சில நாட்களுக்கு முன்னால் எனது நண்பர் புதிதாகக் கட்டியிருந்த வீட்டிற்குச் சென்று பார்த்தேன். பிரமித்தேன். காரணம் இரண்டு கிரவுண்ட் நிலத்தில் நான்காயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான ஒரு வீட்டை இல்லை இல்லை பங்களாவைக் கட்டியிருந்தார். அந்த பங்களாவில் அனைத்து வசதிகளும் இருந்தன. நான்கு படுக்கை அறை, இரண்டு சமையல் அறை, மூன்று பெரிய ஹால், நான்கு டாய்லெட்டுகள், தோட்டம் என நவீனமாக கட்டப்பட்டிருந்த்து. அவருடைய ரசனை அபாரமாக இருந்தது. மனதார பாராட்டிவிட்டு வந்தேன். நண்பருடைய ஒரே மகன் அமெரிக்காவில் பணியில் இருக்கிறார். நண்பரும் அவருடைய மனைவியும் மட்டுமே அந்த பெரிய பங்களாவில் வசித்துக் கொண்டிருந்தார்கள்.
நம்முடைய வசதிக்கானதுதான் நாம் கட்டும் வீடே தவிர, வீடு சும்மா பந்தாவாக இருந்தால்தான் உறவினர்களும் நண்பர்களும் நம்மை மதிப்பார்கள் என்பதற்காக அல்லவே!
ஒரு வீட்டைக் கட்டும் முன்னால் நாம் பலவிதமான விஷயங்களை யோசிக்க வேண்டும். காரணம் பெரிய வீட்டைக் கட்டினால் அதை பராமரிக்க மாதம் குறைந்த பட்சம் பத்தாயிரம் ரூபாயை செலவு செய்ய வேண்டும். இரண்டு பேர்கள் மட்டுமே வசிக்க இவ்வளவு பெரிய வீடு தேவையா என்ற கேள்வியும் எவரொருவர் மனதிலும் நிச்சயம் எழும். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். இதில் தலையிட நமக்கு உரிமை இல்லை.
பொதுவாக நாம் ஒரு வீட்டைக் கட்டும் முன்னால் பல விஷயங்களை யோசிக்க வேண்டும். நான்கு நபர்கள் உள்ள ஒரு குடும்பத்திற்கு சமையலறை இருநூறு சதுர அடி, படுக்கை அறை இருவருக்கு இருநூறு சதுர அடி வீதம் மொத்தம் நானூறு சதுர அடி, டைனிங் ஹால் இருநூறு சதுர அடி, ஹால் மூன்னூறு சதுர அடி, பூஜை அறை நூறு சதுர அடி, டாய்லெட் பாத்ரூம் ஐம்பது சதுர அடி என மொத்தம் 1250 சதுர அடி இருந்தாலே போதுமானது.
வயதான இரண்டு நபர்கள் வசிப்பதாக இருந்தால் அதற்கு ஹால் 200 சதுரஅடி, படுக்கை அறை 150 சதுர அடி, சமையலறை 100 சதுர அடி, டைனிங் ஹால் 100 சதுர அடி மற்றும் டாய்லெட் பாத்ரூம் 50 சதுர அடி என 600 சதுர அடி வீடே போதுமானது. டைனிங் ஹாலிலேயே சிறிய பூஜை மாடத்தையும் அமைத்துக் கொள்ளலாம். இதில் வசிப்பது சௌகரியமாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும். பராமரிப்பதும் எளிது. பிற்காலத்தில் தேவைப்பட்டால் மாடியில் வீட்டை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.
ஒரு ஆபத்து என்றால் ஒரு அறையில் இருந்து உதவிக்காகக் கூப்பிடும் போது அடுத்த அறையில் இருப்பவருக்குக் கேட்க வேண்டும். பிரம்மாண்டம் என்ற பெயரில் ஐந்து படுக்கை அறைகளை பெரிய அளவில் கட்டினால் ஆபத்து காலத்தில் ஒருவர் அழைக்கும் போது குடும்பத்தில் உள்ள மற்றவருக்குக் கேட்காமல் போகலாம். இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
பொதுவாக டாய்லெட்டையும் பாத்ரூமையும் தனித்தனியே அமைப்பது நல்லது. பாத்ரூமை பொதுவாக நான்கடிக்கு நான்கடி அளவிலேயே கூடுமானவரை சிறியதாக அமைக்க வேண்டும். டாய்லெட்டையும் நான்கடிக்கு நான்கடி அளவிலேயே அமைக்க வேண்டும். தற்காலத்தில் வயதானவர்கள் பாத்ரூம்களில் வழுக்கி விழுந்து கை கால் எலும்பு முறிவிற்குள்ளாவதையும் நாம் கேள்விப்படுகிறோம். இரண்டும் தனித்தனியே சிறியதாக இருந்தால் சற்று பாதுகாப்பாக அமையும். மேலும் தற்காலத்தில் பாத்ரூம் டாய்லெட்டில் பதிப்பதற்காக சிறப்பான வழுக்காத டைல்ஸ்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
இன்னும் சிலர் வில்லா போன்ற அமைப்பில் மாடிப் படிக்கட்டை வீட்டிற்குள்ளேயே வைத்துக் கட்டுகிறார்கள். ஒரு அவசரம் என்று ஏதேனும் தேவை ஏற்பட்டால் இத்தகைய வில்லா வீடுகளை வாடகைக்கும் விட முடியாது. அந்த வருமானமும் கிடைக்காது.
ஒரு வீட்டைக் கட்டும் முன்னால் அனுபவம் மிக்கவர்களிடத்தில் கலந்தாலோசிக்க வேண்டும். அனுபவம் நமக்கு பல விஷயங்களை சொல்லித் தரும். நாம் கட்டும் வீடு நமக்கு சிக்கல் இல்லாதவாறு அமைய வேண்டும். பிறர் கண்களை உறுத்தாதவாறும் இருக்க வேண்டும்.