
தேர்வுகள் முடியும்வரை எப்போது கோடை விடுமுறை வரும் என்றிருக்கும். ஆனால் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கியதும் என்ன செய்வது என்பது புரியாமல் குழப்பமாக ஒவ்வொரு நாட்களையும் செலவிட வேண்டியிருக்கும். எவ்வளவு நேரம் விளையாட முடியும்? எவ்வளவு நேரம் டிவி பார்க்க முடியும்? எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து செய்தால் மனதில் ஒரு சோர்வு ஏற்படும். இனி நாம் இந்த கோடை விடுமுறையை எப்படி பயனுள்ள வகையில் செலவிட முடியும் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
நூலகம் செல்லுவோம்:
நூலகம் என்பது நம் வாழ்வை முன்னேற்றும் ஒரு அறிவுக் கோவில் என்பதை சிறுவர்கள் உணர வேண்டும். நூலகத்தில் பலதரப்பட்ட புத்தகங்களும் செய்தித்தாள்களும் கிடைக்கும். தினமும் காலை ஒரு மணி நேரம் நூலகத்திற்குச் சென்று செய்தித்தாள் களையும், நல்ல கதைகள், கட்டுரைகள் முதலான நூல்களை படிக்கப் பழகலாம். இந்த பழக்கம் புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள மிகவும் பயன்படும்.
நீச்சல் பழகுவோம்:
நம் ஒவ்வொருவரும் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் நீச்சல். தற்காலத்தில் நீச்சலை பாதுகாப்பாகச் சொல்லித் தருவதற்கென்று விளையாட்டு நிறுவனங்கள் உள்ளன. அங்கே சேர்ந்து நீச்சல் பழகுவது உடல்நலத்திற்கும் நல்லது. நீர்நிலைகளில் சிக்கிக் கொள்ளும்போது நீச்சல் தெரிந்தால் நீந்தி தப்பித்துக்கொள்ள பயன்படும்.
வங்கிக்குச் செல்லுவோம்:
வங்கிகளில் பலவிதமான பணிகள் நடைபெறுகின்றன. பலர் வங்கி என்பது பணம் போடவும் பணத்தை எடுக்கவும் மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வங்கிக்களில் நகைக் கடன் கொடுப்பது, கல்விக்கடன் கொடுப்பது, வியாபாரத்திற்காக கடன் கொடுப்பது, பிக்சட் டெபாசிட் பெறுவது, கேட்புக்காசோலை வழங்குவது என பலவிதமான பணிகள் நடைபெறுகின்றன. பெற்றோர் அல்லது உறவினர் ஒருவருடன் வங்கிக்குச் சென்று அங்கு என்னென்ன பணிகள் நடைபெறுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.
தொழில் நிறுவனம் செல்லுவோம்:
உங்கள் ஊரில் உள்ள தொழில் நிறுவனங்களுக்குச் சென்று அங்கு பொருட்கள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதைப் பற்றி அறிந்து கொள்ளலாம். உங்கள் பகுதியில் சர்க்கரை ஆலை, பால் நிறுவனம், தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனம், சிறுசிறு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இருக்கலாம். அங்கு முறையான அனுமதி பெற்று பெற்றோர் அல்லது உறவினர் உடன் சென்று முழுவதுமாக சுற்றிப் பார்த்து பொருட்கள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்குச் செல்லுவோம்:
உங்கள் பகுதியிலோ அல்லது அருகில் உள்ள ஊர்களிலோ உள்ள கோட்டைகள், கோவில்கள், குடைவரைகள் முதலான வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் அமைந்திருக்கும். ஒருநாள் இந்த பகுதிகளுக்குச் சென்று அந்த இடத்தின் வரலாற்றையும் சிறப்புகளையும் பழமைகளையும் அறிந்து கொள்ளலாம்.
செடிகளை வளர்க்கலாம்:
உங்கள் வீட்டில் தோட்டம் இருந்தால் அதில் இரண்டு அல்லது மூன்று செடிகளை நட்டு நாள்தோறும் தண்ணீர் ஊற்றி வளர்க்கலாம். தோட்டம் இல்லையென்றால் பொது இடங்களில் சில செடிகளை நட்டு வளர்க்கலாம். இதனால் ஒரு செடி எப்படி வளர்கிறது என்பதையும் நாம் கற்கலாம். நம்மால் சுற்றுச்சூழலும் மேம்படும்.
இசையைக் கற்கலாம்:
உங்களுக்குப் பிடித்தமான ஒரு இசைக்கருவியை எப்படி இசைப்பது என்பதை கற்றுக் கொள்ள முயற்சி செய்யலாம். இசை மனதை லேசாக்கும். கோபத்தைக் குறைக்கும்.
பூங்காக்களுக்குச் செல்லலாம்:
மாலை வேளைகளில் உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள பூங்காக்களுக்குச் சென்று அங்கு மலரும் பூக்களை ரசிக்கலாம். பூங்காவிற்கு வரும் சிறுசிறு பறவைகளைப் பார்த்து மகிழலாம். ஒரு பறவை என்னென்ன செய்கிறது என்பதையும் கூர்ந்து நோக்கலாம். இவையெல்லாம் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும் செயல்களாகும்.
சமையல் கற்கலாம்:
சமையல் என்பது அனைவருக்கும் முக்கியமான விஷயமாகும். விடுமுறை தினங்களில் அம்மாவிற்கு சமையலில் உதவி செய்து அதை நீங்கள் கற்கலாம். நமக்காக அம்மா தினமும் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதையும் இதன் மூலம் நீங்கள் உணரலாம்.
வீட்டுக்குள்ளே விளையாடலாம்:
பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், கல்லாங்காய், பம்பரம் முதலான மறந்து போன பல விளையாட்டுக்கள் உள்ளன. இந்த விடுமுறையில் நீங்கள் நண்பர்களுடன் சேர்ந்து இத்தகைய பழமையான விளையாட்டுக்களை விளையாடி மகிழலாம்.
ஒன்றாக சாப்பிடலாம்:
தற்காலத்தில் வீடுகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் சாப்பிடும் வழக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள். விடுமுறை தினங்களில் அம்மா, அப்பா, தம்பி, அண்ணன், தங்கை என வீட்டில் உள்ள அனைவரும் ஒரே சமயத்தில் ஒன்றாக அமர்ந்து உணவைப் பரிமாறி சாப்பிட்டு மகிழலாம். இதுஒரு புதுவித அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் தரும்.