
பள்ளிப் பருவ குழந்தைகளைக் கையாளும்பொழுது சில பெற்றோர்கள் எப்பொழுதும், ‘அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே, அப்படிச் செய், இப்படிச் செய்’ என்று கூறிக்கொண்டே இருப்பார்கள். இதனால் குழந்தைகள் தடுமாறிப் போவதும், குழப்பம் அடைவதும் உண்டு. அவற்றை எதிர்கொண்டு எப்படி அவர்களை சுதந்திரமாக செயல்பட வைக்கலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
குழந்தைகள் காலையில் எழுந்து குளித்து, சிற்றுண்டி சாப்பிட்டு, மழைக்காலம் என்றால் குடை, உணவு எடுத்துச் செல்வது போன்றவற்றை அவர்களாகவே செய்து கொள்ளுமாறு வழி வகுத்து விட வேண்டும். அவர்கள் அவற்றை ஒரு நாள் எடுத்துக் கொண்டு செல்லாமல் சென்றாலும் விட்டுவிட வேண்டும். நாம் எடுத்துக் கொடுத்தால் அடுத்த நாளும் நாம் உதவுவோம் என்று நினைப்பார்கள். அப்படியே விட்டுப் பாருங்கள். அடுத்த நாள் அனைத்தையும் எடுத்து வைக்க மறக்க மாட்டார்கள். மழைக்காலத்தில் குடை கட்டாயம் தேவை என்பது அறிந்து எடுத்து வைத்துக் கொள்வார்கள். இது போன்ற சுதந்திரத்தை நாம் அவர்களுக்குக் கொடுத்து விட்டால் பொறுப்புள்ளவர்களாக மாறுவார்கள்.
அதேபோல், சிலர் வீட்டுப்பாடங்களை வீட்டில் செய்யாமல் விளையாடிவிட்டு, பள்ளியில் கிடைக்கும் இடைவேளை நேரத்தில் செய்வதைப் பார்க்கலாம். அப்போது வேலைப்பளு அதிகரிக்கும். ஓய்வும் குறையும். நேரமும் மிகவும் குறுகியதாக இருக்கும். அப்பொழுது தனது செயலுக்கும், ஏற்பட்ட விளைவுக்கும் இடையில் உள்ள தொடர்புகளை பிள்ளைகள் சுலபமாக விளங்கிக் கொண்டு, அடுத்த நாளிலிருந்து சரியான நேரத்தில் வீட்டிலேயே பாடங்களைச் செய்யப் பழகிக் கொள்வார்கள். அதற்கு பதிலாக ஒரே வார்த்தையை 100 வரை எழுதச் சொல்வது, முட்டி போட வைப்பது போன்றவற்றை செய்வது கால விரயம். இன்றைய காலத்துக்கு இது போன்ற செயல்களும் ஒத்து வராது. சில பெற்றோர்கள் இன்னும் அதை கடைபிடிக்கிறார்கள். அவற்றை விட்டு விட வேண்டும்.
ஏதோ ஒரு ஷாப்பிங் மால் செல்கிறோம். நாம் பொருட்களைப் பார்த்து எடுத்துக் கொண்டிருக்கும்பொழுது நம் பிள்ளைகள் மற்றவர்களுக்கு இடைஞ்சலாக தாறுமாறாக அங்குமிங்கும் ஓடித் திரிவது, தொந்தரவு செய்வது போன்றவை இருந்தால் அவர்களுக்கு அதுபோல் செய்யக் கூடாது என்பதையும், எந்த இடத்தில் நிதானமாக நிற்க வேண்டும் என்பதையும் கூறி அந்த இடத்தில் நிற்க வைக்கலாம். அப்பொழுது அடுத்த முறை தவறு செய்யாமல் நடந்து கொள்வார்கள்.
எல்லோரும் எல்லா சந்தர்ப்பங்களிலும் வெற்றி அடைய முடியாது. யாரும் தோல்விகளை விரும்புவதில்லை. பலவிதமான முயற்சிகள் மேற்கொள்ளும்போது அனுபவங்கள் மூலம் வெற்றி, தோல்வி என்பது சாதாரணமாக அமைந்துவிடும். விளையாட்டில், தேர்வில், நேர்முகப் பரீட்சையில், பாட்டுக் குழுவில், நாடகத்தில், பேச்சு, எழுத்துப் போட்டியில் பரிசு கிடைக்காமல் பல பிள்ளைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டால், ஒருவித கவலையுடன் சோர்வாக, தனிமையை நாடி அமர்ந்திருப்பார்கள்.
அப்பொழுது, ‘எதிலும் பங்கு பெறுதல்தான் முக்கியம். ஒருவர் தன்னைத்தானே வெற்றிக் கொள்வதுதான் வெற்றி. தோற்கத் தயாரானவனை யாராலும் ஜெயிக்க முடியாது’ என்பதைத் தெளிவாக குழந்தைகளுக்குத் தெரிவித்து, வெவ்வேறு வழிகளில் எப்படி எல்லாம் முயற்சி செய்யலாம் என்பதைக் கூறி தெளிவுப்படுத்தினால், அவர்கள் தெளிவாக சிந்திக்க ஆரம்பிப்பார்கள்.
பிள்ளைகள் தாங்களாகவே தவறுகளைத் திருத்த சந்தர்ப்பங்களைக் கொடுத்து, பிழைகளைத் திருத்தும்போது அது தொடர்பான கேள்விகளைக் கேட்டு சிந்தனையைக் கிளறி விட்டால், அது புதிய பாதையைக் காட்டும்.