

நாளுக்கு நாள் கணிணி (கம்ப்யூட்டர்) மற்றும் இணையதளம் (நெட்ஓர்க்) போன்றவற்றைப் பயன்படுத்தி செய்யும் குற்றங்கள் நம் நாட்டில் அதிகரித்து வருகின்றன. இதனை சைபர் க்ரைம், டிஜிட்டல் ஸ்கேம் என்று கூறுகிறார்கள்.
2023ஆம் வருடம் சைபர் க்ரைம் செயல்பாட்டில் சிக்கியவர்கள் இழந்த தொகை 7465.18 கோடி ரூபாய்கள். இது மும்மடங்காகப் பெருகி 2024ஆம் வருடம் இழந்த தொகை 22845.73 கோடி ரூபாய்கள். 2025ஆம் வருடம் இணைய தளக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த தொகை ஒரு இலட்சம் கோடியைத் தாண்டக் கூடும் என்று கணித்திருக்கிறார்கள்.
நம் நாட்டில் டிஜிட்டல் கட்டண முறையில் பண பரிமாற்றம் செய்வது அதிகரித்து வருகிறது. 'யுபிஐ' என்ற 'ஒருமித்த கட்டண இடைமுகம்' மூலம் மொபைல் போன் உதவியுடன் வங்கிகளிடையே பணம் பரிமாற்றம் செய்வது இலகுவாக உள்ளது.
நிகழ் நேரத்தில் உடனே பணம் அனுப்பவும் இந்த செயலி உதவுகிறது. இதனால் வீண் அலைச்சல் தவிர்க்கப்பட்டு நேரம் மிச்சமாகிறது. ஆகவே, இந்த டிஜிட்டல் சேவைகளைப் பரவலாகப் பலரும் உபயோகித்து வருகின்றனர். ஆனால், இணையத்தைப் பற்றி சரியான புரிதலின்மை, டிஜிட்டல் பாதுகாப்பில் உள்ள ஓட்டைகள், செயற்கை நுண்ணறிவு துணையுடன் ஃபிஷிங் தாக்குதல், செயற்கை நுண்ணறிவின் உதவியில் உருவாக்கப்படும் ஆடியோ, வீடியோ படங்களுடன், மோசடிப் பேர்வழிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு பணம் அபகரிக்கின்றனர். நடைபெறும் இது போன்ற குற்றங்களைப் பற்றிய புரிதலிருந்தால், நாம் கவனத்துடனிருந்து அவர்கள் வலையில் விழாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். சில குற்ற வகைகளைப் பார்க்கலாம்.
1. போலியான அழைப்பிதழ் (Fake Wedding Invites): முன்பின் அறியாத நபர் வாட்ஸ் அப் செயலி மூலம் ஒரு கல்யாண அழைப்பிதழ் அனுப்புவார். யாருக்கு கல்யாணம் என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் நீங்கள் அழைப்பிதழை திறக்க முயற்சித்தால் அதிலுள்ள 'ஏபிகே' ஃபைல் (APK File), அழையா விருந்தாளியாக உங்கள் மொபைல் போனில் அமர்ந்து, நீங்கள் பதிவிட்டுள்ள வங்கிகள் சாஃப்ட்வேர் மற்றும் உங்களுக்கு வருகின்ற ஓடிபி ஆகியவற்றை கண்காணிக்க வழி செய்யும். ஆகவே, எக்காரணம் கொண்டும் முன்பின் அறியாதவர்கள் அனுப்புகின்ற பிடிஎஃப் ஃபைலை திறக்காதீர்கள். அதனை அழித்து விடுவது நல்லது. 'ஏபிகே' ஃபைல் என்பது ஆன்ட்ராய்ட் அப்பிளிகேஷன் பேகேஜ். சுருக்கப்பட்ட இந்த ஃபைல், இந்த அப்பிளிகேஷனை பயன்படுத்த தேவையான மென்பொருளை உள்ளடக்கியுள்ளது.
2. டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி (Digital Arrest Scam): இந்த மோசடிப் பேர்வழிகள் சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரிகள் என்ற போர்வையில் போன் அழைப்பின் மூலமாகவோ, குறுஞ்செய்திகள் மூலமாகவோ தொடர்பு கொள்வார்கள். 'நீங்கள் பணமோசடி செய்துள்ளீர்கள் அல்லது இணைய தளக் குற்றங்களில் சம்பந்தப்பட்டிருப்பதால் விசாரணை வளையத்தில் இருக்கிறீர்கள்; ஆகவே உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாகச் சொல்லி, அதிலிருந்து தப்புவதற்கு பணம் கொடுக்கச் சொல்லி மிரட்டுவார்கள்'. போலி ஆவணங்களை வைத்து பயமுறுத்துவார்கள். டிஜிட்டல் அரெஸ்ட் என்ற ஒன்று இல்லவேயில்லை. அவர்களிடத்தில் அதிகம் பேசாமல் போனை வைத்து விட்டு சைபர் குற்றங்களை கவனிக்கும் நபருக்கு போன் செய்யுங்கள்.
3. சட்டவிரோத பார்சல்கள் (Illegal Parcels): கூரியர் நிறுவனத்தைச் சேர்ந்தவர் அல்லது அமலாக்கத்துறை அதிகாரிகள் என்று சொல்லி, உங்களுக்கு பார்சல் வந்திருப்பதாகச் சொல்வார்கள். அதில் சில பிரச்சனைகள் இருப்பதாகச் சொல்லி, உங்களுடைய நிதி தகவலை அறிந்து, பணம் திருட முயற்சிப்பார்கள். நீங்கள் பார்சல் எதுவும் எதிர்பார்க்கவில்லை என்றால் தேவையற்ற பேச்சுகளில் ஈடுபடாதீர்கள். உங்கள் நிதித் தகவல் எதையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
4. அவசர அழைப்பு (Emergency Call Scams): இரண்டு விதமாக இந்த மோசடி நடைபெறுகிறது. உறவினர்கள் அல்லது நண்பர்கள் பெயரில் அழைத்து, உடனடியாக பண உதவி தேவைப்படுவதாகக் கூறுவார்கள். பணம் அனுப்புவதற்கு லிங்க் பகிர்ந்து கொள்வார்கள். அந்த லிங்க் உங்கள் வங்கிப் பணத்தை கபளீகரம் செய்து விடும். இதைப் போன்ற அழைப்பு வந்தால், அந்த நண்பர் அல்லது உறவினரை அழைத்துப் பேசுங்கள். சில நேரங்களில், பொது இடத்தில் உங்களுக்கு முன் பின் அறிமுகம் இல்லாத நபர், அவசரமாகப் பேச வேண்டும் என்று மொபைல் போன் கேட்பார்கள். நீங்கள் அறியாமல் உங்கள் வங்கி விவரங்கள் அறிந்து, ஓடிபி பெற்று, வங்கி கணக்கிலிருந்து பணம் திருட முயற்சிப்பார்கள். முடிந்தவரையில், அறியாத நபருக்கு மொபைல் கொடுக்காதீர்கள். உதவி செய்ய விரும்பினால், அவர்களிடம் மொபைல் எண் கேட்டு அழையுங்கள்.
5. ட்ராய் ஆள்மாறாட்ட மோசடி (TRAI Impersonation Scam): இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) அதிகாரி என்று கூறிக் கொண்டு அன்னிய தேச எண்ணிலிருந்து மோசடி பேர்வழி கூப்பிடுவார். உங்கள் போன் எண் உடனடியாகத் துண்டிக்கப்படும் என்று மிரட்டுவார். இதைத் தடுப்பதற்கு பணம் அனுப்பித் தரச் சொல்லி வற்புறுத்துவார். முன் பின் தெரியாத அயல் நாட்டு எண்ணிலிருந்து அழைப்பு வந்தால், இணைப்பை துண்டித்து விடுங்கள்.
6. வைப்புத் தொகை மோசடி (Jumped Deposit Scam): உங்கள் வங்கிக் கணக்கிற்கு யுபிஐ மூலமாக, சிறிதளவு பணப்பரிமாற்றம் செய்வார்கள். பின்பு, உங்களை தொடர்பு கொண்டு தவறுதலாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியதாகக் கூறி, திருப்பி அனுப்ப லிங்க் அனுப்புவார்கள். அந்த லிங்க்கை அழுத்தி அவருடைய யுபிஐ பின் எண்ணை பதிவு செய்தால் உங்கள் வங்கியிலிருந்து பணம் அவருடைய வங்கிக்கு போய் விடும்.
7. பங்குச் சந்தை முதலீடு மோசடி (Stock Market Investment Scam): நிதி ஆலோசகர்கள் என்று கூறிக் கொண்டு, உங்களை அவர்களின் முதலீட்டு குழுவில் சேரும் படி ஆலோசனை சொல்வார்கள். அதை நம்பி முதலீடு செய்தால், உங்கள் பணம் விரயம். இலாபத்திற்கு ஆசைப்பட்டு இந்த வலையில் விழாதீர்கள்.
8. வீட்டிலிருந்து வேலை (WFH Scams): அதிகம் நடைபெறுகின்ற மோசடிகளில் ஒன்று. வீட்டில் இருந்த படியே பகுதி நேர வேலை செய்யலாம். சுலபமான வேலை. சம்பளம் அதிகம் என்று வலை வீசுவார்கள் மோசடி மன்னர்கள். இந்த வேலையில் சேருவதற்கு உங்கள் விவரங்களைக் கேட்டு அறிந்து கொள்வார்கள். சேருவதற்கு முன் பணம் கேட்பவர்களும் உண்டு. வேலையைப் பற்றி விவரமாகச் சொல்லத் தெரியாமல், அதிக சம்பளம் என்று ஆசை காட்டுபவர்களை நம்பாதீர்கள்.
9. KYC மோசடி (KYC Scams): வங்கி அலுவலர் அல்லது அரசு அலுவலர் என்று கூறிக் கொண்டு உங்களுடைய KYC – வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்; விவரம் சரியில்லை என்று அவர்கள் அனுப்புகின்ற லிங்கில் விவரங்களை நிரப்பச் சொல்வார்கள். அதைச் செய்யவில்லை என்றால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று எச்சரிப்பார்கள். அவர்கள் சொல்வதில் பயந்து அந்த லிங்கில் விவரங்கள் அளித்தால், பணம் இழக்க நேரிடும். நேராக வங்கிக்குச் சென்று சரிபார்த்துக் கொள்வது நல்லது.
ஏமாறுபவர்கள் இருந்தால் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள். நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இணையதளக் குற்றங்களுக்கு உதவி தேவைப்பட்டால் அணுக வேண்டிய எண் 1930.