
விருப்பமில்லாத திருமணத்திற்குப் பல காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக, குடும்ப அழுத்தம், சமூக எதிர்பார்ப்புகள், குடும்ப கௌரவம், பெற்றோர், சமூக விருப்பத்திற்காக திருமணம் செய்வது, பொருளாதார நிர்பந்தம் என பலவிதமான காரணங்கள் இருக்கலாம்.
குடும்ப கௌரவம்: குறிப்பிட்ட சமூக அல்லது குடும்ப பின்னணியில் இருந்து வருபவர்கள் சிலர் குடும்ப கௌரவத்திற்காக திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். இதில் பெண்ணின் விருப்பம் பெரும்பாலும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. சமூக அந்தஸ்திற்காகவும், குடும்ப கௌரவத்திற்காகவும் விருப்பமில்லாத திருமணங்கள் நடைபெறுகின்றன.
சமூக எதிர்பார்ப்புகள்: சமூகத்தில் திருமணம் ஆனவர்களுக்கு என்று தனி மரியாதையும், கௌரவமும் கொடுக்கப்படுகிறது. சமூகத்தில் திருமணமானவராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக விருப்பமில்லாத திருமணங்கள் நடைபெறுகின்றன. அத்துடன் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தை பெற வேண்டும் அல்லது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகவும் விருப்பம் இல்லாமல் திருமணங்கள் நடைபெறுகின்றன.
குடும்பத்தில் உள்ளவர்களால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக: சிலருக்கு பெற்றோர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சிலர் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தங்கள் அல்லது பிரச்னைகள் காரணமாக வேறு வழியின்றி திருமணம் செய்து கொள்ளலாம். குடும்ப சூழ்நிலை காரணமாக விருப்பமில்லாத திருமணங்கள் சில நடைபெறுகின்றன.
பொருளாதார காரணங்கள்: ஒருவருடைய பொருளாதார நிலை மேம்படுவதற்காக விருப்பம் இல்லாவிட்டாலும் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. திருமணத்தின் மூலம் பொருளாதார ரீதியாக முன்னேறலாம் என்று நினைத்து ஒருவரை திருமணம் செய்து கொள்ள நிர்பந்திப்பது. சில குடும்பங்களில், குறிப்பாக பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுப்பது அவர்களுடைய பொருளாதார சுமையை குறைக்கும் என்று கருதப்படுகிறது.
நம்பிக்கையின்மை: திருமணத்தின் மீதான நம்பிக்கை இல்லாத காரணத்தாலும் சிலர் திருமணங்கள் செய்து கொள்ள விரும்புவதில்லை. சிலருக்குத் திருமண வாழ்க்கையில் எதிர்ப்படும் சவால்களைப் பற்றிய பயம் காரணமாகவும் விருப்பமில்லாத திருமணங்கள் நடைபெறுகின்றது.
குடும்ப சொத்துக்கள்: குடும்ப சொத்துக்களைப் பாதுகாக்கவும் அல்லது பரம்பரையைத் தொடரவும் கூட விருப்பமில்லாத திருமணங்கள் நடைபெறலாம்.
விருப்பமில்லாத திருமணங்களால் மன உளைச்சலும் மன அழுத்தமும் ஏற்படும். இது திருமண உறவுகள் முறிவதற்கும், குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படவும் வழிவகுக்கும். எனவே, திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவருடைய விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதற்கு சமூக விழிப்புணர்வு, சட்ட ரீதியான நடவடிக்கைகள் மற்றும் குடும்பங்களுக்கு கல்வி அளிப்பது போன்றவை மிகவும் அவசியம். ஒவ்வொருவருக்குமே, அது ஆணாகட்டும் அல்லது பெண்ணாகட்டும் தங்கள் திருமணத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருப்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.