
‘ஒரு சிறிய விளம்பரத்தால் கூட நுகர்வோரை தூண்டி விட்டு எதையும் வாங்கச் செய்து விடலாம்’ என்பது பல நிறுவனங்களின் நம்பிக்கை. நுகர்வோரின் இந்த அணுகுமுறை ஒரு மன நோய் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். சிலர் கடன் வாங்கியாவது தேவையில்லாத பொருட்களை வாங்கி வீட்டில் குவிக்கிறார்கள். பொருட்களை வாங்கச் செல்லும் முன்னர் யோசிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
திட்டமிட்டு செல்லுங்கள்: ஷாப்பிங் செல்லும்போது என்னென்ன வாங்க வேண்டும் என திட்டமிட்டு, அதற்குத் தேவையான அளவு பணத்தை தோராயமாக மதிப்பிட்டு கையில் எடுத்துச் செல்லுங்கள். கிரெடிட் கார்டை பயன்படுத்துவதை முடிந்த மட்டும் தவிர்க்கப் பாருங்கள். ஏனெனில், கிரெடிட் கார்டுதான் இருக்கிறதே என பொருட்களை வாங்கிக் குவிக்கும் மனநிலைக்கு சட்டென வந்து விடுவீர்கள். ஷாப்பிங் செல்லும் முன்பு என்னென்ன பொருள் தேவை எனப் பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். எது உடனடியாகத் தேவையோ? அவை மட்டுமே பட்டியல் போடும்போது ஞாபகத்துக்கு வரும். அந்தப் பொருட்களை மட்டும் வாங்குங்கள்.
சலுகைகளில் கவனம்: இது வாங்கினால் அது இலவசம், அது வாங்கினால் இது இலவசம் என சலுகை விளம்பரங்கள் அடிக்கடி போடுவார்கள். 'முந்துங்கள்… இந்த ஆஃபர் இன்னும் சில நாட்கள் மட்டுமே’ என்பார்கள். உங்களுக்குத் தேவையான பொருளாக இருந்தால் மட்டுமே இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சலுகைகள் அடிக்கடி வரும். அவசரப்பட வேண்டாம். ‘50 சதவிகிதம் தள்ளுபடி 75 சதவிகிதம் தள்ளுபடி’ என்கிற மாதிரியான அதிரடி விளம்பரங்களைப் பார்த்து ஷாப்பிங் செல்லாதீர்கள். அவ்வளவு தள்ளுபடி ஏதாவது சில பொருட்களுக்கு மட்டுமே தருவார்கள். அவையும் அநேகமாக நீண்ட நாட்களாக விற்காத பொருட்களாக இருக்கக்கூடும் அல்லது ஏதாவது குறைபாடு உள்ள பொருட்களாக இருக்கலாம்.
விசாரித்து வாங்குங்கள்: நீங்கள் வாங்கப்போகும் பொருளுக்கான விலையை முதலில் உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கடைகளில் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். அதை விட குறைந்த விலையில், ஆனால் அதே அளவுக்கு எடையில் அதே அளவு தரத்தில் இருக்கிறதா? என்பதை விசாரித்துப் பார்த்து வாங்குங்கள். சலுகை விலையில் கிடைக்கும் ஒரு பொருளோடு தேவையில்லாத வேறு ஒரு பொருளை வாங்குவதை விட கொஞ்சம் அதிக விலை தந்து உங்களுக்குத் தேவையான பொருளை மட்டும் வாங்கி விடுங்கள். அவசர அவசரமாக ஷாப்பிங் செய்யாதீர்கள். இந்த அவசரம் நம் தேவை மற்றும் பட்ஜெட்டை பற்றி சிந்திக்க விடாமல், எதையாவது வாங்க வைத்து விடும்.
யோசித்து வாங்குங்கள்: பெரிய சூப்பர் மார்க்கெட் போகும்போது, ‘இங்கே போய் வெறும் நூறு ரூபாய்க்கு பொருள் வாங்கினால் என்ன நினைப்பார்கள்?’ என யோசித்து தேவையில்லாத பொருட்களை வாங்கிவிடும் ஆபத்து இருக்கிறது. அவசரத் தேவைக்கான பொருட்களை யோசித்து உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் சாதாரண மளிகைக் கடையில் வாங்குங்கள். அதில் தப்பில்லை. இங்குதான் தள்ளுபடி, விலை குறைப்பு, சலுகைகள் என தூண்டில் போட மாட்டார்கள். சலுகை தருகிறார்கள் என்பதற்காக தேவையில்லாத பொருளை வாங்கவேண்டிய எந்த நிர்பந்தமும் இருக்காது. பணமும் அதிகம் செலவழியாது. அதேபோல், ‘ஷாப்பிங் போனால் பொழுது போகும்’ என நினைத்து ஷாப்பிங் போகாதீர்கள். கூடவே உங்கள் பர்ஸும் காலி ஆகும். எனவே, உங்கள் ஷாப்பிங்கை அதிகபட்சம் மாதம் இருமுறை மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள்.
சலுகை விற்பனையில் இதுவரை நீங்கள் தேவையான பொருட்களைத்தான் வாங்கி இருக்கிறீர்களா? எந்தெந்த பொருளை தேவையில்லாமல் வாங்கி இருக்கிறீர்கள், அதனால் ஏற்பட்ட நஷ்டம் என்ன என்பதை நிதானமாக யோசித்துப் பாருங்கள். அதன் பின் அப்படி ஷாப்பிங் செய்ய மாட்டீர்கள். தரமற்ற பொருளை குறைந்த விலைக்கு வாங்குவதை விட, தரமான பொருட்களை சற்று அதிக விலை கொடுத்து வாங்குவது தவறில்லை.
இந்தத் தீர்மானத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். தனியாக ஷாப்பிங் செய்ய போகாதீர்கள்! உங்கள் கணவர், தோழி என உடன் யாரையாவது அழைத்துச் செல்லுங்கள். உங்கள் செலவு பழக்கத்தை எச்சரித்து அவர்கள் தடுப்பார்கள். அந்த அக்கறை குணம் அவர்களுக்கு இருக்கும். அதனால் ஷாப்பிங் செல்லும்போது, கவனமாக, தேவையானதை மட்டுமே வாங்குங்கள்.