
கால்கள் தடுமாறினாலும் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால், நாக்குத் தடுமாறினால்…? என்ன ஒரு அருமையான வசனம் இது. ‘கால்கள் தடுமாறினால் சமாளித்துக் கொள்ளலாம்‘ என்று கூறப்பட்டிருப்பது, கால்கள் தடுக்கி கீழே விழுவதல்ல. நாம் நம் பாதையிலிருந்து விலகி, கெட்ட பாதைக்குச் சென்று கெட்டவர்களோடும் கெட்ட பழக்க வழக்கங்களோடும் இருப்பதாகப் பொருள். ஒருவர் வழி மாறிச் சென்று யார் பேச்சையும் கேட்காமல் இஷ்டம் போல ஆடித் திரிந்து செல்வதைத்தான் கால்கள் தடுமாறி சென்று விட்டார் என்று கூறுவர்.
இன்னொரு பொருளும் இதற்கு உண்டு. அதாவது, நல்ல லாபகரமான தொழிலை செய்து கொண்டு, நல்ல நிலைமையில் இருக்கும் ஒருவருக்கு திடீரென கால் தடுக்கி விழுந்தது போல் வியாபாரத்தில் சரிவு ஏற்பட்டு எல்லாவற்றையும் இழந்து நிற்கும்போது அவரையும், ‘கால்கள் தடுமாறி தத்தளிக்கிறார்‘ என்று கூறலாம். ஆகவே, கால்கள் தடுமாறுவது என்றால் தானாகவே ஏற்படுத்திக்கொள்வது அல்லது சந்தர்ப்பத்தினால் ஏற்படுவதாகும். இந்த இரண்டு நிலைகளையும் நம்மால் சரி செய்து சமாளிக்க முடியும். எப்படி என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
ஒருவர் தடுமாறி தவறான பாதைக்குச் சென்று, ஒரு கட்டத்தில் தானாகவே தான் செய்வது தவறு என்று அறிந்தாலோ அல்லது தான் செய்த தவற்றிற்கு தண்டனை கிடைத்தாலோ அல்லது அடுத்தவர்கள் எடுத்துரைக்கும்போதோ அவரால் அந்த செயலிலிருந்து, கெட்ட வழியிலிருந்து மெது மெதுவாக வெளியே வந்து தன்னை மீட்க முடியும்.
அதைப்போல, நஷ்டத்தால் தடுமாறினாலும் திரும்பவும் சிரமப்பட்டாவது கஷ்டங்களை சமாளித்து பழைய நிலைக்குத் திரும்பி வர முடியும். ஆகவேதான் கால்கள் தடுமாறினாலும் சமாளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
சரி, இனி அடுத்த வரிக்கு வருவோம். நாக்கு தடுமாறினால் என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள். இதற்கும் இரண்டு அர்த்தங்கள் இருக்கின்றன. நாக்கு தடுமாறினால் நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகளைக் கட்டுப்படுத்த முடியாது. நாக்கு தடுமாறி வரும் வார்த்தைகளால் அடுத்தவர்களின் நெஞ்சம் புண்ணாகி வடுவாகி விடும். அந்த வடுவானது காலத்திற்கும் நெஞ்சை விட்டு விலகாது. நாக்கு தடுமாறி, நாம் கொட்டிய வார்த்தைகளை ஒருபோதும் மாற்ற முடியாது. தேள் போல வார்த்தைகளை கொட்டினது கொட்டினதுதான். அதை அள்ள முடியாது. இந்த நாக்கு தடுமாற்றம் பற்றி இரண்டு திருக்குறளில் திருவள்ளுவர் அழகாக கூறியிருக்கார்.
‘தீயினாற் சுட்டப்புண் உள்ளாரும், ஆறாதே நாவினால் சுட்ட வடு.‘ அதாவது, ஒருவருக்குத் தீயினால் காயம் ஏற்பட்டாலும் ஆறி விடும். ஆனால், யாராவது அவர்களை ஏதாவது நாவினால் மனம் நோகும்படி கூறி இருந்தால் அந்த வடு ஆறவே ஆறாது என்று பொருள்.
‘யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.‘ ஒருவர் தன்னுடைய ஐம்புலன்களில் எதை அடக்காவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் அவர் நிச்சயமாக தனது நாவை அடக்க வேண்டும். அவ்வாறு அடக்கவில்லை என்றால் அடுத்தவர்களின் கடுஞ்சொல்லிற்கு ஆளாகி வருத்தப்படுவார் என்று பொருள். ஆகவே, நாம் எப்போதும் எந்த நிலையிலும் பேசும்போது நிதானத்தோடு நாவை அடக்கிப் பேச வேண்டும்.
நாக்கு தடுமாறினால் என்னவாகும் என்பதற்கான இரண்டாவது அர்த்தம், சில பேர் நாக்கை அடக்காமல் இஷ்டபடி சாப்பாட்டை சாப்பிடுகிறார்கள். குளிர்பானங்களையும் மதுவையும் இஷ்டபடி குடிக்கிறார்கள். இப்படி நாவை கட்டுக்குள் வைக்காமல் கண்டதையும் சாப்பிட்டுக் கொண்டும் குடித்துக் கொண்டுமிருந்தால் விளைவு என்ன ஆகும்?
Obeosity, high bp, high sugar, infertility என ஒன்றன் பின் ஒன்றாக பிரச்னைகள் வரும். பிறகு நம் உடல் நிலை ஒன்றுமே சாப்பிட முடியாதபடிக்கு தள்ளப்படும். கூடியவரையில் நாவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆரோக்கியமான உணவை உட்கொண்டால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆகவே, பேசும்போதும் மற்றும் சாப்பிடும்போதும் நாவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம்.