

வீட்டிற்கு வரும் விருந்தாளிகளின் அறிமுகத்தில் இருந்து குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டிய வாழ்க்கைப் பாடம் அதிகமாக உண்டு. அவற்றை எப்படி சொல்லித்தர வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம்.
உறவு முறைகள்:
வீட்டிற்கு வரும் இரத்த சம்பந்தமான உறவு முறைகளை அடையாளம் காண்பித்து, அவர்கள் எந்த வழியில் நமக்கு உறவு .நீ அவரை என்ன சொல்லி அழைக்கவேண்டும் என்பதை கட்டாயமாக கற்றுத் தந்துவிட வேண்டும். அப்பொழுதுதான் அடுத்த முறை உறவுகள் நம் வீட்டிற்கு வரும்பொழுது உறவுமுறை சொல்லி அழைப்பார்கள் .இதனால் உறவுக்குள் பிணைப்பு உண்டாகும். வந்தவர்களும் பாசமான பிள்ளையாய் இருக்கிறாயே என்று வாழ்த்தி பாராட்டி விட்டுச் செல்வார்கள். இந்தப் பாராட்டு குழந்தையை உற்சாகமடைய வைக்கும்.
தைரியம்:
பெரிய பெரிய நகரங்களில் வளரும் குழந்தைகள் கிராமப்புறத்து வீடுகளுக்கு செல்லும்பொழுது அங்கு வீட்டிற்குள் நுழையவே பயப்படுவார்கள். காரணம் அங்கிருக்கும் நெற்குதிர்கள், பத்தாயங்கள் போன்ற உணவு தானியங்களை சேமித்து வைக்கும் கொள்கலனைப் பார்த்து இரவு நேரங்களில் பயப்படுவது உண்டு.
அதேபோல் பள்ளி செல்லும் தருணங்களில் ரோட்டில் அடி எடுத்து வைக்கவோ, கிராஸ் செய்யவோ, வாகனங்களின் மிகுதியால், இரைச்சலால் பயப்படுவார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக பரீட்சை எழுதப் போகும்போது பயம் வரும். அப்பொழுது கவலைப்படாதே நீ தைரியமாய்ப். ..போ! எந்த மாதிரியான சூழ்நிலையிலும் நான் இருக்கிறேன் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் பெற்றோர் நடந்து கொண்டால் குழந்தைகளும் வாழ்வில் தேவையற்ற பய உணர்வின்றி தைரியசாலிகளாக இருப்பர்.
சுதந்திரம்:
குழந்தைகள் சுதந்திரமாக சில செயல்களை செய்யும்பொழுது சில தவறுகளும் நேர்வது உண்டு. அப்பொழுது அவர்களை பெற்றோர்கள் கண்டிப்பது உண்டு. கண்டிப்போடு நிறுத்திக்கொள்ளாமல், நல்ல செயல் செய்ததை நினைவுகூர்ந்து பாராட்டினால் உச்சி குளிர்ந்து போய் பெற்றோரிடமே அதற்கு தீர்வு கேட்டு நடந்து கொள்வதுடன் அது குழந்தைகளின் எதிர்கால வாழ்வினை பிரகாசமாய் அமைத்துத் தரும். அடுத்த காரியத்தை மிகவும் உற்சாகமாக செய்வர். பிற்காலத்தில் இந்த குழந்தைகள் பெற்றோர்களிடம் மிகுந்த பாசத்துடனும், மரியாதைடனும் நடந்துகொள்வார்கள்.
புரிய வைத்தல்:
வாழும் காலத்தில் அன்பையும், பாசத்தையும் புறக்கணித்துவிட்டு ஓர் ஆதிக்க மனப்பான்மையுடன் சகலரிடம் வாழ்ந்து வந்தவர்கள் தான் பிறகு அன்பிற்கும் பாசத்திற்கு ஏங்கி தவிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். ஆதலால் செய்யக்கூடாத விஷயத்தை குழந்தைகள் செய்ய முற்படும்போது, ஏன் அதுபோன்ற செயல்களை செய்யக்கூடாது என்பதை குழந்தைகள் புரிந்துகொள்ளும் வண்ணம் பெற்றோர்கள் எடுத்து இயம்பி புரியவைத்து நடந்துகொண்டால், பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் குழந்தைகளும் நடந்துகொள்வர்.
பழக்க வேண்டியது:
சேமிப்பை, செலவு செய்வதை, ஒழுக்கத்தை, நாவடக்கத்தை, முடிந்துபோன விஷயங்களுக்கு கவலைப்படுவதை விட்டொழிக்க, பிடித்த கலைகளை கற்றுத்கொள்ள, மற்றவர்கள் பேசுவதை கேட்க, வயதுக்கு மீறிய பேச்சை தவிர்க்க, இயற்கையை நேசிக்க, அவற்றை சுத்தமாக வைத்திருக்க, இறை நம்பிக்கையை போற்ற, நன்றி சொல்லல், மன்னித்தல் போன்றவற்றை குழந்தைகளுக்கு கட்டாயமாகக் கற்றுக் கொடுத்துவிட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஆயிரம் உபதேசங்களை விட பெற்றோர்களது ஒரு நல்ல செயல் குழந்தைகள் மனதில் ஆணித்தரமாக பதியும். ஆதலால் பெற்றோர்களது வாழ்க்கை முறையையே படிப்பினையாக ஏற்றுக் கொண்டு குழந்தைகளும் அவ்விதமே நல்லெண்ணங் களுடனும், பரந்த மனப்பான்மையுடனும் வளர்வர் என்பதால் பெற்றோர்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.