அடடா தேங்காய் சட்னி! - ருசி குறையாத ஒரு ரசனைப் பயணம்!

Tasty coconut chtney
Tasty coconut chtney
Published on

தேங்காய் சட்னி அரைத்து முடித்த அடுத்த வினாடி முதல் ஊசிப்போக ஆரம்பிக்கும். திறந்திருந்தால் அதன் ஆயுள் ஒரு மணிக்கும் குறைவே. சாப்பிடுவதற்கு ஐந்து நிமிடங்கள் முன் அரைப்பதே உத்தமம்.

தேங்காய் ரொம்ப முற்றி இருக்கக்கூடாது. எண்ணெய் வாசனை வந்துவிடும். ரொம்ப இளசு கொழ கொழ என ஆக்கிவிடும். அரைக்காய், முக்கால் காயே சிறப்பு. அது விடும் பால் ருசிக்கு மெருகு.

புது பச்சை மிளகாய் சிறப்பு. காய்ந்த மிளகாயிலும் அரைக்கலாம். சட்னி சிவப்பாய் இருக்கும். அது தனி ருசி. இஞ்சி சிறிது, பூண்டு ஒரு பல் சேர்க்கலாம். அது ஒரு தனி வாசனை ருசி. ஆனால் கட்டாயமில்லை.

மல்லித்தழை, வதக்கிய தக்காளி, வதக்கிய பெரிய வெங்காயம், புதினா சேர்த்தும் தனியாகவும் அரைக்கலாம். அது உங்கள் தேர்வு.

பொட்டுக்கடலை புதிதாக மொறு மொறுப்பாக இருந்தால் சுவை கூடும். 1:1 என்பது பொட்டுக் கடலை, தேங்காய் துருவல் சரியான விகிதம். தேங்காய் குறைந்தாலும் கூடினாலும் சுவை மாறும்.

கல் உப்பு போட்டு மிக்ஸியில் சேர்த்து மிதமான பதத்தில் அரைக்கணும். ரொம்ப மசிந்து பேஸ்ட் ஆயிடக்கூடாது. தாளிதம் பதம் மிக முக்கியம்.

ஓரு இரும்புக் கரண்டியில் நல்லெண்ணெய் காயவிட்டு புகை வரு முன் உளுத்தம் பருப்பு போட்டு சிவந்த பின் பெருங்காயம் சின்ன கட்டி போட்டு பொரிந்ததும் கடுகைப் போடணும். கடைசியில் கரு வேப்பிலை இலைகளைக் கிழித்துப் போடணும்.

கடுகு பொரியணும். வெடித்து அடங்கும். ஒரு காய்ந்த மிளகாயைக் கிள்ளி விதையுடன் போடலாம் வாசனை கூடும். தீய விடக்கூடாது.

அதை சட்னி அரைத்த கிண்ணத்தில் கவிழ்க்கவும். உடன் கலக்க வேண்டாம். சாப்பிடும்போது கலக்கிக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
10 நிமிஷத்துல லஞ்ச் ரெடி! காய்கறி சாப்பிடாத கிட்ஸை ஏமாத்த இதுதான் பெஸ்ட் வழி!
Tasty coconut chtney

கிண்ணத்தில் இளம் பச்சை நிற சட்னியில் தாளிதம் கறுப்பாக எண்ணெய் புடை சூழ பார்க்கவே ரம்மியம். இதையே கெட்டியாக அரைத்தால் அது துவையல். தண்ணீர் வேண்டும் அளவு விட்டு கரைக்க. தண்ணீர் குறைவா கெட்டிச் சட்னி. கூடினால தட்டில் ஓடும். ஆனால் ருசி தேயாது.

இட்லி சூடாக இருக்க இந்த சட்னியை ஓட விட்டு தொட்டு சாப்பிட அடடா…

சட்னியில் காரம் சிறிது தூக்கலாகத்தான் இருக்கணும். காரம் ஆகாதவர்கள் சிறிது நல்லெண்ணெய் விட்டு குழப்பிக் கொள்வார்கள். நல்லாதான் இருக்கும். சாம்பார் ஒரு ஓரத்தில் தட்டில் இருக்க சட்னியும் சாம்பாரும் கங்கை யமுனை அலகாபாத்தில் கலக்குமே.

சட்னியின் பொரிந்த உளுத்தம் பருப்பு பல்லில் பட்டு உடைவது ஒரு டேஸ்ட். சட்னி சிறிதளவே மிச்சம் என்ற நிலையில் வழித்துத் தனியே சாப்பிட்டு விடலாம். பழைய சோறு அல்லது தயிர் சாதத்துக்கும் நல்ல காம்பினேஷன்.

இந்த சட்னியை தாளித்ததும் தக்காளி நசுக்கி விட்டு கொதிக்க விட்டு பட்டை சாமான் சோம்பு போட்டு இறக்க அது தனி ரெசிபி… தனி சுவை.

ஒரு காரட் வதக்கி அரைத்தால் ஆரஞ்சு கலரில் அழகாக இருக்கும். ஹாலிவுட் சட்னி. சில சமயம் தேங்காய் லேசாக ஒரு ஓரத்தில் அழுகி இருக்கும். தேங்காய் விற்கும் விலையில் தூக்கியா போடமுடியும்.

அழுகிய பகுதியை நீக்கிவிட்டு திருவி வதக்கி அரைக்கலாம். ஆனாலும் அழுகின வாசனை லேசாய் இருக்கத்தான் செய்யும். விலையை நினைத்து காம்ப்ரமைஸ் செய்து சாப்பிடவும்.

இதையும் படியுங்கள்:
பீட்சா கடைகளில் கிடைக்கும் சில்லி ஃபிளேக்ஸ் ரகசியம் இதுதான்... இனி காசு கொடுத்து வாங்காதீங்க!
Tasty coconut chtney

தேங்காய் திருவுவது ஒரு கடினமான வேலை. பொதுவாக அம்மணிகள் அந்தப்பணியை கணவரிடம் அல்லது சர்வெண்ட்டிடம் ஒப்படைப்பர்கள்.

சர்வெண்ட் திருவி முடித்து கொட்டாச்சியை தனியே பேக் செய்து எடுத்துப்போனாள். இரண்டு ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறார்களாம் இப்போது.

ஒரு குண்டான் சாம்பார் ஃப்ரிட்ஜில் வைத்து அம்மணி ஒரு வாரம் சூடு பண்ணி பரிமாறும் வித்தை சட்னியிடம் பலிக்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com