பட்டு, கம்பளி, லினன், செயற்கை இழை போன்ற ஒவ்வொரு வகையான துணிக்கும் தனித்தனி சலவை முறை உள்ளதால் துணிகளின் லேபிளில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பயன்படுத்தி துவைத்தால், துணியின் ஆயுளை அதிகரிக்கலாம்.
8. துணிகள் துவைக்கும்போது அதிகமான சோப்பு பயன்படுத்தினால் படிவமாக தங்கி அழுக்கை மேலும் ஈர்க்கும் என்பதால் மெஷினில் துவைக்கும் போதும், கைகளில் துவைக்கும்போதும் துணிக்கு ஏற்ற அளவு சோப்பு பயன்படுத்துவதே சிறந்தது.
9. துணிகள் துர்நாற்றம் இல்லாமல் இருக்க கடைசியாக அலசும் போது சிறிதளவு வெள்ளை வினிகரை சேர்த்து அலசினால் துணிகளில் உள்ள சோப்பு படிவத்தை போக்கி, துணிகளை மென்மையாக்கி துர்நாற்றத்தை அகற்றி விடும் . வினிகரையும் ப்ளீச்சையும் ஒருபோதும் ஒன்றாக கலக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
10. துணிகளில் கறைகள் நிரந்தரமாக பதியாமல் தடுக்க தேநீர், காபி, எண்ணெய் அல்லது சாஸ் பட்டவுடன் உடனடியாக சுத்தம் செய்வது நல்லது. ஏனெனில் நீண்ட நேரம் காயவிட்டால் துணிகளில் இருந்து கறைகளை அகற்றுவது சற்று கடினமாகிவிடும்.
11. வெள்ளை துணிகள் மங்கலான நிறமாக மாறாமல் இருக்கவும், மற்ற வண்ண ஆடைகளிலிருந்து சாயம் படிவதை தடுக்கவும் எப்போதும் தனியாக துவைக்கவேண்டும்.
12. டவல்களை துவைக்கும் போது அதிக நார்களை உதிர்க்கும் என்பதால் மற்ற மென்மையான துணிகளுடன் துவைப்பதை தவிர்த்து, டவல்களையும் படுக்கை விரிப்புகளையும் தனியாக துவைப்பது சிறந்தது.
13. துணிகள் நீண்ட காலம் நிறம் மங்காமலும் கறைகள் படியாமலும் இருக்க முழுமையாக காய்ந்த பின்பு அலமாரிகளில் மடித்து வைக்கவேண்டும். சிறிதளவு ஈரப்பதத்தோடு இருக்கும் துணிகளை அலமாரியில் மடித்து வைத்தால் துர்நாற்றம் வீசுவதோடு பூஞ்சை, கரும்புள்ளிகள் உருவாகிவிடும்.
துணிகளை பாதுகாக்கும் விஷயத்தில் சிறிய செயல்களும் பெரிய பலன்களை கொடுக்கும். அதிக விலைக்கு துணிகள் வாங்கினாலும் முறையான பராமரிப்பு இல்லை என்றால் அவற்றின் நிறமும் ஆயுட்காலமும் குறைந்து பழைய துணி போல மாறிவிடும். ஆகவே மேற்கூறிய குறிப்புகளை கவனத்தில் கொண்டு பின்பற்றினால் துணிகள் எப்பொழுதும் சுத்தமாகவும் பளிச்சென்றும் காட்சி தரும்.
இக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் ஆடைகள் பல மாதங்கள் ஆனாலும் வாங்கிய போது இருந்தது போன்ற புதுப்பொலிவுடனும், துடிப்பான நிறத்துடனும் இருக்கும். சாயம் படிந்து மற்ற உடைகள் வீணாவதைத் தடுத்து, ஆடை பராமரிப்புச் செலவையும் பாதியாகக் குறைக்கலாம்.