பிஞ்சிலேயே பழுத்த பழம் நன்றாக இருக்குமா?

child
child
Published on

'பிஞ்சிலேயே பழுத்து விட்டான், அவன் எங்க இனி உறுப்பட போறான்? தண்டமாகப் போகிறான்' என்றெல்லாம் சில குழந்தைகளை பார்த்து பெரியவர்கள் கூறுவதுண்டு. அப்படி ஏன் கூறுகிறார்கள்? கூறுவதின் நோக்கம் தான் என்ன?

இவற்றை எல்லாம் அப்புறம் பார்க்கலாம். முதலில் பிஞ்சில் பழுத்த ஒரு பழத்தை பற்றி ஆராய்வோம்...

நாம் ஒரு செடியை நட்ட பிறகு, அது நன்றாக வளர்ந்து மரமான பிறகு தான் பூக்கள் மலர ஆரம்பிக்கும். பிறகு அந்த பூ காயாகி அந்த காய் நன்றாக முதிர்ந்த நிலைக்கு வந்த பிறகே பழுக்கும். இது தான் இயற்கையாக பழுக்கும் முறை. அவ்வாறு பழுத்த பழங்கள் தான் சாப்பிடுவதற்கு சுவையாகவும், விரைவில் கெடாமலும் இருக்கும்.

ஒருவேளை சிறிய பிஞ்சு பழுத்து விட்டால், அது ருசியில்லாமல் இருக்கும். மேலும் அதன் உட்புறத்தின் சதை அழுகலாகவும் இருக்கும். அவ்வாறு பழுத்த பழத்தை தூக்கித் தான் எரிய வேண்டும். அது உபயோகமில்லாத பழம்.

சரி, அந்த பழம் அவ்வாறு ஏன் பிஞ்சிலேயே பழுத்தது? தானாகவே பழுத்ததா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை, சூழ்நிலைகளின் காரணமாக பழுத்து விட்டது. அவ்வாறு பிஞ்சிலேயே பழுப்பதற்கான காரணத்தை பார்ப்போமா...

1. அதிகமான வெயிலினால் ஏற்பட்ட தாக்கம்

2. போதிய நீர் இல்லாத காரணம்

3. போதிய ஊட்டசத்து இல்லாத காரணம்

4. அதிக நீர் பாய்ச்சியதால் அல்லது அதிக ஊட்டசத்து

5. மிகக் குறைவான‌ பராமரிப்பு.

இதில் எந்த தவறு இருந்தாலும் பிஞ்சிலேயே பழுக்க நேரிடும். ஆகவே பிஞ்சிலேயே பழுத்தது அந்த பழத்தின் பிழை அல்ல. தோட்டகாரனின் தவறு தான்.

சரி, இப்போது பிஞ்சிலியே பழுத்தவன்/வள் என்ற‌ சொல்லப்படும் குழந்தைகளை பற்றி பார்க்கலாம்...

ஒரு இளைஞனோ அல்லது இளைஞியோ வயதிற்கேற்ற‌ பண்பையும், நடத்தையையும் கடைபிடிக்காமல் வழி தவறி முறை தவறி நடக்கும் போது அக்குழந்தைகளை பெரியவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
பணமோ பதவியோ இல்லாமல் ஒருவர் சமூக அந்தஸ்தை பெற முடியுமா?
child

எந்தெந்த வயதில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அவ்வாறு தான் நடந்து கொள்ள வேண்டும். சில குழந்தைகள் அவ்வாறு நடந்து கொள்ளாமல் தன் இஷ்டத்திற்கு எதை வேண்டுமானாலும் செய்வார்கள். பெரியவர்களிடம் எதிர்த்து பேசுவார்கள். சொன்ன பேச்சை கேட்க மாட்டார்கள். இதன் விபரீத விளைவாக வழி தடுமாறி வாழ்க்கையில் சிதைந்தும் போய் விடுவார்கள். அந்த சூழ்நிலையில் வேண்டுமென்றே, 'நான் தான் சொன்னேனே, அது பிஞ்சிலேயே பழுத்து விட்டது, உறுப்படாது என்று, இன்றைக்கு உண்மையாகி விட்டது பார்த்தியா' என்று எரியும் நெருப்பில் இன்னும் கொஞ்சம் நெய்யை ஊற்றுவார்கள்.

சரி, இந்த குழந்தைகளின் இந்த நிலைமைக்கு யார் காரணம்? குழந்தைகளே இதற்கு முழு காரணமா? என்று ஆராய்ந்து பார்த்தால் நமக்கே உண்மை புரியும். எப்படி ஒரு மரத்தை சரியாக பராமரிக்கவில்லை என்றால் நல்ல பழம் கிடைக்காதோ, அதைப் போலத்தான் இதுவும். குழந்தைகளை நல்ல விதத்தில் பராமரிக்க வேண்டும். குழந்தைகளின் இந்த நிலைமைக்கான காரணங்களை பார்க்கலாம்:

1. அதிக கண்டிப்போடும் அடித்தும் திட்டியும் வளர்த்தல்

2. குழந்தைகள் உண்மையை சொல்ல பயம்

3. நான் சொல்வதை தான் செய்ய வேண்டும், சொல்வதை தான் படிக்க வேண்டும் என்கிற பெற்றோர்களின் வற்புறுத்தல்.

4. இராணுவத்தை போல் அதிகமான கட்டுபாடோடு வளர்த்தல்

5. மிகவும் செல்லமாக எதை கேட்டாலும் வாங்கி கொடுத்து வளர்த்தல்

6. அதட்டுதல் என்கிற செய்கையே இல்லாமல் எதற்கும் கண்டிக்காமல் வளர்த்தல்

7. பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு போவாதால் கண்டு கொள்ளாமல் விட்டு விடுதல்

8. வீட்டில் யாராவது முன்மாதிரியாக இருந்தால்

ஒரு குழந்தையை மிகவும் கண்டித்து அதிக கட்டுபாடோடு வளர்க்கும் போது அந்த குழந்தை உண்மையை கூற பயந்து கொண்டு பொய் பேச ஆரம்பித்து விடும். இத்தகைய கட்டுபாட்டில் பெண் குழந்தையாக இருந்தால் யாராவது அவளிடம் பொய்யான அன்பை பொழிந்தால் கூட நம்பி அந்த பையனோடு நட்பை வைத்து கொண்டு பிறகு ஏமாந்து நிற்பாள். ஆண் குழந்தையாக இருந்தால் கெட்ட நண்பர்களோடு சேர்க்கை வைத்து கொண்டு தீய வழக்கங்களுக்கு ஆளாகி விடுவார்கள்.

ஆகவே மிகவும் கண்டிப்போடு கரடுமுரடாக வளர்க்காதீர்கள். அதே சமயம் எதையுமே கேட்காமல் கண்டு கொள்ளாமல் திட்டாமல் இருக்காதீர்கள். தேவையான விஷயத்தில் அதட்டியே தீர வேண்டும். மெதுவாக அதட்டி தட்டி கொடுத்து புரிய வைக்கவும். பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு போகும் பட்சத்தில் வீட்டில் வேலை செய்பவர்களிடமோ அல்லது வீட்டிலிருக்கும் மற்ற உறுப்பினர்களிடமோ அல்லது பள்ளிக்கூடத்திலோ அவ்வப்போது குழந்தைகளை பற்றி விசாரியுங்கள். இல்லையென்றால் இரவு நேரத்தில் குழந்தைகளிடமே பேசுவதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். நம் குழந்தைகளின் எதிர்காலம் நம் கைகளில் தான் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
யானையின் பலம் தும்பிக்கையில்; மனிதனின் பலம் நம்பிக்கையில்... எப்படி?
child

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com