
நம் இந்தியாவை பொறுத்த வரையில் எத்தனையோ மாற்றங்களும் அறிவியல் ரீதியான முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளன. எல்லா விதத்திலும் சிறந்து விளங்கும் வல்லரசாக இருக்கிறது நம் இந்தியா, பெருமைப்பட வேண்டிய விஷயம்.
ஆனால், இத்தனை வளர்ச்சியை கண்ட போதிலும் நாம் சில விஷயங்களை மாற்றாமலேயே இருக்கிறோம். நாம் எப்போதுமே ஒரு பெண் குழந்தை பிறந்தால், நான்கு அல்லது ஐந்து வயதை தாண்டியவுடன் இப்படி நடந்து கொள்ள வேண்டும்; இதை இப்படித் தான் கையாள வேண்டும் என்றெல்லாம் கூறி வளர்க்கிறோம்.
ஆனால், நாம் ஏன் ஆண் குழந்தைகளிடம் எதையும் எடுத்துரைப்பதில்லை? பெண் குழந்தைகளுக்கு என்னென்ன பிரச்சனை வரும், அவர்களை எப்படி நடத்த வேண்டும், பெண் குழந்தைகளுக்கு உண்டாகும் மாதவிடாய், அதனால் அவர்களுக்கு மனநிலை மற்றும் உடல்நிலை எப்படி இருக்கும் என்று எதை பற்றியுமே நாம் ஆண் குழந்தைகளிடம் மனம் விட்டு சொல்வதில்லை.
விஞ்ஞானம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஒரு ஆண் குழந்தைக்கு நாம் இதை எல்லாம் எடுத்துரைத்தால் என்ன தவறு? இதை எல்லாம் தெரிந்து கொண்டால் தான் அந்த மகன் தன்னுடைய சகோதரிக்கோ அல்லது பள்ளிக்கூடத்தில் படிக்கும் சக மாணவிக்கோ அல்லது வருங்கால மனைவிக்கோ எதாவது பிரச்னை வந்தால் புரிந்து கொண்டு அதற்கான உதவியை செய்ய முடியும்.
தாய்மார்கள் கண்டிப்பாக இந்த விஷயத்தை எடுத்துரைக்க வேண்டும்.
சில சமயங்களில் பெண் குழந்தைகளுக்கு முதன் முதலாக மாதவிடாய் பள்ளிக்கூடத்திலேயே தொடங்கி விட்டால் அந்த குழந்தைகள் படும்பாடு, சொல்லி மாளாது. முதலில் அந்த குழந்தைக்கே என்ன நடக்கிறது என்று புரியாது; மேற்கொண்டு மாணவர்கள் சேர்ந்து கொண்டு அந்த குழந்தையை கிண்டல் செய்யும் போது அந்த குழந்தை எத்தனை மன உளைச்சலுக்கு ஆளாகிறது?
ஆண் குழந்தைகளை குற்றம் சொல்லி ஒரு பிரயோசனமுமில்லை. தவறு நம்முடையது தான். சிறிது நாட்களுக்கு முன்னால் யூ ட்யூபில் ஒரு documentary film ஐ நான் பார்த்தேன். அந்த கதையை உங்களுக்கு கூறுகிறேன்.
ஒரு பள்ளிக்கூடத்தில் வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது. கடைசி வகுப்பு முடிந்து விட்டது. அதில் படிக்கும் ஒரு பெண் குழந்தைக்கு கொஞ்ச நேரமாகவே வயிற்று வலி, உடம்பு அசதி என இருந்தது. அந்த குழந்தை பொருட்படுத்தாமல் வகுப்பை கவனித்து கொண்டிருந்தாள். ஆனால் அந்த குழந்தைக்கு ஏதோ ஆவது போல் ஒரு உணர்வு இருந்தது. கடைசி வகுப்பு முடிந்து எல்லோரும் வெளியேறி போனார்கள். இந்த பெண் குழந்தையின் tunic இன் பின்னால் ஆன இரத்த கறையை பற்றித் தெரியவே தெரியாது.
பின்னால் பார்த்த மாணவர்களெல்லாம் கிண்டல் செய்துவிட்டு சென்று விட்டார்கள். இந்த குழந்தை பயத்தால் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தாள். இவளும் இவள் தோழி மற்றும் ஒரே ஒரு மாணவன் மட்டும் தான் இருந்தார்கள். அவன் இவர்களிடம் வந்து, 'பயப்படாதே, ஒன்றுமில்லை. என்னுடன் வாருங்கள்!' என்று கூறி அந்த பெண்களை முன்னால் போகச் சொல்லி பின்னால் இவன் அந்த குழந்தையின் ஆடையில் இருக்கும் கறை தெரியாதவாறு மறைத்து கொண்டு வந்தான்.
பிறகு பள்ளிக்கூடத்திற்கு வெளியிலிருக்கும் ஒரு மரத்தடியில் அவர்களை உட்கார வைத்து, ஓடிப் போய் குடிக்க தண்ணீரும், சூடான காப்பியையும் வாங்கி கொண்டு வந்தான். அந்த பெண்ணை தண்ணீரையும், சூடான காப்பியையும் பருகச் சொன்னான். சூடான காப்பியை பருகிய பிறகு அந்த பெண்ணிற்கு சிறிது நிவாரணம் கிடைத்தது. அந்த பெண்கள் கேட்டார்கள், "உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்? எல்லோரும் கிண்டல் செய்தார்கள். ஆனால், நீயோ புரிந்து கொண்டு உதவி புரிகிறாயே எப்படி?" என்று.
அவன் சொன்னான், "எல்லாம் எனக்கு என்னுடைய அம்மா சொல்லி கொடுத்திருக்கிறார்கள். பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள். உங்களுக்கும் புரிய வைப்பார்கள், வாங்க பக்கத்தில் தான் என் வீடு இருக்கிறது. வந்து உடையை மாற்றி கொள், பிறகு என் அம்மாவே உங்கள் இருவரையும் வீட்டில் சேர்த்து விடுவார்," என்று கூறி இரண்டு பெண்களையும் அழைத்து சென்றான்.
வீட்டை அடைந்ததும் இவர்கள் இருவரும் வாசலிலேயே நிற்க, அவன் உள்ளே சென்று தாயிடம் விஷயத்தை கூறினான். அவள் வெளியே வந்து இருவரையும் உள்ளே அழைத்து சென்றாள். பிறகு மாதவிடாய் ஆன பெண்ணிற்கு வேறு ஆடைகளையும் கொடுத்து sanitary pads ஐயும் கொடுத்து புரிய வைத்து பின் பாத்ரூமிற்கு சென்று குளித்து விட்டு மாற்றி கொண்டு வருமாறு கூறினாள். இரண்டு குழந்தைகளையும் அரவணைத்து கொண்டு பக்குவமாக எல்லாவற்றையும் கூறி புரிய வைத்தாள்.
மாத விடாய் ஆன குழந்தையோ உணர்ச்சி வசப்பட்டு, 'ஆன்ட்டி, எனக்கு அம்மா இல்லை, நான் உங்களை அம்மா என்றழைக்கலாமா?' என்று கட்டி அணைத்து கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். பிறகு அந்த குழந்தையை சமாதானப் படுத்தினாள். பிறகு அவள் கூறிய இன்னொரு விஷயம் என்னவென்றால், அவளுக்கு இந்த ஒரு மகன் தான் இருக்கிறான், மகள் கிடையாது. ஆனாலும் தன் மகன் பெண்களை பற்றி புரிந்து கொள்ளுதல் மிக மிக அவசியம் என்பதற்காக இவற்றை எல்லாம் அவனுக்கு சொல்லி இருக்கிறேன் என்றாள்.
குழந்தைகளை அவர்களுடைய வீட்டிற்கு கொண்டு போய் சேர்த்தாள். இந்த மாதவிடாய் ஆன பெண்ணின் தந்தை அந்த அம்மாவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டார். மேலும், "தான் எப்படி இதை புரிய வைப்பது என்று குழம்பி கொண்டு இருந்தேன். நல்ல வேளை நீங்கள் புரிய வைத்து விட்டீர்கள், நன்றி" என்றார்.
ஆகவே, தாய் மார்களே! தயவு செய்து உங்களுடைய பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். திருமணமான ஆண் பிள்ளைகளுக்கு கூட எடுத்து சொல்லவும். ஒன்றுமில்லை, 'நீ அவளுக்கு சூடாக பருகுவதற்கு ஒரு கப் காப்பியோ அல்லது டீயையோ கொடுத்து சற்று ஆறுதலாக பேசினாலே போதும்' என்று புரிய வைக்க வேண்டும்.