ஒரு நொடி அலட்சியம்... பேரழிவு! உங்க குழந்தைக்கு இந்த 'வாழ்க்கைப்பாடம்' சொல்லிக் கொடுத்துவிட்டீர்களா?

சாலை பாதுகாப்பு - Traffic Awareness Kids,
சாலை பாதுகாப்பு - Traffic Awareness Kids,
Updated on

ள்ளிக்குச் செல்லும் ஏழு வயது சிறுவன், தாயின் கையை விடுத்து திடீரென சாலையைக் கடக்க ஓட, இருசக்கர வாகனம் நெருங்கியபோதும் அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் மூலம், நடைபாதை, வரிக்குதிரைக் கடவை, ஹெல்மெட், சீட் பெல்ட், மொபைல் பயன்பாடு, மழைக்கால ஆபத்துகள், தெரு விலங்குகள் போன்ற சாலைப் பாதுகாப்பு விதிகளை பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கைக் கல்வியாக கற்பிக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்படுகிறது.

பள்ளிக் குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு – பெற்றோர்களும் ஆசிரியர்களும் கற்றுக் கொடுக்க வேண்டிய வாழ்க்கைப் பாடம்.

சமீபத்தில், ஒரு காலை, பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் எனது கிளினிக் முன்பு ஒரு சம்பவம் நடந்தது. சுமார் ஏழு வயது சிறுவன், பள்ளிப் பையை முதுகில் சுமந்தபடி தன் தாயின் கையை விடுத்து, திடீரென சாலையைக் கடக்க ஓடினான். அதே நேரத்தில் ஒரு இருசக்கர வாகனம் வேகமாக வந்தது.

நல்லவேளையாக வாகன ஓட்டி திடீரென பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்தச் சிறுவன் எதுவும் நடக்காததுபோல பள்ளிக்குச் சென்றுவிட்டான். ஆனால் சில நொடிகள் தாமதமாக பிரேக் பிடித்திருந்தால், அந்தக் குடும்பத்தின் வாழ்க்கையே மாறியிருக்கும்.

அந்தச் சம்பவம் எனக்கு ஒரு விஷயத்தை மீண்டும் நினைவூட்டியது. பள்ளிக் கல்வி எவ்வளவு முக்கியமோ, சாலைப் பாதுகாப்புக் கல்வியும் அதே அளவு முக்கியம்.

குழந்தைகள் நடந்து பள்ளிக்குச் சென்றாலும், மிதிவண்டியில் சென்றாலும், பள்ளிப் பேருந்தில் அல்லது காரில் பயணித்தாலும், சாலை விதிகளை சிறுவயதிலிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும்.

நடைபாதை இருந்தால் அதிலேயே நடக்க வேண்டும். நடைபாதை இல்லையெனில், எதிரே வரும் வாகனங்களைப் பார்த்தபடி சாலையின் ஓரமாக நடக்க வேண்டும்.

சாலை பாதுகாப்பு - Traffic Awareness Kids,
சாலை பாதுகாப்பு - Traffic Awareness Kids,AI Image

சாலையைக் கடக்கும்போது முதலில் வலது – இடது – மீண்டும் வலது என்று பார்த்து, வாகனங்கள் இல்லையென்பதை உறுதி செய்த பிறகே கடக்க வேண்டும். இயன்றவரை வரிக்குதிரைக் கடவை (Zebra Crossing), மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதையைப் பயன்படுத்த வேண்டும்.

இன்றைய குழந்தைகளுக்கு இன்னொரு ஆபத்து கைப்பேசி. சாலையைக் கடக்கும்போது மொபைலில் பேசுதல், காதில் ஹெட்போன் அணிதல் அல்லது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டே சாலையைக் கடத்தல் போன்றவை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

பள்ளிப் பேருந்தில் ஏறும்போதும் இறங்கும்போதும் அவசரப்படாமல் வரிசையில் நிற்கவேண்டும். பேருந்து முழுமையாக நின்ற பிறகே ஏறவும் இறங்கவும் வேண்டும். ஜன்னல் வழியாக கை, தலை அல்லது உடலின் எந்தப் பகுதியையும் வெளியே நீட்டக்கூடாது.

இதையும் படியுங்கள்:
கால்கள் நூறு... வேகம் தாறுமாறு... இந்த பூச்சியை நிரந்தரமா துரத்த இதுதான் சிம்பிள் டெக்னிக்!
சாலை பாதுகாப்பு - Traffic Awareness Kids,

காரில் பயணம் செய்தால் இருக்கைப் பாதுகாப்புப் பட்டை (Seat Belt) கட்டாயம். இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தால், ஓட்டுபவர் மட்டுமல்ல, பின்னால் அமர்ந்திருக்கும் குழந்தையும் தலைக்கவசம் அணிய வேண்டும். மிதிவண்டி ஓட்டும் குழந்தைகள் பிரேக், மணி, விளக்கு ஆகியவை சரியாக உள்ளனவா என்பதை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.

மழைக்காலங்களில் கூடுதல் கவனம் தேவை. தேங்கிய மழைநீருக்குள் திறந்த சாக்கடை அல்லது பள்ளம் மறைந்திருக்கலாம். மழையில் வாகன ஓட்டிகளின் பார்வை குறைவாக இருக்கும் என்பதால், வெளிர் நிற ஆடைகள் அல்லது பிரதிபலிப்பு (Reflective) பட்டைகள் கொண்ட மழைக்கோட்டுகளை அணிவது பாதுகாப்பை அதிகரிக்கும். இடியுடன் கூடிய மழையின்போது அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் அருகே செல்லவே கூடாது.

நமது சாலைகளில் மாடுகள், நாய்கள், ஆடுகள் போன்ற விலங்குகள் திடீரென குறுக்கே வருவது வழக்கம். அவற்றைக் கல்லெறிந்து விரட்டவோ, சீண்டவோ கூடாது. குறிப்பாக தெருநாய் குரைத்தால் ஓடாமல் அமைதியாக நின்று மெதுவாக விலகிச் செல்வதே பாதுகாப்பானது.

கடைசியாக ஒரு வேண்டுகோள்…

குழந்தைகள் நாம் சொல்வதைவிட, நாம் செய்வதைத்தான் அதிகமாகக் கற்றுக்கொள்கிறார்கள். பச்சை விளக்கு எரிந்தால் மட்டுமே சாலையைக் கடக்கும் பெற்றோர், தினமும் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டும் ஆசிரியர், எப்பொழுதும் சீட் பெல்ட் அணியும் பெரியவர்கள், இவர்கள்தான் குழந்தைகளின் முதல் 'பாடப்புத்தகம்'.

இதையும் படியுங்கள்:
குழாய்களில் உள்ள நீர்க் கறைகளை நீக்க முடியவில்லையா? அலுமினிய ஃபாயில் போதும்!
சாலை பாதுகாப்பு - Traffic Awareness Kids,

சாலைப் பாதுகாப்பை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பது ஒரு பாடம் அல்ல… அது அவர்களுடைய உயிரைக் காப்பாற்றும் வாழ்க்கைக் கல்வி.

பாதுகாப்பான குழந்தைகளே, பாதுகாப்பான சமூகத்தின் அடித்தளம்.

சாலையில் நடக்கும் எதிர்பாராத விபத்துகளில் இருந்து உங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்து, எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் பதற்றமின்றிப் பாதுகாப்பாகப் பயணிக்கக்கூடிய தன்னம்பிக்கையை அவர்களுக்கு வழங்கும்.

உங்கள் குழந்தைகள் தினமும் பள்ளிக்குச் சென்று பத்திரமாக வீடு திரும்புவதை உறுதிசெய்வதுடன், அவர்களைச் சமூகப் பொறுப்புள்ள, சாலை விதிகளை மதிக்கும் சிறந்த குடிமக்களாக மறுவடிவமைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com