

இயற்கை உரங்களால் கொத்து கொத்தாக பூக்கும் மல்லிகைச்செடி வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கப்படும் பூச்செடிகளில் மல்லிகைக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. காலையில் வாசலில் பரவும் மல்லிகை மணமும், மாலை நேரத்தில் பூத்துக் குலுங்கும் வெண்மையான மொட்டுகளும் வீட்டுக்கு ஒரு இனிய உயிரோட்டத்தை தருகின்றன. ஆனால் பலரின் வருத்தம் என்னவென்றால், “செடி நன்றாக வளர்கிறது. ஆனால் குறைவான பூக்கள் மட்டும் பூக்கின்றன!” என்பதுதான்.
உண்மையில் மல்லிகை செடி செழித்து பூக்க சில எளிய பராமரிப்பு முறைகளே போதுமானவை. சரியான மண், கவாத்து, இயற்கை உரம் ஆகிய மூன்றையும் முறையாக செய்தால், ஒரு செடியே ஏராளமான பூக்களைத் தரும்.
மண் தேர்வே முதல் ரகசியம்
மல்லிகை செடி வளர்ப்பில் மண் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. செம்மண் கலந்த மண் அல்லது வண்டல் மண் கலவையில் மல்லிகை சிறப்பாக வளரும். நர்சரியில் இருந்து செடிகளை வாங்கும் போது, மண் கெட்டியாகவும், வேர் நன்றாகப் பிடித்தும் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும்.
மண் மென்மையாகவும், தண்ணீர் வடிகால் வசதியுடனும் இருந்தால் செடி வேகமாக துளிர்விடும். பெரிய தொட்டியிலோ அல்லது தரையிலோ நட்டால் செடி மேலும் செழித்துவளரும்.
கவாத்து செய்தால் துளிர் பெருகும்
மல்லிகை செடி உயரமாக மட்டுமே வளர்ந்தால் பூக்கள் குறையும். எனவே செடி மூன்று அடி உயரம் வளர்ந்தவுடன் அதன் நுனியை வெட்டி விட வேண்டும். இதுவே “கவாத்து” எனப்படும். இவ்வாறு வெட்டிவிட்டால், பக்கவாட்டில் இருந்து புதிய கிளைகள் உருவாகும். இந்தப் புதிய துளிர்களில்தான் அதிக மொட்டுக்கள் தோன்றும். பூக்களைப் பறித்த பின்பும் சிறிய கிளைகளை வெட்டிவிடுவது நல்ல வளர்ச்சிக்கு உதவும்.
இயற்கை உரங்களின் அதிசயம்
மல்லிகை செடிக்கு வீட்டிலேயே தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் மிகச் சிறந்த பலனை தருகின்றன. கருப்பு உளுத்தம் பருப்பு பொடி, வெந்தயம், கடுகு போன்றவற்றை அரைத்து 15 அல்லது 20 நாட்களுக்கு ஒருமுறை மண்ணில் தூவலாம். காய்கறி கழிவுகளை மக்க வைத்து கொடுத்தாலும் செடி செழிப்பாக வளரும்.
அதேபோல் வெங்காயத்தோல், வேப்பம் புண்ணாக்கு, எலுமிச்சை தோல் ஆகியவற்றை தண்ணீரில் ஊறவைத்து தயாரிக்கும் கரைசலும் செடிக்கு நல்ல ஊட்டச்சத்தாக அமைகிறது. வீட்டில் பயன்படுத்திய டீத்தூள் மற்றும் காபித்தூளை வெயிலில் காயவைத்து மாதத்திற்கு ஒருமுறை மண்ணில் சேர்த்தால் மண்வளம் அதிகரிக்கும்.
மல்லிகை செடிக்கான கூடுதல் பராமரிப்பு
மல்லிகை செடியின் அடிப்பகுதியைச் சுற்றி சிறிய பள்ளம் அமைத்து, அதில் நன்கு மக்கிய மாட்டுச்சாணம் அல்லது வெர்மி கம்போஸ்ட் சேர்த்து தண்ணீர் ஊற்றினால் புதிய துளிர்கள் வேகமாக உருவாகும். பொட்டாசியம் சத்து அதிகமுள்ள உரங்களை இடைவெளி வைத்து பயன்படுத்தினால் மொட்டுக்கள் அதிகரிக்கும். டி.ஏ.பி (DAP) உரத்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது. மேலும், மண்ணை அடிக்கடி ஈரப்பதத்துடன் வைத்திருப்பதோடு, நீர் தேங்கி நிற்காமல் கவனித்தால் செடியின் வேர் ஆரோக்கியமாக இருந்து நீண்ட நாட்கள் செழித்து பூக்கும்.
“தேமோர் கரைசல்” – மொட்டுகளின் மந்திரம்
மல்லிகை செடியில் கொத்து கொத்தாக மொட்டுக்கள் வர உதவும் சிறந்த இயற்கை ஊட்டச்சத்து “தேமோர் கரைசல்”. ஒரு டம்ளர் புளித்த மோருடன் ஒரு டம்ளர் தேங்காய்ப் பாலை சேர்த்து நன்றாகக் கலக்கவேண்டும். இதை ஒரு வாரம் மூடி வைத்துக் கொண்டு தினமும் ஒருமுறை கலக்கவேண்டும். பிறகு, ஒரு பங்கு கரைசலுடன் ஐந்து பங்கு தண்ணீர் கலந்து இலைகளின் மேல் தெளிக்க வேண்டும். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இவ்வாறு தெளித்தால் செடியில் ஏராளமான மொட்டுக்கள் தோன்றத்தொடங்கும்.
சூரியஒளியும் தண்ணீரும் அவசியம்
மல்லிகை செடி நல்ல சூரியஒளி கிடைக்கும் இடத்தில் இருக்க வேண்டும். நிழலான இடங்களில் வைத்தால் வளர்ச்சி மந்தமாகும். உரம் கொடுத்த பிறகு போதுமான தண்ணீர் ஊற்றுவதும் அவசியம். மேலும், 20 நாட்களுக்கு ஒருமுறை மண்ணை மெதுவாக கிளறிவிட்டால் காற்றோட்டம் அதிகரித்து வேர் நன்றாக வளரும்.
மணம் பரப்பும் மகிழ்ச்சி
மல்லிகையின் மணத்தை விரும்பாதவர்கள் எவரும் இல்லை என்பார்கள். பெண்களின் கூந்தலிலிருந்து வீட்டு வாசல்வரை அதன் நறுமணம் ஒரு தனி மகிழ்ச்சியை தருகிறது. அதனால்தான் பலர் வீட்டுத்தோட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு மல்லிகைச் செடியையாவது வளர்க்க விரும்புகின்றனர். தினமும் சில பூக்கள் பூத்தாலே மனதில் ஒரு இனிய மகிழ்ச்சி மலரும்.
மல்லிகைச்செடி என்பது வெறும் அழகும் வீட்டுக்கு மகிழ்ச்சியும் மணமும் பரப்பும் செடி. சிறிது அக்கறை, சரியான பராமரிப்பு மற்றும் இயற்கை உரங்களின் உதவியால், உங்கள் வீட்டு தோட்டமும் வெண்மணக்கும் மல்லிகைப் பூக்களால் நிரம்பிப் போகும்.
அக்னி நட்சத்திரம் முடிந்து மழைக்காலம் தொடங்கிவிட்டது. இப்போது உங்கள் மல்லிகைச் செடிகளை கவாத்து செய்ய ஏற்ற நேரம். கத்தரியை எடுத்துக் கவாத்து செய்துவிடுங்கள், விரைவில் உங்கள் மல்லிகைச்செடி கொத்து கொத்தாக பூத்து மணம் பரப்பத் தொடங்கும்.