சராசரி மனிதர்களை விட கூடுதல் புத்திசாலித்தனம் உடையவர்கள் தனித்துவமான சில பண்புகளை வெளிப்படுத்துபவர்களாய் இருப்பதுண்டு. அவற்றில் எட்டு வகையான பண்புகள் எவை என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. அதீத ஆர்வம் (Curiosity): புதுப் புது விஷயங்களைக் கற்றுத் தெளிவதில் அவர்கள் காட்டும் ஆர்வம் பிரமிக்க வைப்பதாயிருக்கும். பல வகையில் கேள்விகளைக் கேட்டு, தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை முழுமையாகப் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள்.
2. சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளுதல் (Adaptability): எந்தவிதமான சூழலுக்கும் தன்னைப் பொருந்துமாறு மாற்றிக்கொண்டு வளைந்து கொடுக்கும் தன்மையுடையவராய் இருப்பது புத்திசாலிகளின் மற்றொரு சிறப்பு. சவால்களை வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களாய் ஏற்று செயல்பட ஆரம்பிப்பர்.
3. திறந்த மனதுடையவராய் இருப்பது (Open mindedness): ஒரு பிரச்சினையை வெவ்வேறு கோணங்களில் அணுகவும் தேவைப்படும்போது தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளவும் தயாராக இருக்கும் திறந்த மனது உடையவர் அவர்கள்.
4. உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைப்பது: புத்திசாலிகள் தங்கள் உணர்வுகளை சிறந்த முறையில் கையாள்வதில் வல்லவர்கள். பரிதாபத்திற்குரியோரிடம் பச்சாதாபம் காட்டி அவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வார்கள்.
5. தன்னை அறியும் குணம் (Self awareness): புத்திசாலிகள் தங்கள் பலம், பலவீனம், எண்ண ஓட்டம் ஆகியவற்றை நன்கு புரிந்து கொண்டவர்களாயிருப்பர். இது அவர்களின் தொடர் வளர்ச்சிக்கு சிறந்த முறையில் உதவி புரியும்.
6. பிரச்சினைகளை சுலபமாக தீர்க்கும் திறன்: புத்திசாலிகள், எந்த ஒரு பிரச்சினையாயினும் அதன் தீவிரத்தை ஊடுருவி ஆராய்ந்து அதற்கு தகுந்த தீர்வு காண்பதில் திறமையுள்ளவர்களாய் இருப்பர்.
7. நகைச்சுவை உணர்வு: புத்திசாலிகளிடம் உள்ள நகைச்சுவை உணர்வானது, எந்த விதமான சிக்கலையும் இடையூறையும் லேசாக எடுத்துக்கொண்டு, அதை நேரடியாக அணுகுவதைத் தவிர்த்து மாற்று வழியில் சிந்திக்கவும் தகுந்த தீர்வை விரைவில் கண்டறியவும் உதவுகிறது.
8.பக்க சார்பற்ற பகுப்பாய்வு (Critical Thinking): அபாரமான புத்திக் கூர்மை உள்ளவர்கள் சூழ்நிலைகளை பகுத்தறிந்து, தர்க்க ரீதியாக தகவல்களை மதிப்பீடு செய்து, ஓர வஞ்சனை இல்லாமல் உண்மைக்கு சாதகமாக முடிவுகளை எடுப்பார்கள். ஒரு போதும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகிவிட மாட்டார்கள்.