
‘ஆண் அம்மா’ என்பவர் மென்மையானவர்களாகவும், அமைதியானவர்களாகவும், இயல்பிலேயே பெண்மை குணம் நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும். இந்த ஆண் அம்மா கலாசாரம் இப்பொழுது சீனாவில் வைரலாகி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் பொருளாதார தேவைக்காகப் பாடுபடுவது மன அழுத்தத்திற்கான காரணத்தை அதிகரிக்கிறது. அத்துடன் அதிகரித்து வரும் வேலை பளு, கலாசாரத்தில் மாற்றம், எடுத்துக்கொள்ளும் உணவுகளில் ஏற்படும் மாற்றம், குடும்ப சூழல், காதல் தோல்வி என இளம் பெண்கள் ஏகப்பட்ட மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
இந்த மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக பல்வேறு முயற்சிகளும், சிகிச்சைகளும் என அதற்கான தீர்வுகளை நோக்கி பலரும் நகர்ந்து கொண்டிருந்தாலும், சமீப காலமாக சீனாவில் இந்த 'ஆண் அம்மா' கலாசாரம் அதிகரித்து வருகிறது.
ஆண் அம்மா கலாசாரம் இளம் பெண்களின் மன அழுத்தத்தை மிகவும் குறைப்பதாக நம்புகின்றனர். எனவே, மால் போன்ற பொது இடங்களில் ஐந்து நிமிடங்கள் மட்டும் ‘ஆண் அம்மா’ என்றழைக்கப்படும் இளைஞரை அணைத்துக் கொள்வதற்கு நம்மூர் ரூபாய் மதிப்பு 250 முதல் 600 வரை கட்டணம் செலுத்தி இளைஞர்களை அணைத்துக் கொள்கிறார்கள் (20 முதல் 50 யுவான் வரை). இதுபோன்ற அணைப்பு இளம் பெண்களுக்கு அவசரமான இந்த உலகில் ஒரு ஆறுதலைத் தருவதாக நம்புகின்றனர். அத்துடன் அவர்களின் மன அழுத்தமும் வெகுவாக குறைவதாக நம்புகிறார்கள்.
ஆண் அம்மாவை அணைத்துக் கொள்வதன் மூலம் தாங்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்வதாகவும், மன அழுத்தம் நீங்குவதாகவும், அதற்காக பணம் செலுத்தத் தயாராக உள்ளதாகவும் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கிறார்கள். மன அழுத்தத்தையும், பரபரப்பான சூழ்நிலையையும் தவிர்க்க இந்த ஆண் அம்மாவின் அரவணைப்பு தேவையாக உள்ளதாகக் கூறுகிறார்கள்.
ஆண் அம்மாக்களாக சேவை செய்பவர்கள், இது பதற்றம் மற்றும் வேலை தொடர்பான அழுத்தத்துடன் போராடுபவர்களுக்கு உதவுவதாகவும், இதற்காக கட்டணம் வசூலிப்பது தொழில்முறை என்ற அடிப்படையில்தான் என்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால், இந்தப் போக்கை பலரும் விமர்சித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.