நாம் எவ்வளவு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டாலும் சில சமயம் ஒழுங்காக ஜீரணம் ஆகாமல் பல உடல் நலப் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எனவே, செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். செரிமான கோளாறின் அறிகுறிகள் நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், வாயுத் தொல்லை, நாள்பட்ட மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, குமட்டல் அல்லது வாந்தி ஏற்படுவது போன்றவை செரிமான கோளாறுகளின் அறிகுறிகளாக இருக்கலாம். இவற்றிற்கு நாம் செரிமானத்தை சீராக்கும் சில முக்கிய பழக்கங்களை கடைபிடிப்பது நல்லது. அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. முழு தானியங்கள் மற்றும் நட்ஸ்: கோதுமை, அரிசி, பார்லி, கம்பு, சோளம், ஓட்ஸ், குயினோவா போன்ற தானியங்கள் மற்றும் பாதாம், முந்திரி, அக்ரூட் போன்ற நட்ஸ் வகைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள செரிமானத்தை சீராக்க ஊக்குவிக்கும்.
2. பழங்கள், காய்கறிகள்: நார்ச்சத்து மிகுந்த உணவுகள் செரிமான அமைப்பை சீராக்க உதவும். நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது செரிமான பாதை வழியாக உணவை நகர்த்த உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்னையை தீர்ப்பதுடன், பல செரிமான பிரச்னைகளை தடுக்கவும் இவை உதவுகின்றன. வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த பழங்களையும், ஊட்டச்சத்து மிக்க பச்சை காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள நம்முடைய செரிமான சக்தி சீராகும்.
3. வெந்தயம்: வைட்டமின்கள் ஏ, சி, கே, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், போலிக் அமிலம் அதிகம் உள்ள இதனை அப்படியே சாப்பிடுவதை விட இரவு தண்ணீரில் ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதுடன், நார்ச்சத்தும் அதிகம் உள்ளதால் சாப்பிடும் அசைவ உணவுகளில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி செரிமானத்தை துரிதப்படுத்துகிறது.
4. சீரகம்: சீரகம், ஓமம் போன்றவை உணவுகளில் மணம் கூட்டுவதுடன், செரிமானத்தை எளிதாக்கவும் பயன்படுகிறது. இரைப்பை அலர்ஜியை குணமாக்குகிறது. நுண்தொற்றுக்களிடம் இருந்து இரைப்பையின் உட்பகுதியை காக்கிறது. நாள்பட்ட செரிமான கோளாறால் மலக்குடலில் ஏற்படும் இரத்தக்குழாய் வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது.
5. யோகாசனங்கள்: முறையான ஆசிரியரிடம் கற்றுக்கொண்டு செய்யும் யோகாசனங்கள் நம்முடைய செரிமான சக்தியை பலப்படுத்தும். யோகாசனம் செய்வது செரிமான நொதிகளை சீராக ஒழுங்குபடுத்தும்.
6. மூச்சுப் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி: மன அழுத்தம் இருந்தால் செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும். இதற்கு தகுந்த ஆசிரியரைக் கொண்டு பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளை கற்றுத் தேர்ந்து பழக வேண்டும். அத்துடன் தினமும் சிறிதளவாவது உடற்பயிற்சியும் செய்து வர உடலுக்குத் தேவையான ஆரோக்கியத்தைப் பெறலாம்.
7. தண்ணீர்: தண்ணீர், குறிப்பாக வெந்நீர் பருகுவதால் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் செயல்பாடு தூண்டப்படுகிறது. இதனால் மலம் இளகி மலச்சிக்கல் நீங்குவதுடன், வயிற்று வலி, வயிறு உப்புசத்தையும் போக்கும். உணவுக்கிடையே தண்ணீர் அருந்தினால் ஜீரணப் பிரச்னையை உண்டுபண்ணும். எனவே, சாப்பிட்ட பிறகு நீரைப் பருகுவது நல்லது. செரிமானத்திற்கு மிகவும் அவசியமான தண்ணீரை சாப்பிட்ட பிறகுதான் குடிக்க வேண்டும். இது செரிமானத்தை சீராக்கி உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
8. மூலிகை டீ: துளசி, புதினா, கற்பூரவள்ளி, இஞ்சி, ஏலக்காய் போன்ற பொருட்களைக் கொண்டு டீ தயாரித்து பருக அமில அளவை சமப்படுத்தி செரிமான பண்புகளை பலப்படுத்தும். உடல் வீக்கத்தை குறைப்பதுடன், உடலிலுள்ள அதிக கலோரிகளை எரிக்கவும் உதவும். கிரீன் டீயில் உள்ள பாலிபீனால் என்னும் ஆன்டி ஆக்சிடன்ட் கொழுப்பை ஆக்சிடைஸ் செய்கிறது. கிரீன் டீ அருந்துவதால் செரிமானம் எளிதாகும்.
9. உறக்கம்: சாப்பிட்டதும் உறங்குவதோ, படுப்பதோ கூடாது. சிறிது நேரம் காலாற நடந்து வர நம் ஜீரண உறுப்புகள் சரியாக இயங்கி செரிமானத்தை சீராக்க உதவும்.
10. எலுமிச்சம் பழச்சாறு: காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழச்சாறு கலந்து தவறாமல் பருகி வர வயிற்றில் இருக்கும் கழிவுகள் மற்றும் அளவுக்கு அதிகமான வாயுக்கள் போன்றவற்றை வெளியேற்றி செரிமானத்திற்கு வழிவகுக்கும்.