

அனைவருக்குமே சொந்த வீடு என்பது பெருங்கனவு. அந்தக் கனவை நனவாக்க பலரும் பல ஆண்டுகள் உழைக்க வேண்டியிருக்கும். பல ஆண்டுகளாக சேமித்து வைத்திருக்கும் பணத்தை வீடு கட்ட செலவிடும் போது, அந்த வீட்டை தரமாகவும், உறுதியாகவும் கட்ட வேண்டியது அவசியம். அவ்வகையில் ஒரு வீட்டின் தரத்தை நிர்ணயிப்பதில் இந்திய தரநிலைக் கோடுகள் (Indian Standard Codes) முக்கியப் பங்காற்றுகின்றன.
ஒவ்வொருவரும் தங்களது வீட்டை ஐஎஸ் கோடுகளின் மூலம் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றி கட்டினால், வீடுகள் நீண்ட காலத்திற்கு தாக்குப் பிடிக்கும். ஐஎஸ் கோடுகளில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு மாதிரியான கட்டட வடிவமைப்புக்கும் ஏற்றாற் போல் ஐஎஸ் கோடுகள் வேறுபடுகின்றன.
பார்ப்பதற்கு உறுதியானதாக இருக்கும் பல வீடுகள், உண்மையில் உறுதியானவை அல்ல. சில ஆண்டுகளிலேயே சிதைவு, வெடிப்பு மற்றும் முறிவுக்கு உள்ளாகின்றன. ஐஎஸ் கோடுகளை பின்பற்றாமல் கட்டப்பட்டது தான் இதற்கு முக்கிய காரணம்.
இந்திய தரநிலைக் கழக விஞ்ஞானிகள் தான் ஐஎஸ் கோடுகள் குறித்த வழிகாட்டுதல்களை உருவாக்கினர். ஒரு கட்டடத்தைக் கட்ட எந்தெந்தப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும், கட்டுமானம் செய்வது எப்படி மற்றும் கட்டடத்தை எப்படி வடிவமைப்பது உள்ளிட்ட பல தகவல்களை ஐஎஸ் கோடுகள் மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றன.
ஐஎஸ் கோடுகளைப் பயன்படுத்தி வீடுகள் மற்றும் கட்டடங்களைக் கட்டும்போது அவை பலமானதாகவும், நீண்ட காலத்திற்கு ஏற்றதாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். ஒரு வீடு பல்வகையான சுமைகளை தாங்க வேண்டியுள்ளது. ஆகையால் வீட்டின் உறுதித்தன்மைக்கு ஐஎஸ் கோடுகள் அவசியமாகிறது.
வீட்டில் குடியிருப்போர், பொருட்களின் சுமை, தீ விபத்து, காற்றழுத்தம், இயற்கை சீற்றங்கள் மற்றும் வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் பரிமாற்றங்கள் என பல்வேறு அம்சங்களை தாங்கி, வீடானது நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க, ஐஎஸ் கோடுகளின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
நிலத்தின் பரப்பளவு, கட்டடத்தின் உயரம் மற்றும் அகலத்திற்கு ஏற்ப, எஃகு மற்றும் கான்கிரீட்டின் அளவை ஐஎஸ் கோடுகள் பரிந்துரைக்கின்றன. ஐஎஸ் கோடுகளின் வழிகாட்டுதலைப் பின்பற்றி கட்டப்பட்ட வீடுகள், இயற்கைப் பேரிடர் காலங்களில் சேதாரம் ஏதுமின்றி உறுதியாக இருக்கும். இதைப் பின்பற்றினால் வீடு கட்டும் செலவு குறைவதோடு, வீட்டின் ஆயுளும் அதிகரிக்கும்.
ஒவ்வொரு வீடும் நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் தரமான வாழ்விடம் ஆகியவற்றைப் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம். இதற்கு இந்திய தரநிலைக் கோடுகளின் அடிப்படையில் நம் வீடு கட்டப்பட வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். ஐஎஸ் கோடுகளை முறையாக பின்பற்றுவது ஒரு தொழில்நுட்ப விதி மட்டுமின்றி, அனைவருடைய பொறுப்பாகும்.
இந்திய தரநிலைக் கோடுகள் கட்டடத்தின் அமைப்புக்கு ஏற்றவாறு பல வகைகளாக உள்ளன. ஐஎஸ் 875, ஐஎஸ் 1893 மற்றும் ஐஎஸ் 456:2000 ஆகிய கோடுகளின் அடிப்படையில் கட்டடம் கணக்கிடப்பட்டால், நம் வீட்டில் பாதுகாப்பும் நிலைத்தன்மையும் நிறைந்திருக்கும்.
1. ஐஎஸ் 383 - மணல், சிமெண்ட் மற்றும் கல் பொருள்களின் தர அளவுகோல்கள்
2. ஐஎஸ் 456:2000 - கான்கிரீட் கட்டடங்களுக்குத் தேவையான அடிப்படை வடிவமைப்பு
3. ஐஎஸ் 875 - வீடு தாங்கவிருக்கும் பல்வேறு சுமைகளைக் கணக்கிடும் விதிகள்
4. ஐஎஸ் 1893, ஐஎஸ் 13920 - நிலநடுக்கத்தை சமாளிக்கும் விதமான எதிர்ப்பு வடிவமைப்பு
5. ஐஎஸ் 3370 - நீர்த்தேக்க தொட்டிகளுக்கான வடிவமைப்பு.