அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு: ரோஜா செடியை அழிக்கும் 'அதிக நீர்' ஆபத்து!

rose plant care tips
rose plant care tips
Updated on

லகம் முழுவதும் மிகவும் விரும்பப்படும் மலர்களில் ரோஜாவுக்கு தனி இடம் உண்டு. அதன் மணமும், வண்ணமயமான பூக்களும் எந்தத் தோட்டத்தையும் அழகுபடுத்துகின்றன. ஆனால் ரோஜா செடிகள் ஆரோக்கியமாக வளரவும், அதிக பூக்களைத்தரவும் சரியான அளவு தண்ணீர் அவசியம். ரோஜா செடிகளுக்கு மண் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். அதே நேரத்தில் அதிக தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது. தண்ணீர் அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

தண்ணீர் ஊற்ற சிறந்த நேரம்

ரோஜா செடிகளுக்கு அதிகாலை நேரத்தில் தண்ணீர் ஊற்றுவது சிறந்தது. இந்த நேரத்தில் ஊற்றப்படும் தண்ணீர் மண்ணில் நன்றாக உறிஞ்சப்படும். மேலும் இலைகளில் படிந்திருக்கும் ஈரம் சூரிய ஒளியால் விரைவாக காய்ந்துவிடும். மாலை அல்லது இரவு நேரத்தில் தண்ணீர் ஊற்றினால், இலைகளில் நீர் நீண்ட நேரம் தங்கி பூஞ்சை நோய்கள் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும்.

வாரத்திற்கு எவ்வளவு தண்ணீர்?

நன்கு வளர்ந்த ரோஜா செடிகளுக்கு வாரத்திற்கு சுமார் 1 முதல் 2 அங்குலம் வரை தண்ணீர் போதுமானது. புதிதாக நட்ட செடிகளுக்கு முதல் சில வாரங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் கொடுக்கவேண்டும். தொட்டிகளில் வளர்க்கப்படும் ரோஜா செடிகள் விரைவாக காய்ந்துவிடும். எனவே வெயில் காலங்களில் தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் தேவைப்படலாம்.

தண்ணீர் தேவையை பாதிக்கும் காரணங்கள்

சூரிய ஒளி

ரோஜா செடிகள் தினமும் குறைந்தது ஆறுமணி நேரம் நேரடி சூரிய ஒளி பெறவேண்டும். அதிக வெயில் கிடைக்கும் இடங்களில் மண் விரைவாக காய்ந்து விடுவதால் அதிக தண்ணீர் தேவைப்படும்.

மண் வகை

மணல் நிறைந்த மண் தண்ணீரை அதிக நேரம் தக்கவைக்காது. எனவே அடிக்கடி நீர் பாய்ச்சவேண்டும். களிமண் வகை மண் நீரை நீண்ட நேரம் தக்கவைக்கும் என்பதால் குறைவான இடைவெளியில் நீர் ஊற்றினால் போதும்.

இதையும் படியுங்கள்:
வீட்டுத் தோட்டத்தில் ரோஜா பூத்துக் குலுங்க... இதோ ஒரு மேஜிக் இயற்கை உரம்!
rose plant care tips

வெப்பநிலை

கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும் போது செடிகளின் தண்ணீர் தேவை கூடும். மழைக்காலம் அல்லது குளிர்காலத்தில் நீர்ப்பாய்ச்சலைக் குறைக்கலாம்.

சரியான நீர்ப்பாய்ச்சல் முறை

ரோஜா செடிகளின் வேர்ப்பகுதியில் மெதுவாக தண்ணீர் ஊற்ற வேண்டும். இலைகள் மற்றும் பூக்கள் மீது நேரடியாக நீர் படாமல் கவனிக்க வேண்டும். ஆழமாக நீர் ஊற்றுவது வேர்கள் ஆழமாக வளர உதவும். மேலும் செடியைச் சுற்றி 2 முதல் 3 அங்குலம் அளவுக்கு உலர்ந்த இலைகள் அல்லது இயற்கை மூடாக்கு (Mulch) போடலாம். இது மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்கும்.

அதிக தண்ணீர் கொடுத்தால் என்ன ஆகும்?

இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல், பூக்கள் குறைதல், வளர்ச்சி மந்தமாதல், வேர்கள் அழுகுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும். பூஞ்சை நோய்களும் அதிகரிக்கலாம்.

தண்ணீர் குறைந்தால் என்ன ஆகும்?

இலைகள் வாடி உதிரும். பூ மொட்டுகள் உதிரலாம். மண் வெடித்து காய்ந்துபோகும். கடுமையான வெயிலில் இலைகள் கருகியதுபோல் தோன்றும்.

அதிக மொட்டுகள் பெற சரியான உரமிடல்

ரோஜா செடியில் அதிக மொட்டுகள் உருவாக, சத்துக்கள் நிறைந்த மண் மிகவும் அவசியம். மாதத்திற்கு ஒருமுறை நன்கு மக்கிய தொழுஉரம், மண்புழு உரம் அல்லது இயற்கை கம்போஸ்ட் சேர்ப்பது செடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். பூக்கும் காலங்களில் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் நிறைந்த உரங்களை அளவாக கொடுத்தால் புதிய மொட்டுகள் அதிகமாக தோன்றும். மேலும் காய்ந்த பூக்களை உடனுக்குடன் அகற்றுவதால் செடி புதிய பூ மொட்டுகளை உருவாக்க தனது சக்தியை பயன்படுத்தும்.

வெயில், நீர் மற்றும் கவாத்து அவசியம்

ரோஜா செடிகளுக்கு தினமும் குறைந்தது 6 மணி நேரம் நேரடி சூரிய ஒளி கிடைக்கவேண்டும். போதுமான வெயில் இல்லையெனில் மொட்டுகள் குறையும். மண் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்படி தண்ணீர் வழங்கவேண்டும்; ஆனால் நீர் தேங்கி நிற்கக் கூடாது. அதேபோல் பழைய, நோயுற்ற மற்றும் உள்ள்நோக்கி வளரும் கிளைகளை அவ்வப்போது கவாத்து (Pruning) செய்வது புதிய கிளைகள் வளர உதவும். புதிய கிளைகளில்தான் அதிக அளவில் மொட்டுகளும் மலர்களும் உருவாகும் என்பதால், முறையான கவாத்து ரோஜா செடியில் பூப்பிடிப்பை பல மடங்கு அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
செம்மண் முதல் தேங்காய்ப் பால் வரை: எளிய பராமரிப்பில் மல்லிகைச் செடி!
rose plant care tips

ரோஜா செடிகளின் அழகும் ஆரோக்கியமும் சரியான நீர்ப்பாய்ச்சலில்தான் உள்ளது. மண்ணின் ஈரப்பதத்தை அவ்வப்போது பரிசோதித்து, தேவையான அளவு தண்ணீர் வழங்கினால் ஆண்டு முழுவதும் செழிப்பான மலர்களை ரசிக்கலாம். “அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு” என்ற பழமொழிபோல், ரோஜாவிற்கும் தண்ணீரை அளவாக வழங்குவதே வெற்றிகரமான தோட்டக்கலையின் ரகசியமாகும்.

logo
Kalki Online
kalkionline.com