ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண்தான் இருக்கிறாள் என்பாா்கள். அது உண்மைதான். அதேநேரம் ‘ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே’ என்ற பழமொழியும் உண்டு. எதையும் வெல்லக்கூடிய, எளிதில் சமாளிக்கவல்ல பொிய யுக்தி பெண்களிடம் உள்ளது. இப்போது பல குடும்பங்களில் நிலவும் மாமியாா், மருமகள் பிரச்னை விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் இல்லாத காரணங்களால், ஒருவரை ஒருவர் புாிந்துகொள்ளாத காரணங்களாலேயே ஏற்படுகின்றன.
ஒரு தாயாா் தனது மகனை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து, படிக்க வைத்து, ஆளாக்கி, தனது தாய்ப்பாசம் முழுவதையும் கொட்டி அன்பு பாராட்டி வளா்க்கிறாள். இது அனைத்து குடும்பங்களிலும் நடக்கும் விஷயம்தான். மகன் படிப்பு முடித்து வேலைக்குச் செல்ல வேண்டும் என வேண்டாத தெய்வம் இருக்காது. அதனைத் தொடர்ந்து அவனுக்கு நல்ல குடும்பப் பெண்ணாக அமைய வேண்டும் என கோயில் கோயிலாய் பிராா்த்தணைகளும் உண்டுதானே.
அப்படிப் பாா்த்துப் பாா்த்து ஒரு பெண்ணை திருமணமும் செய்து வைக்கிறாள். அதன் பிறகு அவளுக்கு இரண்டு ரோல். ஒன்று தாய், மற்றொன்று மாமியாா். முதல் ரோல் அவளது ஆசாபாசங்கள் அடங்கியது. இதில் எதிா்பாா்ப்புகள் கூடுதலாகவே வளரும். இது அநேக குடும்பங்களில் உள்ளது! அடுத்த ரோல் மாமியாா். இங்கேதான் ஆரம்பமாகிறது ‘ஈகோ.’ எங்கே தனது மகன் தன்னை வெறுத்துவிடுவானோ, நம்மை உதறித்தள்ளிவிடுவானோ என்ற பயம் மேலோங்குகிறது.
ஏறக்குறைய 23 ஆண்டுகள் தாய், தந்தை, சகோதரன், சகோதரி, பொியப்பா, சித்தப்பா என அனைவரோடும் சந்தோஷமாய் வாழும் பெண்ணிற்கு திருமணத்துக்குப் பிறகு மனதளவில் ஒரு பயம் வரத்தான் செய்யும். பிறந்த வீட்டை விட்டு, திருமண பந்தத்தின் கீழ் வரும் பெண் தனக்கென தனது கணவன் இருக்கிறான், இனி எல்லாமும் அவன்தான் என்ற கனவுகளோடு புகுந்த வீட்டில் நுழைகிறாள். அங்கே அவள் எதிா்பாா்ப்பு நிறைவேறுகிறதா என்றால் பல குடும்பங்களில் இந்த விஷயம் கானல் நீராகி விடுகிறது. நாத்தனாா், மாமியாா், கொழுந்தன் இப்படி பலரும் மருமகளை மாற்றுப்பெண்ணாக பாா்ப்பதும் துவங்கிவிடுகிறது. இதற்குத் தீா்வுதான் என்ன? அனுசரித்துப்போவதே சிறந்த வழியாகும்.
முதலில் அவளை தமது குலம் தழைக்க வந்தவள், அவளும் நமது குடும்பத்தில் ஒருத்தி என்ற மனப்பக்குவத்தை வளா்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல மருமகளும், மாமியாரை தனது தாயாா் போல பாவிக்க வேண்டும். அதுதான் விஷயமே. மாமியாரும் ஒரு காலத்தில் மருமகளாக இருந்துதான் மாமியாராக பிரமோஷன் பெற்றுள்ளாா்.
குடும்பத்தில் மனம் விட்டுப் பேசுங்கள். குறைகள் இருந்தால் அன்பாய் எடுத்துச்சொல்லுங்கள். மகன், மருமகள் இருவரும் பேசிக்கொள்ளும்போது குறுக்கே நிற்காதீா்கள். மாமியாரானவள், மருமகளிடம் தன்னுடைய குடும்ப நிலைபாடுகளை பக்குவமாய் எடுத்துச் சொல்லுங்கள். யாா் யாருக்கு என்ன வகை உணவு பிடிக்கும் போன்ற விஷயங்களை எடுத்துக் கூறுங்கள். மற்றவர்களோடு ஒப்பிட்டு பேசாதீா்கள். பரஸ்பரம் அன்பை செலுத்துங்கள். வீட்டு வேலைகளை பகிா்ந்து கொள்ளுங்கள். மருமகளின் உறவுகளுடன் நன்கு பேசச் சொல்லுங்கள். நாத்தனாா்களும் தனது தம்பி, அல்லது அண்ணன் மனைவி நம் வீட்டு மருமகள் என்ற நிலைப்பாட்டுடன் பழகுவதே நல்லது. அவளுக்கு என்ன பிடிக்கும் என்பதையும் கேட்டு மகனிடம் சொல்லி தேவையிருப்பின் வாங்கித் தரச் சொல்லுங்கள். அடுத்த வீட்டு பெண்மனி மற்றும் பக்கத்து வீட்டு, எதிா் வீட்டுப் பெண்கள், தோழிகள் வந்தால் மருமகளை அவர்களிடம் விட்டுக் கொடுக்காதீா்கள். சமையல்கட்டை அவளது பொறுப்புக்கு விட்டு விடுங்கள்.
நாள், கிழமைகளில் வேலைகளைப் பிாித்துக்கொள்ளுங்கள். மாமியாா் வீட்டு சொந்த பந்தங்கள் வந்தால் அவர்களுடன் நன்கு பழகி, மனம் விட்டுப் பேச விடுங்கள். சமயம் கிடைக்கும்போது அருகில் உள்ள கோயிலுக்கு இருவரும் சென்று வாருங்கள். மாமியாா், மருமகள் இருவரில் யாருக்காவது உடல் நலம் சாியில்லாமல் போனால், பரஸ்பரம் மருத்துவ உதவிகளை மேற்கொள்வது நல்ல புாிதலைக் கொடுக்குமே!
மகன், மறுமகள் சண்டையில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம். அதேநேரம் இருவரையும் கூப்பிட்டு சமரசம் செய்து வையுங்கள். வீட்டுப் பொறுப்புகளை மருமகளிடம் கொடுத்துப்பாருங்கள். அதற்காக சொத்தை எழுதிக் கொடுக்கச் சொல்லவில்லை. அதேநேரம் மகன், மருமகள் இருவரும் நீங்கள்தான் எல்லாமும் என ஐக்கியமாகிவிட்ட நிலையில் ஏமாற்ற மாட்டாா்கள் என்ற நம்பிக்கை இருக்கும் நிலையில், அவர்களுக்கு எழுதிக்கொடுக்கலாம் தப்பில்லை. மகன் விரும்பினால், மருமகள் விரும்பினால் மருமகள் வேலைக்கும் போகலாமே. சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம், தொட்டதற்கெல்லாம் குற்றம் கண்டுபிடிப்பதை விட்டு விடுங்கள். ஒருவருக்கு ஒருவர் புாிந்துகொண்டு விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே சண்டைச் சச்சரவுகள் குறைய வாய்ப்புகள் அதிகம்.
முடிவாக, வாழ்க்கையை புாிந்து வாழ்ந்தால் பிரிவுக்கே வேலையில்லை. அனுசரித்துப் போனால் அநாவசிய பிரச்னையே இல்லை. வாழ்க்கை இறைவன் கொடுத்த வரம். அதை அன்பால் வாழ்ந்து காட்டுவோம்.