

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் ஜனவரி 1ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படும் புத்தாண்டு விழா ஒவ்வொரு வகையில் வேறுபடுகிறது. அந்த வகையில் சில கொண்டாட்டங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஜப்பானில் ஒவ்வொரு புத்தாண்டு தினத்தன்றும் கார்ப் என்ற மீனைச் சமைத்து சாப்பிடுவர். கார்ப் மீன் தண்ணீரிலிருந்து எம்பி வெகு உயரத்திற்கு குதிக்கும் தன்மை உடையது. மிக வேகமான சுழல் நீரிலும் நீந்தக் கூடியது. இந்த மீனை புது வருட நாளில் சாப்பிட, அந்த மீனை போன்ற சக்தியையும், சுறுசுறுப்பையும் தாங்களும் எல்லா நாளும் பெற முடியும் என்று அந்நாட்டு மக்கள் நம்புகிறார்கள்.
ரோம் நகரில் 40 நாட்கள் விரதமிருந்த பிறகே ஜனவரி முதல் தேதியை கொண்டாடி மகிழ்கின்றனர். கிறிஸ்துமஸ் விருந்து நன்றாக சாப்பிடாத இவர்கள் ஜனவரி முதல் தேதியில் விரதத்தை முடித்து நல்ல இனிப்பு வகைகளை உண்டு மகிழ்வர்.
ஸ்காட்லாந்து மக்கள் புத்தாண்டு தினத்தை ஹாக்மானே என்றழைக்கின்றனர். புத்தாண்டு அன்று வீட்டிற்கு விஜயம் செய்யும் முதல் விருந்தினர் யாராக இருந்தாலும் முத்தமிட்டு வரவேற்கிறார்கள். புத்தாண்டு அன்று வீட்டை பெருக்கவோ, சுத்தம் செய்யவோ மாட்டார்கள். அடுப்புகள் எரிந்து கொண்டிருக்கும், விளக்குகளையும் அணைக்க மாட்டார்கள்.
லாவோஸ் மக்கள் பறவையையும், தண்ணீர் பைகளில் மீனையும் வாங்கி அவற்றை சுதந்திரமாக பறக்க விடுவர். மீன்களை தண்ணீரில் விட்டு நீந்தச் செய்து விடுவர். புது நாளில் தாங்கள் செய்யும் ஒரு நற்காரியம் என்று அதை அவர்கள் நினைக்கிறார்கள்.
ஸ்பானிஷில் ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் கடிகாரம் இரவு மணி 12 அடிக்கத் தொடங்கியதும் திராட்சை பழங்களை உண்பர். 12 முறை 12 திராட்சைகளையும் தின்று விட்டால் பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாய் இருக்கும் என்று நம்புகிறார்கள்.
டென்மார்க்கில் புத்தாண்டு. பிறக்கும் இரவில் ஒரு பழைய பூட்ஸை எடுத்து நன்றாக கழுவி சுத்தம் செய்து அதில் நிறைய புது வண்ண மலர்களை நிரப்பி இரவில் தங்களுக்கு வேண்டியவர்கள், நண்பர்கள் வீட்டின் முன் வைத்து விட்டு வருவார்கள். இப்படிச் செய்வதால் ஆண்டு முழுவதும் பரிசளித்தவருக்கும், பரிசு பெற்றவருக்கும் மகிழ்ச்சி நிரம்பியதாய் இருக்கும் என்று நம்புகிறார்கள்.
புத்தாண்டை வெகு விமரிசையாகக் கொண்டாடுவது கொரிய மக்கள்தான். கொரிய அரசு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து விடும். முதல் தேதியில் வாழ்த்துக்களை பரிமாறியும், இரண்டாம் நாள் தங்களின் முன்னோர்களை வணங்கியும், மூன்றாவது நாள் விருந்து வைத்தும் கொண்டாடுவர். புத்தாண்டு அன்று கொரிய மக்கள் குடும்பத்துடன் பட்டம் விட்டு மகிழ்ச்சியாகக் கொண்டாடுவர்.
நார்வேயில் அரிசியில் பல பண்டங்களை செய்து அத்துடன் கீர் பாயஸம் பாதாம் பருப்பு போட்டு செய்வர். யாருக்கு பாதாம் வருகிறதோ அவர்களுக்கு அந்த ஆண்டு முழுவதும் செல்வம் தேடி வரும் என்பது நம்பிக்கை.
பிரேசில் நாட்டில் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும் என்று புத்தாண்டு அன்று வெள்ளை உடைகளை அணிகின்றனர்.
இப்படி பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டுகிறது.