
பெற்றோர்கள் அனைவருக்கும் தங்களது குழந்தைகள் அதிபுத்திசாலி குழந்தைகளாக இருக்க வேண்டும் என்பது பொதுவான விருப்பமாக உள்ளது. பள்ளிகள் மட்டும் குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை வளர்க்காது. அந்த வகையில், இரவு நேரங்களில் பெற்றோர்கள் குழந்தைகளிடம் பழக்கப்படுத்தும் விஷயங்கள் அவர்களை ஸ்மார்ட்டாக மாற்றும். அந்தப் பழக்கங்களை இப்பதிவில் காண்போம்.
வாசிப்புப் பழக்கம், சிந்திக்கும் திறனை வளர்த்தல்: குழந்தைகள் பள்ளியில் இருந்து திரும்பிய மாலை வேளையில், ‘இன்று பள்ளியில் என்ன நடந்தது’ என்பதை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். ‘இன்றைய நாள் உனக்கு மகிழ்ச்சியளித்ததா? என்னவெல்லாம் செய்தீர்கள்?’ என்று ஒவ்வொன்றாக குழந்தைகளுடன் பேசி கேட்கும்போது அவர்கள் பள்ளி நிகழ்வுகளை விலாவாரியாகவும், ஆர்வத்துடனும் சொல்ல ஆரம்பிப்பார்கள். அடுத்த நாள் நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டும் என்பதற்காகவே சில நல்ல விஷயங்களை சேகரித்துக் கூற முற்படுவார்கள்.
செஸ் போன்ற இன்டோர் கேம்களை குழந்தைகள் இரவில் சாப்பிடுவதற்கு முன்பு சொல்லிக் கொடுப்பதோடு, குழந்தைகளுக்கு முன்பு அமர்ந்து ஏதாவது புத்தகத்தை தினமும் பெற்றோர்கள் படிக்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். இதனால் குழந்தைகளும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்து புத்திசாலியாக மாறுவார்கள்.
புலம்பல் வேண்டாம்: புலம்புவது ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் செயலாக இருப்பதோடு, குழந்தைகளின் முன்பு புலம்புவது கூடாது. மாலை வேளைகளில் குழந்தைகளுடன் பேசும்போது உங்கள் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகளை குழந்தைகளிடம் ஞாபகப்படுத்தி பேசும்போது, வாழ்க்கையின் மீது குழந்தைகளுக்கு ஒரு பிடிப்பு வரும். பெற்றோர்கள் குழந்தைகளிடம் புலம்பினால் வாழ்க்கை கஷ்டமானது என நினைத்துக் கொண்டு குழந்தைகள் பாசிடிவாக சிந்திக்க மாட்டார்கள்.
டிவி மற்றும் கேஜட்டுகள்: இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பு குழந்தைகளுக்கு டிவி மற்றும் கெஜட்டுகள் கொடுப்பது அவர்களுடைய தூக்கத்தை கெடுப்பதோடு, கவனச் சிதறலையும் ஏற்படுத்திவிடும். வீட்டை விட்டு குழந்தைகளை வெளியே அனுப்ப பயந்து வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதற்காக மொபைல் போன்களை குழந்தைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
தூக்கம் மிகவும் முக்கியம்: குழந்தைகளின் உடல், மனம் இரண்டும் ஆரோக்கியமாக இருக்க நல்ல தூக்கம் முக்கியம் என்பதால் தூக்கத்தை முறைப்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் சென்று காலையில் சரியான நேரத்தில் எழுவது குழந்தைகளை புத்திசாலியாக்கும் விஷயங்களில் இன்றியமையாத பழக்கமாகும்.
வேறு என்னவெல்லாம் செய்யலாம்: அதிகமாக குறும்பு செய்யும் குழந்தைகளை விட, அமைதியாக இருக்கும் குழந்தைகளிடம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இரவில் தூங்குவதற்கு முன்பாக வெதுவெதுப்பாக நீரில் குளிக்க வைப்பதோடு, மெல்லிய இசைகளையும் கேட்கப் பழக்கப்படுத்த வேண்டும். அதோடு, சில ஆசனங்களை செய்ய வைப்பதால் குழந்தைகளின் தூக்கத்திறன் மேம்படும். ஏனெனில், நல்ல தூக்கமே நினைவுத்திறனை மேம்படுத்தி அவர்களை செயல்திறன் மிக்கவர்களாக மாற்றும்.
மேற்கூறிய இரவு நேர பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலம் அவர்கள் கற்கும் கல்வி விஷயங்களுடன் சேர்த்து இதையும் பழகிக் கொள்வார்கள். இதனால் அவர்களது சுறுசுறுப்பு அதிகமாகி திறமை மேம்பட்டு புத்திசாலி குழந்தைகளாக மாறிவிடுவார்கள்.