
கோடைகாலத்தில் கார் பராமரிப்பது உங்கள் காருக்கு அதிக வெப்பத்தினால் ஏற்படும் சேதரைத் தவிர்க்கவும், நீண்ட காலத்திற்கு அதன் செயல்திறனை தக்கவைத்துக் கொள்ளவும் மிகவும் முக்கியமானது. கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வெயிலில் இருந்து நம் காரை பாதுகாக்கும் சில வழி முறைகளை அறிந்து கொள்வோம். இந்த பாதுகாப்பு குறிப்பு கார் மட்டுமல்ல மற்ற வாகனங்களுக்கும் பொருந்தும்.
கார்களின் வெளிப்புறம்
கோடை காலத்தில் சூரிய ஒளியின் பிரகாசம் மற்ற நாட்களை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். எனவே கார்களை நிழலான இடங்களில் நிறுத்துவது நல்லது. கார் கவரைப் பயன்படுத்தவும். இத்துடன் தோற்றப்பொலிவை பாதுகாக்க, யூ.வி.கதிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பாலிஷ் வகைகள் சந்தையில் கிடைக்கின்றன. அதையும் பயன்படுத்தலாம். வேக்ஸ் எனப்படும் மெழுகு கோட்டிங் பாலிஷ் வகைகளையும் பூசலாம்.
என்ஜின் கூலிங் :
என்ஜின் என்பது காரின் இதயம் போன்றது. கோடைகாலத்தில் வாகனங்களின் என்ஜின் அடிக்கடி சூடாகிவிடும். எனவே ஏ.சி. நன்றாக வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். காரில் கிளம்பும் போதும், இறங்கிய பிறகும் ஏ.சி. சிஸ்டத்தை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். தேவைப்பட்டால் ஏ.சி.யின் கேஸ்-ஐ ரீசார்ஜ் செய்யலாம்.
குளிரூட்டி மற்றும் ரேடியேட்டர் சரிபார்ப்பு:
வெயிலின் போது இயந்திரத்தின் வெப்பத்தை கட்டுப்படுத்த சரியான குளிரூட்டி அளவு அவசியம். அதிக நேரம் காரை வெயிலில் நிறுத்துவதைத் தவிர்க்கவும். காரை நிறுத்துவதற்கு முன், இன்ஜினை குளிர்ச்சியடைய விடவும்.
எண்ணெய் அளவைச் சரிபார்ப்பு:
கோடை காலத்தில் அதிக வெப்பம் எண்ணெயின் செயல்திறனை பாதிக்கும். எனவே, எண்ணெய் அளவை அவ்வப்போது சரிபார்த்து, தேவைப்பட்டால் மாற்றவும்.
உட்புற பராமரிப்பு :
கோடை காலத்தில் காரின் உட்புறம் அதிகம் சூடாகி நமக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். இதற்கு கண்ணாடி மற்றும் கார் ஜன்னல்களில் சன் ஷேடை பயன்படுத்துங்கள். இது டாஷ்போர்டில் கீறல் விழுவதை தடுக்க உதவும். கோடை காலத்தில் லெதர் இருக்கைகளும் பாதிக்கப்படுகின்றன.
எனவே லெதர் கண்டிஷனரைப் பயன்படுத்தி இருக்கைகளை மென்மையாகவும், கீறல்கள் இல்லாமலும் வைத்திருக்கவும்.
வெளிப்புற பராமரிப்பு:
காரின் வெளிப்புறத்தை சுத்தமாக வைத்திருக்கவும், தேவைப்பட்டால் மெழுகு பூசலாம், இது காரின் மதிப்பையும், பாதுகாப்புத் தன்மையையும் அதிகரிக்கும்.
சக்கரம் :
கோடையில் அதிக வெப்பம் காரணமாக, கார் டயர்கள் அதிக சேதம் அடைய வாய்ப்பிருக்கிறது. இதனால் அடிக்கடி டயர் பஞ்சராகும் சூழல் ஏற்படும். டயரில் காற்றழுத்தம் சரியான அளவில் இருப்பதை அடிக்கடி உறுதி செய்து கொள்ளவும். டயரில் காற்று குறைவாக இருந்தாலோ அல்லது காற்று கசிவுகள் ஏற்பட்டாலோ டயர்களை உடனடியாக மாற்ற வேண்டும். காரில் மாற்று டயர்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக பின்பற்றினால், கோடை காலத்தில் உங்கள் வாகனம் எந்தப் பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கும். உங்கள் பயணமும் எந்தப் பிரச்சினையும் இன்றி ‘ஸ்மூத்தாக’ இருக்கும்.