

ஒருவர் எவ்வளவு விலை உயர்ந்த ஆடை அணிந்து மிடுக்காக காட்சி தந்தாலும் அவர் அணிந்திருக்கும் ஷு வில் அழுக்கு கரை, இல்லாமல் இருந்தால்தான் தோற்றம் முழுமை பெறும்.
எவ்வளவு விலை உயர்ந்த அல்லது மலிவான ஷூக்களாக இருந்தாலும் அதில் தூசி, மண், களிமண் மற்றும் பிற அழுக்குகள் ஒட்டுவது இயல்பானதுதான். ஷூக்களை கைகளால் துவைப்பது சரியான முறை என பலரும் நினைக்கின்றனர். ஆனால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் ஷூக்களை வாஷிங்மெஷினில் பாதுகாப்பாகவும், எளிதாகவும் சுத்தம் செய்ய முடியும் என்பது நிபுணர்களின் கூற்றாக உள்ளது.
அந்த வகையில் வாஷிங்மெஷினில் ஷூக்களை துவைக்கும் போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. ஷூக்களை வாஷிங்மெஷினில் போடுவதற்கும் முன்பாக உலர்ந்த பிரஷ் கொண்டு ஷூக்களில் ஒட்டி இருக்கும் கரைகள், மண் முதலியவற்றை அகற்றுவதோடு அதனுடைய மேற்பரப்பை மெதுவாக தேய்த்து தூசிகளை அகற்றவேண்டும்.
2. பிறகு ஆழமான கறைகளை நீக்க ஷூ லேஸ்களை அகற்றிவிட்டு வெள்ளை வினிகர் அல்லது பேக்கிங் சோடாவை தண்ணீருடன் கலந்து பேஸ்ட்டாக்கி அதில் பஞ்சை நனைத்து கறை உள்ள இடங்களில் தடவி விட்டு சில நிமிடங்கள் கழித்து பல் துலக்கும் பிரஷ் கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.
3. ஷூ லேஸ்கள் மற்றும் அவற்றின் உட்புறம் அகற்றக் கூடியதாக இருந்தால் அவற்றை தனியாக எடுத்து சோப்பு நீரில் ஊறவைத்து கைகளால் சுத்தம் செய்வது நல்லது.
4. வாஷிங் மெஷினில் ஷூக்கள் மோதுவதையும் கிழிவதையும் தடுக்க மென்மையான தலையணை உறை அல்லது நெட் பையில் கட்டி வாஷிங் மிஷினில் போடவேண்டும்.
5. ஷூக்களின் வடிவம் மாறும் அபாயத்தை குறைக்க சூடான நீர் மற்றும் அதிவேக ஸ்பின் மோடு பயன்படுத்தாமல் குளிர்ந்த அல்லது லேசான வெந்நீரை பயன்படுத்தி 'ஜென்டில்' அல்லது 'டெலிகேட்' மோடு தேர்வு செய்யவேண்டும்.
6. வாஷிங்மெஷினில் ஷூக்களை துவைக்கும் போது எடையை சமநிலைப்படுத்த சாயம் போகாத பழைய துணிகள் சேர்த்து துவைப்பதோடு, குறைந்த அளவு திரவ டிடர்ஜென்ட் பயன்படுத்துவதுவதால் ஷூக்களின் மீது சோப்பு படியாமல் பாதுகாக்கப்படும்.
7. வாஷிங் மெஷினில் உள்ள ட்ரையரின் அதிக வெப்பம் ஷூக்களின் வடிவத்தையும், ஒட்டும் பொருட்களையும் கெடுக்கும் என்பதால் டிரையரில் ஷூக்களை ஒருபோதும் போடக்கூடாது என்பது நிபுணர்களின் எச்சரிக்கையாக உள்ளது.
8. ஷூக்களை உலர்த்த அவற்றின் உள்ளே பழைய செய்தித்தாள்களை நுழைத்து நேரடி வெயிலில் வைக்காமல் நிழலான இடத்தில் காற்றோட்டமாக 24 மணி நேரம் வைத்து உலர்த்துவது சிறந்தது.
9. தோலால்(லெதர்) செய்யப்பட்ட ஷூக்களையும் நெகிழ்வு பொருட்களால் செய்யப்பட்ட ஷூக்களையும் வாஷிங்மெஷினில் போடாமல் கைகளால் சுத்தம் செய்வதே பாதுகாப்பானது.
10. மேலும் ஷூக்களின் லேபிள் மேல் கொடுக்கப்பட்டுள்ள பராமரிப்பு வழிமுறைகளின்படி துவைப்பதுதான் சரியான முறை.
மேற்கூறிய சரியான முறைகளை பயன்படுத்தி ஷூக்களை வாஷிங்மெஷினில் சுத்தம் செய்யும்போது பழைய ஷூக்களும் புதிது போல பிரகாசமாக மாறும்.