

இளைஞர்களே வாழ்க்கை என்பது ஒரு பெரிய போராட்டம்தான். அதுவும் குறிப்பாக இந்த பருவ வயதில் உங்களுக்கு யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ன செய்யவேண்டும் எதை சொல்லக்கூடாது என்றெல்லாம் ஒரு போராட்டம் மனதிற்குள் நடந்து கொண்டே இருக்கும். இதோ உங்களுக்கான முக்கியமான ஆறு point களை கூறுகிறேன். இவற்றை எப்போதும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பார்க்கலாமா அவைகள் என்னென்ன என்று…
எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்:
நம்முடைய வாழ்க்கையில் நம்மை சுற்றி இருப்பவர்கள் எல்லோரையும் நாம் மகிழ்விக்க வேண்டும் என்பது நம்முடைய பொறுப்பாகாது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒரு கருத்து இருக்கும். இவை எல்லாவற்றையும் அட்ஜஸ்ட் செய்து கொண்டு அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்பது நடக்காத காரியம். அடுத்தவர்கள் உங்களின் செய்கையினால் சந்தோஷமாக இல்லை என்றால் அதற்காக நீங்கள் பொறுப்பாக முடியாது.
உங்களுக்கு எது சந்தோஷமாக தோன்றுகிறதோ அதை செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த துறையை எடுத்து படியுங்கள். உங்களுக்கு பிடித்த வேலையை செய்யுங்கள். உங்களுடைய பெற்றோர்களை எந்த விதத்தில் உங்களால் சந்தோஷப்படுத்த முடியுமோ அந்த விதத்தில் அவர்களை சந்தோஷமடைய செய்யுங்கள். மற்றபடி எல்லா இடத்திலும் நீங்கள் காம்ப்ரமைஸ் செய்து கொண்டு உங்களையே அழித்துக்கொள்ளாதீர்கள்.
உங்களை மதிக்காத இடத்தில் செல்ல முயற்சிக்காதீர்கள்:
உங்களுடைய உறவினர்களோ அல்லது தெரிந்தவர்களோ அல்லது உடன் படிக்கும் மாணவர்களோ அல்லது அவர்கள் யாராகவோ இருக்கட்டும், அவர்கள் உங்களை மதிக்கவிலலை என்று தெரிந்தாலோ அல்லது நீங்கள் உணர்ந்தாலோ அந்த இடத்திற்கு செல்வதை தவிர்க்கவும். இளைஞர்களே, உங்களை மதிக்காதவர்களின் இடத்திற்கு நீங்கள் சென்றால், உங்களுடைய மதிப்பிற்கும் மரியாதைக்கும் களங்கம் உண்டாகும்.
நேரம்தான் வாழ்க்கையின் மிகப்பெரிய செல்வம்:
நீங்கள் படித்து முன்னேறி ஒரு பெரிய பதவியில் வேலை கிடைத்து ஒரு கௌரவமான வாழ்க்கையை வாழவேண்டும் என்றால் அதற்கான முக்கிய செல்வம் நேரம்தான். நேரத்தை வீணாக்கிவிட்டால் மற்ற செல்வங்கள் எதுவும் உங்களுக்கு கிட்டாது. ஆகவே நேரத்தை வீணாக்காமல், அந்தெந்த வேளையில் எதை செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள், எதை படிக்கவேண்டுமோ அதை படியுங்கள்.
தோல்வி என்பது முடிவல்ல, அது வெற்றிக்கான தொடக்கமே:
சில நேரங்களில் தோல்வி என்பது எல்லோருக்குமே வரும். தோல்வி அடைந்தால்தான் வெற்றி கிடைக்கும். சிறு குழந்தையாக இருக்கையில் நாம், நடக்க முயற்சிக்கும் போது விழவில்லையா? பிறகு எழுந்து தத்தி தத்தி நடக்கவில்லையா? விழுந்து விட்டோமே என்று நினைத்து எழுந்திருக்காமல் இருந்து விட்டோமா?? இல்லையே. அதைப்போலதான் ஒரு பரீட்சையிலோ அல்லது வேறு எதாவது புதிய தொழில் செய்யும்போது தோற்றுவிட்டால், மறுபடியும் அதற்கான தீர்வை புரிந்துகொண்டு முயற்சித்தால் வெற்றி நிச்சயம்.
அமைதிதான் சிறந்த வழி:
இளைஞர்களே, எல்லா நிலையிலும், சூழ்நிலையிலும் அமைதியாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். எந்தவொரு சூழ்நிலையையும் அமைதியாக இருந்து கையாள வேண்டும். கோபத்தோடும் பதற்றத்தோடும் இருந்தால் ஒரு பயனுமில்லை. மாறாக உங்களுடைய மனநிலைதான் மோசமாக பாதிக்கபடும்.
உங்களை நீங்களே நம்பவேண்டும்:
வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களையும் போட்டி களையும் எதிர்த்து போராட மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டும். முதலில் நீங்கள் உங்களை முழுவதுமாக நம்பவேண்டும். என்னால் முடியும் என்று அடித்து சொல்லவேண்டும். தினமும் மனதிற்குள் இந்த வசனத்தை சொல்லிகொண்டே இருக்கவேண்டும்.
இளைஞர்களே, மேற்கூறிய இந்த ஆறு குறிப்புகளை எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு வாழ்க்கையில் எல்லா வளமும் பெற்று வாழ என் வாழ்த்துக்கள்!!