

மும்பையின் மிக உயரமான கட்டடங்களில் ஒன்று 91 மாடிகளைக் கொண்ட லோகண்ட்வாலா மினெர்வா (Lokhandwala Minerva). இது மகாலட்சுமி பகுதியில் அமைந்துள்ளது. 2025ம் ஆண்டின் நிலவரப்படி மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள 88 தளங்கள் மற்றும் 320 மீட்டர் (1,050 அடி) உயரம் கொண்ட பாலைஸ் ராயல்( Palais Royale)தான் இந்தியாவின் உயரமான கட்டடமாக இருந்தாலும் 91 மாடிகள் என்ற எண்ணிக்கையில் மினெர்வா தனித்துவம் பெற்றுள்ளது.
தெற்கு மும்பையின் மிக முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க கட்டடங்களில் ஒன்றான லோகண்ட்வாலா மினெர்வா, நகரின் மிக உயரமான குடியிருப்பாக விளங்குகிறது. 301 மீட்டர் (988 அடி) உயரம் கொண்ட மொத்தம் 91 தளங்களைக் கொண்டு இந்தியாவின் மிக உயரமான 'கட்டி முடிக்கப்பட்ட' குடியிருப்பு கட்டடமாக இது கருதப்படுகிறது. இக்கட்டடம் புகழ் பெற்ற கட்டடக் லைஞர் ஹபீஸ் கான்ட்ராக்டரால் (Hafeez Contractor) வடிவமைக்கப்பட்டது. 2022ல் கட்டி முடிக்கப்பட்ட இந்தியாவின் மிக உயரமான, ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களில் இதுவும் ஒன்றாகும்.
முக்கிய வசதிகள்: இங்கு சொகுசான 3.5 BHK மற்றும் 4 BHK அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. நீச்சல் குளம், ஜக்குஸி, ஸ்பா, உடற்பயிற்சி கூடம், ஸ்குவாஷ் கோர்ட், பேட்மிண்டன் கோர்ட், யோகா மற்றும் தியான பகுதி, குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, உள் விளையாட்டு வசதிகள் என அனைத்து பொழுதுபோக்கு வசதிகளும் உள்ளன. கிளப் ஹவுஸ், விருந்து மண்டபம், வணிக லாபி, மாநாட்டு அறை, வைஃபை நெட்வொர்க், நூலகம் போன்ற வசதிகளுடன், 24x7 பாதுகாப்பு, CCTV, தீயணைப்பு அமைப்புகள், மின்சார மற்றும் நீர் விநியோகம், கார் கழுவும் பகுதி, உயரமான லாபி, இன்டர்காம் என அனைத்து வசதிகளும் உள்ளன.
இதன் மேல் தளங்களில் இருந்து அரபிக் கடல் மற்றும் மகாலட்சுமி ரேஸ் கோர்ஸின் அழகிய காட்சிகளைக் காண முடியும். இது 105 மீட்டருக்கும் அதிகமான அகலமும், 300.6 மீட்டருக்கும் அதிகமான உயரமும் கொண்ட இரண்டு இணைக்கப்பட்ட கோபுரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக உயரமான வானளாவிய கட்டடமான இதன் லிஃப்ட் அதிவேகமாக இயங்கும் திறன் கொண்டது. 91 மாடிகளை மாடிப்படிகள் ஏறி அடைய 1.5 மணி நேரம் ஆகும். ஆனால், இந்தியாவின் வேகமான லிஃப்ட்களில் ஒன்றான இந்த லிஃப்ட் வெறும் 55 செகண்ட்களில் கடந்து விடுகிறது. அதிவேக லிஃப்ட், நடைமேடை, தோட்டங்கள் போன்ற வசதிகள் உள்ளன. இந்த கோபுரம் அதிநவீன வசதிகளுடன் கூடிய சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டுள்ளது.
வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் இங்குள்ள குடிசைப் பகுதிகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. குடிசைவாழ் மக்களுக்கு இலவச இடமும் இருப்பிடமும் தரப்படும் என்ற உறுதி கொடுத்த பின்னரே கட்டட நிபுணர்கள் இந்த இடத்தை அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். ஸ்கை லவுஞ்ச் என்ற நட்சத்திர ஈர்ப்புடன் அனைத்து நவீன வசதிகளையும் வழங்கும் இது, நகரத்தின் முக்கிய வணிக மையங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக உயரமான முடிக்கப்பட்ட கட்டடங்களில் ஒன்றான இது மும்பையின் அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது.