
ஒரு கார் நகர்த்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது வாரக்கணக்கில் அல்லது மாதங்கள் தாண்டி நிறுத்தப்பட்டிருந்தால் என்ன நடக்கும்? ஒரு வாகனத்தைத் தொடாமல் விட்டு விடுவது நம் செலவை மிச்சப்படுத்துகிறதா? அல்லது உண்மையான காரணம் வேறேதேனும் உள்ளதா? இப்படி நீண்ட நேரம் செயலற்ற நிலையில் இருப்பது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்குமா?
பயன்படுத்தப்படாமல் இருக்கும் கார்களில் உண்டாகும் தாக்கங்கள்:
ஒரு கார் பயன்படுத்தப்படாமல் இருக்கும் போது பல்வேறு பாகங்கள் மோசமடையத் தொடங்குகின்றன.
பேட்டரி (Battery Drain) - நீண்ட நாள் கார் உபயோகப்படுத்தாமல் இருந்தால் பேட்டரி மெதுவாக சார்ஜ் இழந்து அதை மாற்ற வேண்டிய சூழலுக்கு நம்மை கொண்டு சென்றுவிடும்.
டயர் (Tire Degradation) - டயர்கள் அதிக நேரம் ஒரே இடத்தில் ஒரே நிலையில் இருக்கும் போது டயரின் அடிப்பகுதி தட்டையாகிறது (flat spots). இது காரின் செயல்திறனை முற்றிலும் பாதிக்கிறது.
திரவ காலாவதி (Fluid Breakdown) - எண்ணெய் (parts Oil), எரிபொருள் (fuels), பிற திரவங்கள் நீண்ட நாள் ஓடாததால் முற்றிலும் சிதையலாம் அல்லது அந்தந்த இடத்தில் காய்ந்து ஒட்டிவிடும். இதுவும் காரின் ஒட்டுமொத்த செயல்திறனைக் குறைத்து தேய்மானத்தை அதிகரிக்கும்.
துரு மற்றும் அரிப்பு (Rust) - பருவ காலங்களில் ஈரப்பதம் காரின் பிறபகுதிகளில் துருவை ஏற்படுத்தும்.
பிரேக் (Brake Issues) - பிரேக் பட்டைகள் (Brake pads) கடினமாகிவிடும் (become stiff) அல்லது அதை மாற்ற வேண்டிய சூழலுக்கு கொண்டு சென்றுவிடும்.
ஓடுவது vs ஒரேயடியாக நிற்பது: எது நமக்கு அதிக செலவை கொடுக்கிறது?
அடிக்கடி பயன்படுத்தப்படும் காரில் எரிபொருள், எண்ணெய் மாற்றங்கள் மற்றும் நகரும் பாகங்களில் தேய்மானம் போன்ற வழக்கமான செலவுகள் ஏற்படும். இருப்பினும், செயலற்ற நிலையில் இருக்கும் ஒரு காரில் திடீர் விலையுயர்ந்த பழுதுபார்ப்புகள் தேவைப்படலாம். பேட்டரி மாற்றுதல், பிரேக் சர்வீசிங், டயர் மாற்றங்கள் மற்றும் பெரிய இயந்திர வேலைகள் கூட வரலாம்.
உங்கள் காரையும் பட்ஜெட்டையும் எப்படி நல்ல நிலையில் வைத்திருக்கலாம்
எப்போதாவது காரை ஸ்டார்ட் செய்யுங்கள் (Occasionally)- நீங்கள் அடிக்கடி கார் ஓட்டுபவராக இல்லை என்றாலும் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை என சில நிமிடங்கள் காரை இயக்குவது அதில் உள்ள திரவங்களை சுற்றுவதற்கு உதவுகிறது.
காரை நகர்த்தவும் - ஒரு குறுகிய ஓட்டம் (Short Distance) கூட டயர்கள் தட்டையாவதை தடுக்கிறது மற்றும் உள்ளிருக்கும் சம்பந்தமான பாகங்களை சிதையாமல் வைக்கிறது.
திரவ அளவைப் பராமரிக்கவும் (Maintain Fluid Levels) - எரிபொருள், கூலன்ட் மற்றும் எண்ணெய் தேவைக்கேற்ப நிரப்பப்பட வேண்டும் அல்லது தேவைப்படும் போது முற்றிலும் மாற்ற வேண்டும்.
ஈரத்திலிருந்து பாதுகாக்கவும் (Protect Against Moisture) - காரை ஈரம் இல்லாத பகுதியில் நிறுத்துங்கள். முடிந்தால் துருப்பிடிப்பதைத் தடுக்க பாதுகாப்பு அட்டைகளைப் (protective covers) பயன்படுத்தவும்.
செயலற்ற தன்மை அதிகப்படியான பயன்பாட்டைப் போலவே பல்வேறு சேதங்களை விளைவிக்கிறது. உங்கள் காரையும் பணத்தையும் பாதுகாப்பதற்கான சிறந்த வழி சமநிலையை ஏற்படுத்துவது தான்.
தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும் சிக்கல்களை தடுக்கவும் மேலே குறிப்பிட்ட இந்த பராமரிப்பைப் மேற்கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக ‘ஒரு கார் சாலைக்காக தான் உருவாக்கப்பட்டுள்ளது தூசி சேகரிப்பதற்காக அல்ல!’.