'அறிவுசால் சொத்துரிமை' - இந்த சொத்தில் யாருக்கெல்லாம் பங்கு உண்டு?

Copyrights
Copyrights
Published on

அந்த காலத்தில் கிராமங்களில் இப்படி பேசிக் கொள்வார்கள்:

‘‘உங்கப் பையனை எங்கே காணோம்?’’ என்று ஒருவர் கேட்பார். அடுத்தவர், ‘‘அறிவுக் கொள்முதல் செய்யப் போயிருக்கான்,’’ என்று பதில் சொல்வார்.

அதாவது இவருடைய பையன் பள்ளிக்கூடம் சென்றிருக்கிறானாம்! ஒருவருடைய அறிவைச் செம்மைப்படுத்தி, ஆக்கபூர்வமான வழியில் செலவிட வழிகாட்டுபவைதான் கல்விக்கூடங்கள். அதாவது அறிவுக் கொள்முதல் கூடங்கள்!

இப்படிக் கல்வியை நன்கு கற்பதால், அதைத் தன் சொந்த அறிவுத் திறனுடன் இணைத்து பல புதுமைகளைப் படைக்க முடிகிறது மாணவரால். இது அனைவருக்குமே பொருந்தும். அற்புதமான கற்பனையில் உருவாகும் அந்தப் படைப்புகளுக்கு அவற்றை ஆக்கியவரே முழு உரிமை கொண்டாடத்தக்கவர் என்பது நியாயம்தானே? அந்தப் படைப்புகளைப் பிறர் எந்தவகையிலும் பயன்படுத்திக்கொள்வதோ அல்லது திருடி தன் உடைமையாக்கிக் கொள்வதோ குற்றம் என்று அகில உலக விதி ஒன்று உருவானது. இதுவே பதிப்புரிமை. ஸ்ரீலங்காவில் 'புலமை சொத்து' என்று அழைக்கிறார்கள்.

அசையும், அசையா சொத்துகள் எவ்வாறு குறிப்பிட்ட நபருக்கு உரிமை என்று சொல்லப்படுகிறதோ, அதேபோல இந்தக் கண்டுபிடிப்புகளும் அதைக் கண்டுபிடித்தவருக்கே சொந்தமாகும். அறிவுசார் சொத்துரிமையை மனிதனின் அறிவு, கண்டுபிடிப்புத் திறமைக்கான அங்கீகாரம் எனலாம். முறைப்படி பதிவு செய்து கொள்ளப்படும் இந்த சொத்துக்குப் பிறர் யாரும் சொந்தம் கொண்டாட முடியாதபடி கிடைக்கும் பாதுகாப்பு இது.

இந்த அறிவுசார் சொத்துரிமை பலவகைப்படும். முதலில் அறிமுகமானது, காபிரைட் (Copyright) எனப்படும் பதிப்புரிமை. தனிநபர் கற்பனையில் உருவான ஒரு புத்தகம், பாடல் அல்லது கணினி நிரல் போன்ற மூலப்படிவத்தை பிறர் யாரும் அச்சிடுதல், நகல் எடுத்தல், நிகழ் கலையாக்கம் செய்தல் என்று பயன்படுத்திக் கொள்ள முடியாதபடி, உருவாக்கியவருக்கே உரிமையாக்கும் சட்டம்.

இதையும் படியுங்கள்:
காசோலையில் கருப்பு மையைப் பயன்படுத்தக்கூடாது! - உண்மையா? வதந்தியா?
Copyrights

இரண்டாவதாக, டிரேட் மார்க் (Trade Mark) எனப்படும் வணிக முத்திரைகள். இது, வணிகத் தொழில் நிறுவனம் ஒன்று, தான் தயாரிக்கும் பொருட்களை வேறு நிறுவனமும் தயாரிக்கக் கூடாது என்பதற்கான தனித்த அடையாளம்.

மூன்றாவதாக பேடென்ட் (Patent) காப்புரிமை. ஒரு விளைபொருளை அல்லது கண்டுபிடிப்பைத் தயாரிப்பதற்கான, பயன்படுத்துவதற்கான அல்லது விற்பனை செய்வதற்கான அதிகாரபூர்வமான தனி உரிமை.

நான்காவதாக டிசைன் (Design) காப்புரிமை. ஒரு பொருளைத் தயாரித்தல், அதன் திறன், செய்முறை ஆகியவற்றைக் காட்டும் வரைபடம். பதிவு செய்யப்பட்ட அந்த டிசைனைப் பிறர் பயன்படுத்தினால் குற்றம்.

இவை தவிர, ஜியாகிரஃபிகல் இன்டிகேஷன் (Geographical Indication) எனப்படும் புவியியல் உரிமை; ப்ரொடக்ஷன் ஆஃப் ப்ளான்ட் வெரைடீஸ் ஃபார்மர்ஸ் ரைட்ஸ் (Production of Plant Varieties Farmers’ Rights) எனப்படும் விவசாய உரிமை; செமி கன்டக்டர் இன்டக்ரேடட் ஸர்க்யூட்ஸ் லேஅவுட் டிஸைன் (Semi Conductor Integrated Circuits Lay out Design) உரிமை என்றெல்லாமும் இந்தச் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

இதையும் படியுங்கள்:
நமது முதலீடுகள் ஓநாய்களிடம் மாட்டிக் கொள்ளாமல் எவ்வாறு பாதுகாப்பது?
Copyrights

புதுமையாக இணைய தளங்களை உருவாக்கி மாதந்தோறும் இரண்டரை லட்ச ரூபாய் சம்பாதிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவன்; குறைந்த அளவே நீர் பயன்படுத்தி, அதிக விளைச்சலையும், மகசூலையும் அளிக்கக்கூடிய உத்தியைக் கண்டுபிடித்த ஒரு மாணவி; கல்லூரி மாணவர்கள் நாலைந்து பேர் கூட்டாக போக்குவரத்து செயலியை உருவாக்கியது; வெப்பக் கடுமையை வீட்டினுள் உணராதபடி மேற்கூரையில் பாதுகாப்புக் கலவை பூச்சு என்று ஒரு நிறுவனத்தின் கண்டுபிடிப்பு; மக்கும் கழிவுப் பொருட்களை மின்சாரமாக மாற்றும் ஒரு கிராமத்தவரின் அரிய யோசனை, எழுத்து, இசை போன்ற கலை அம்சங்களில் புதுமை..... இவ்வாறு ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பலரும் பலவற்றை ஆக்கபூர்வமாகக் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவை எல்லாமே அறிவுசார் சொத்துகள்தான். இந்த சொத்துகள் பிறரால் அபகரிக்கப்படாமல் இருக்க அவற்றைப் பதிவு செய்துகொள்வதுதான் மிகவும் முக்கியம்.

(இசைஞானி இளையராஜா தன் இசைக்கு இவ்வாறு காப்புரிமை வாங்கியிருப்பதாகவும், அது சிலரால் மீறப்பட்டதால், அது குறித்து வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் செய்தி வந்ததே, அது ஒரு சமீபத்திய உதாரணம்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com