
இந்தக் காலக்கட்டத்தில் நம்மில் பலரும் பல்வேறு காரணங்களுக்காக ஊர் விட்டு ஊர் வந்து ஒரு நகரில் குடியேறுகிறோம். அப்படிப் புதிய இடத்துக்கு வந்து குடியேறும்போது புதிய முகவரிக்கு நமது குடும்ப அட்டையை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை நமக்கு உள்ளது. அது நாம் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நமக்கு ஒதுக்கப்படும் உணவுப்பொருட்களை சிக்கல் எதுமின்றி பெறுவதற்கு உதவியாக இருக்கும். இந்த நிலையில், தற்போது நாம் வீட்டில் இருந்தபடியே நமது குடும்ப அட்டையில் முகவரியில் மாற்றம் செய்துக்கொள்ள முடியும். அதற்கு புதியதாகக் குடியேறிய முகவரியின் கேஸ் சிலிண்டர் பில் ஒன்று இருந்தாலே போதும்.
இதை எப்படிச் செய்வது?
முதலில் நமது கணினியில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதில் முகவரி மாற்றம் என்ற ஒரு லிங்கை கிளிக் செய்ய வேண்டும். அதில் நமது கைப்பேசி எண்ணை கொடுக்க வேண்டும். பின்னர், அதன் கீழ் கேட்கப்படும் கேப்சியா எழுத்துக்களை நிரப்ப வேண்டும். பின்னர் ஓகே கொடுத்தால்,கைப்பேசிக்கு ஓர் ஓடிபி வரும். அந்த ஓடிபியை பதிவு செய்த பின்னர் புதிய பக்கம் ஒன்று திறக்கும். அதில் நமது புதிய முகவரியை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேட்கும். அதற்கு பதில் அளிக்கும் வகையில் தகுந்த இடங்களில் நாம் மாறிய புதிய இருப்பிடத்தின் முகவரியின் விவரங்களை பதிவிட வேண்டும்.
அதில் வீட்டு எண், மாடி எண், கட்டடத்தின் பெயர், தெருவின் பெயர் அனைத்தையும் பிழையில்லாமல் ஆங்கிலத்தில் பதிவிட வேண்டும். அடுத்ததாக 2வது வரிசையில் மாவட்டம், தாலுகா, கிராமம் என எல்லாவற்றையும் தேர்ந்தெடுக்கும் வகையில் விவரங்களைக் கேட்கும். மூன்றாவது வரியில் கேட்கப்படும் அஞ்சல் குறியீட்டில் புதிய முகவரியின் அஞ்சல் குறியீட்டு எண்ணைக் கொண்டு சரியாக நிரப்ப வேண்டும்.
அதன் பிறகு இதே செயல்முறையின்படி முகவரியை தமிழிலும் நிரப்ப வேண்டும். இறுதியாக, புதிய முகவரியில் வசிப்பதற்கான ஆவணங்களின் நகல்களில் ஏதாவது ஒன்றை இணைக்க வேண்டும். அதற்கான ஆவணங்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கேஸ் பில், வீட்டு வரி ரசீது, வாடகை ஒப்பந்தம், மின்சார பில், வீட்டு ஆவணம், தொலைப்பேசி ரசீது, ஓட்டுர் உரிமம், வங்கி பாஸ் புத்தகம், பான் அட்டை, குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீட்டு ஆவணம், தபால் அடையாள அட்டை ஆகிய1 5 ஆகும். இவற்ரில் ஏதாவது ஒரு ஆவணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதை இணைத்த பின்னர் ஒரு வார காலத்தில் நமது குடும்ப அட்டையில் முகவரி மாறி இருக்கும். நமது புதிய இருப்பிடத்திற்கு அருகில் உள்ள பொது விநியோகக் கடையின் பதிவேட்டில் நமது பெயர் சேர்க்கப்பட்டிருக்கும். பழைய கடை பதிவேட்டில் நமது குடும்ப அட்டை நீக்கப்பட்டிருக்கும்.
இனி, புதிய கடையின் மூலம் நாம் அரசின் அனைத்து சலுகைகளையும் பெற முடியும். பின்னர் புதிய முகவரியில் நமக்கான ஸ்மார்ட் அட்டையை அதற்கான கட்டணத்தினைக் கட்டி பெற முடியும். ஆனால், புதிய அட்டையினைப் பதிவு அஞ்சல் மூலம்தான் பெற முடியும். அதனைப் பெறுவதற்கு இரண்டு மாத காலம் ஆகலாம். அதுவரை பழைய அட்டையையே பொது விநியோகக் கடையில் காட்டி உணவுப் பொருட்களையும், அரசின் இதர சலுகைகளையும் நாம் பெற்றுக் கொள்ளலாம்.