
உங்கள் வீட்டு வரவேற்பு அறை, ஷோகேஸ் பொருட்களை பார்த்து, பார்த்து போரடித்து விட்டதா? பழைய ஷோ பீஸை மாற்ற நேரம் வந்தாச்சு என நினைச்சுக்குங்க.
உங்களுக்கு சீராக வந்த, பித்தளை, வெண்கல பொருட்கள் லாஃப்டில் தூசி படிந்து உபயோகிக்க முடியாமல் உள்ளதா? உபயோகிக்க ஆசை இருந்தும் யார் அதை விளக்கி, பளபளப்பாகவே வைத்திருப்பது என மலைக்கிறீர்களா? வாங்க உங்களுக்காகவே இந்த யோசனை.
கவலையை விடுங்கள். கொஞ்சம் நேரம் மட்டும் ஒதுக்கினால் போதும். பரணில் உள்ள பித்தளை சாமான்களை எடுத்துக்கொண்டு அதில் ஷோ பீஸாக வைக்கக் கூடியதை நன்றாக கழுவவும்.
அப்படியெல்லாம் என்னால் கழுவ முடியாது என நினைத்தால் பாத்திரக் கடையில் பாலீஷ் போட்டு வாங்கிக் கொள்ளுங்கள். இப்போது பார்த்தால் நீங்களே மலைத்துப் போவீர்கள். அவ்வளவு பளிச்சென்று அழகாக மின்னும்.
வீட்டில் முதல் முறை கழுவும் போது பளபளப்பாக வராது. மனம் தளராமல் இரண்டு, மூன்று முறை கழுவிவிட பாத்திரம் பளிச்சென்று இருக்கும். இதை துடைத்து விட்டு வெயிலில் வைத்து எடுக்க ஷோ பீஸாக நீண்ட நாள் பளபளப்பாக இருக்கும்.
நம்மிடம் உள்ள பாத்திரத்தில் பித்தளை சொம்பு, தவலை, டம்ளர், விளக்கு என தனித்தனியாக பிரிக்கவும். பின்னர் பித்தளை தவலை, குவளைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி ஹாலின் மூலையிலோ, நடுவிலோ வைத்து அதன் மேல் பிளவர் வாஸையோ, ஃப்ரெஷ்ஷாக பூக்களையோ வைக்க சூப்பராக இருக்கும்.
படி, மரக்கால் என இருப்பதை இதே போல் அரேஞ்ச் செய்து மேலே பூக்களையோ, கடிகாரத்தையோ, சுவாமி சிலை, சுவாமி படங்களையோ வைக்க அம்சமாக இருக்கும். வீட்டிற்கே தனி கலை வந்துவிடும்.
இவ்வாறு பித்தளை பொருட்களை ஹாலில் கார்னரில் வைப்பதால் அழகோடு, சட்டென எடுக்க வேண்டிய டார்ச் லைட், சாவிகள், ஏதேனும் ஸ்டேஷனரி பொருட்களை போட்டு வைக்க உதவியாக இருக்கும்.
பிளெயின் பித்தளை, வெண்கல பாத்திரம் எனில் அதில் ஆர்ட் ஏதாவது வரைந்து வைக்கலாம். ஹேண்ட் ஒர்க்காக பெயிண்ட், வேறு கை வேலை செய்து வைக்க நன்றாக இருக்கும்.
இதை பார்க்கும் போது உங்கள் கை வண்ணத்தில் பொருட்கள் மின்னுவதை கண்டு மனம் மகிழ்ச்சியும், வருவோர் பாராட்டும் போது உங்களுக்கு மனநிறைவோடு கூடுதல் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
பித்தளை டம்ளரை பாலீஷ் பண்ணி தினசரி உபயோகத்திற்கு வைக்கலாம். அது வேண்டாம் என நினைத்தால் சாமி படங்கள் முன்போ, ஷோ கேஸிலோ வரிசையாக அடுக்கி வைக்க சூப்பராக இருக்கும்.
தேவையில்லை என கொடுத்தால் பாதி காசு கூட வராது. அந்த விலைக்கு இந்த பொருளை இப்போது வாங்கவும் முடியாது. ஆன்டிக் பொருட்களை கஸ்டமைஸ் செய்து உபயோகிக்க அல்லது அலங்கரிக்க தனி சந்தோஷத்தை தரும். நம் வீட்டை தனித்துவமாக அலங்கரித்து உள்ளோம் என்ற மனநிறைவு மகிழ்ச்சியைத் தரும்.