நமது வீடுகளில் நாம் அன்றாடம் சந்திக்கும் மிகப்பெரிய தலைவலிகளில் ஒன்று எலி தொல்லை. பல ஆயிரங்கள் மற்றும் லட்சங்கள் கொடுத்து ஆசையாக வாங்கும் வீட்டு உபயோகப் பொருட்களான குளிர்சாதன பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம் மற்றும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை இந்த எலிகள் ஒரே ராத்திரியில் நாசம் செய்துவிடும்.
வயர்களை கடித்து குதறுவதுதான் இவற்றின் முக்கிய வேலையே. இதனால் நமக்கு ஏற்படும் பொருளாதார இழப்பும் மன உளைச்சலும் கொஞ்ச நஞ்சம் கிடையாது. இப்படிப்பட்ட எலி தொல்லையில் இருந்து நமது விலைமதிப்பற்ற பொருட்களை எப்படி மிக எளிதாக பாதுகாப்பது என்பதை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வயர்களை பாதுகாக்க பிரத்யேக ஸ்ப்ரேக்கள்!
இப்போதெல்லாம் சந்தைகளில் எலிகளை விரட்டுவதற்காகவே பல பிரத்யேகமான ரேட் ரிப்பலன்ட் ஸ்ப்ரேக்கள் கிடைக்கின்றன. பைக் இன்ஜினுக்கு உள்ளே இருக்கும் வயர்கள், ஏசி மெஷினின் வெளிப்பகுதி மற்றும் வாஷிங் மெஷினின் அடிபாகம் ஆகிய இடங்களில் இந்த ஸ்ப்ரேவை நன்றாக அடித்துவிடலாம். இதன் கசப்பான சுவை மற்றும் கடுமையான வாடை காரணமாக எலிகள் அந்த வயர்களின் பக்கமே தலை வைத்து படுக்காது. இந்த ஸ்ப்ரேக்களை மாதம் ஒருமுறை பயன்படுத்தினாலே நல்ல பலன் கிடைக்கும்.
இயற்கையான வாசனைகள்!
எலிகளுக்கு மிகவும் கடுமையான வாசனைகள் எப்போதுமே பிடிக்காது. குறிப்பாக புதினா அல்லது பெப்பர்மின்ட் எண்ணெய்க்கு எலிகளை விரட்டும் அபார சக்தி உண்டு. சில பஞ்சு உருண்டைகளில் இந்த எண்ணெயை நன்றாக நனைத்து, பிரிட்ஜின் பின்புறம் உள்ள கம்ப்ரஸர் பகுதியிலும் வாஷிங் மெஷினுக்கு அடியிலும் வைத்துவிடுங்கள்.
அதேபோல புகையிலை இலைகளையும் ஆங்காங்கே சிறு சிறு துண்டுகளாக பைக்குகளின் சீட்டுக்கு அடியிலும் பேனல்களுக்கு உள்ளேயும் போட்டு வைப்பது மிகச்சிறந்த ரிசல்ட்டை கொடுக்கும். நாப்தலின் எனப்படும் பாச்சா உருண்டைகளையும் பழைய துணிகளில் கட்டி மெஷின்களின் ஓரங்களில் போட்டு வைக்கலாம்.
இரும்பு நார், வலை பாதுகாப்பு!
எலிகள் எவ்வளவு கடினமான பிளாஸ்டிக்கையும் கடித்து விடும், ஆனால் இரும்பு கம்பிகளை அவற்றால் ஒன்றும் செய்ய முடியாது. பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் இரும்பு நாரை எலிகள் நுழையும் சிறிய துளைகளில் அடைத்து வைக்கலாம். வாஷிங் மெஷின் மற்றும் பிரிட்ஜின் அடிப்பகுதியில் எலிகள் புகுந்து கொள்ளாமல் இருக்க, மிகவும் மெல்லிய இரும்பு வலைகளை வாங்கி அதனை சுற்றிலும் கச்சிதமாக கட்டி வைப்பது நூறு சதவீதம் பாதுகாப்பான ஒரு வழியாகும்.
வெளிச்சம் மிக அவசியம்!
பொதுவாக இருட்டான மற்றும் பழைய பொருட்கள் குவிந்து கிடக்கும் இடங்களைத்தான் எலிகள் தங்களின் வீடாக மாற்றும். எனவே ஏசி மற்றும் பிரிட்ஜ் இருக்கும் இடங்களை எப்போதுமே தேவையற்ற குப்பைகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வாகனங்களை இருட்டான பகுதிகளில் நிறுத்துவதை தவிர்த்து, கொஞ்சம் வெளிச்சம் இருக்கும்படியான இடங்களில் நிறுத்துவது எலிகள் வராமல் தடுக்க உதவும்.
சின்ன எலி தானே என்று அலட்சியமாக இருந்தால் அது நமது பர்ஸை முழுமையாக காலி செய்துவிடும். கொஞ்சம் விழிப்புணர்வோடு செயல்பட்டு மேலே சொன்ன விஷயங்களை முறையாக பின்பற்றினால், எலிகளிடம் இருந்து நமது பொருட்களை மிக சுலபமாக காப்பாற்றி விடலாம்.