
சினிமாவுக்கு அடுத்த படியாக, அதிக ரசிகர்கள் உள்ளது கிரிக்கெட்டுக்கு தான் என்று சொல்ல வேண்டும். சினிமா ரசிகர்களை விட கிரிக்கெட் ரசிகர்கள் வெறித்தனமானவர்கள். அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் தோனிக்கு சிறுவர்கள் முதல் தாத்தா பாட்டிகள் வரை ரசிகர்க உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள், அதி தீவிரமான ரசிகர்களாக அறியப்படுகிறார்கள். ஐபிஎல் போட்டி தொடங்கி விட்டாலே இவர்களுக்கு ஆவேசம்தான். அதுவும் சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது என்றால் ரசிகர்களை கேட்கவா வேண்டும்; ஸ்டேடியத்தில் கூட்டம் அலைமோதும். இதில் தல தோனியை பார்க்க வரும் கூட்டம் தான் அதிகம்.
இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு நிகரான ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட கிரிக்கெட் தொடர் ஐ.பி.எல். முன்னணி வீரர்களும், வெளிநாட்டு வீரர்களும் இணைந்து விளையாடும் இந்த டி20 தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமைக்கு சொந்தக்காரராக உலா வரும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ். சமூக ஊடகங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 40.5 மில்லியன் பயனாளர்கள் பின்தொடருகின்றனர். வேறு எந்த அணிக்கும் இந்த அளவு பயனர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான 10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மார்ச் 21-ந்தேதி தொடங்கி மே 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது. ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தையும், இறுதி ஆட்டத்தையும் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் கடந்த நவம்பர் மாதம் 24 & 25-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது. இதற்கிடையில் விக்கெட் கீப்பர் ராகுல் திரிபாதி ரூ.3.4 கோடிக்கு வாங்கப்பட்டார். அஸ்வின் 10 ஆண்டுகளுக்கு பிறகு சிஎஸ்கே அணிக்கு திரும்பியிருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் பட்டங்களை வென்று கொடுத்து தலைமை தாங்கிய தோனி ஐபிஎல் 2025 போட்டியில் விளையாடுவாரா என்று சந்தேகம் எழுந்து வந்த நிலையில் சமீபத்தில் அவர் விளையாட உள்ளதை உறுதி செய்தார். இந்த செய்தியால் சந்தோஷம் அடைந்த தோனி ரசிகர்கள் அவரது ஆட்டத்தை காண ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடக்க காலத்தில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மஞ்சள் நிற சீருடையிலேயே ஆடி வந்தனர். இந்த ஐ.பி.எல். தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தாண்டு புதிய ஜெர்சியுடன் களமிறங்க உள்ளது. இந்த புதிய ஜெர்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒவ்வொரு சீசனிலும் பல அணிகள் ஸ்பான்சர்களாக திகழ்வது குறிப்பிடத்தக்கது. எதியாட் ஏர்வேஸ் இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு நேர ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.