

உச்ச நீதிமன்றம் நாய்க்கடி மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஆக்கபூர்வமான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. ஆனாலும் மறுபுறம் நாய் பிரியர்கள் இதற்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். செல்லப்பிராணிகளாக (Pets) நாய்களை வளர்ப்பது பெரும் பாலானோரின் மன அழுத்தத்தை குறைக்கிறது. அந்த வகையில் செல்லப்பிராணிகள் மூலம் முதலீடே இல்லாமல் சம்பாதிப்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
வாக்கிங் அழைத்துச் செல்வது
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்ல பிராணிகளாக வீட்டில் நாய்களை வளர்க்கின்றனர். இதில் வயதானவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பப்பியை வெளியில் வாக்கிங்அழைத்துச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.அவர்களது வீட்டிற்கே சென்று பப்பியை அழைத்து வாக்கிங் செல்லும் போது வருமானம் கிடைப்பதோடு பப்பிக்கு மட்டுமல்ல நமது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
நாய்களின் மனநிலையைப் புரிந்துகொள்வது
நாய்களை வாக்கிங் அழைத்துச் செல்லும்போது பப்பிகளின் மன நிலையை அறிந்து கொண்டு, புதிய இடங்கள், புதிய மனிதர்கள், புதிய சூழ்நிலைகளை அறிமுகப்படுத்துவதால் வீட்டிற்குள்ளேயே அடைபட்டு கிடந்திருக்கும் பப்பிக்கு உற்சாகம் பிறந்து நம்மை கண்டதும் தாவி குதித்து வரும். இது பப்பியின் உரிமையாளர்கள் நம்மீது நம் சேவையின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் ஒரு செயலாகும். குறிப்பிட்ட ஒரு இடத்தில் இந்த சேவையை தொடங்கினால் நாளடைவில் இதனை விரிவுபடுத்தி நிறைய சம்பாதிக்கலாம்.
குரூமிங் செய்வது
அதிக முதலீடு தேவைப்படாத ஒரு சிறந்த வேலையாகும். குரூமிங் கற்றுக் கொண்டால் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று பப்பியை அழகு படுத்துவதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.
செல்ல பிராணிகளை வாங்கிக்கொடுப்பது
வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு சர்வீஸ் செய்ய செல்லும்போது அவர்கள் வீட்டில் குட்டி பப்பி பிறந்திருந்தால் அதனை தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு விற்பதன் மூலம் குறிப்பிடத் தகுந்த அளவு வருமானம் பெற முடியும்.
பகல் நேர பராமரிப்பு
வாடிக்கையாளர் காலை வேலைக்கு சென்று மாலை திரும்புவராக இருந்தால், பகல் நேரத்தில் பப்பியை பராமரிக்கும் பொறுப்பை ஏற்பதன் மூலம் குறிப்பிடத் தகுந்த வருமானத்தை ஈட்டலாம்.
செல்லப்பிராணி புகைப்படம் எடுத்தல்
நீங்கள் புகைப்படம் எடுப்பதில் வல்லவராக இருந்தால் செல்லப்பிராணிகளுடன் வாடிக்கையாளர்கள் இருக்கும் புகைப்படத்தை நினைவாக வைத்துக்கொள்ள திறம்பட எடுத்துக் கொடுப்பதன் மூலமும் வருமானம் சம்பாதிக்கலாம்.
செல்லப்பிராணி பயிற்சி
செல்ல பிராணிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு முக்கியத்துவமும் தேவையும் அதிகரித்துள்ளதால் இதில் திறன் பெற்றவராக இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் செல்ல நாய்கள் கீழ்படிவதற்கு உதவி புரிந்து வருமானம் ஈட்டலாம்.
சம்பாதிப்பது இத்துறையில் சுலபமாக இருந்தாலும் செல்லப் பிராணிகள் வளர்க்கும் சேவை துறையில் நிலைத்திருக்க லாப நோக்கத்தை தவிர செல்லப் பிராணிகளின் நலனில் கூடுதல் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் இருந்தால் மட்டுமே ஜொலிக்க முடியும். மேலும் முன் அனுபவம் தேவை . இல்லையெனில் பப்பியிடம் கடி வாங்குவது உறுதியாகிவிடும்.