அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய மிகவும் ஏற்ற நாள். புதிய தொடக்கங்கள் மற்றும் நோக்கங்களை அமைப்பதற்கான நாளாக கருதப்படுகிறது. அமாவாசை நாளுக்கும் மனிதர்களின் மனநிலை மாற்றங்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
உயிரியல் ரீதியான தாக்கங்கள்: சந்திரனின் சுழற்சி முறையில் வேறுபாடுகள் நிகழும்போது சில உயிரியல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சந்திரனின் புவியீர்ப்பு கடல் அலைகளை பாதிக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால், மனித உயிரியலில் அதன் நேரடித் தாக்கம் பற்றி இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
முன்னோர்களுக்கான வழிபாடு: அமாவாசை நாள் என்பது முன்னோர்களுக்கான வழிபாடுகளுக்கு ஏற்ற நாள். அமாவாசையை சுற்றியுள்ள கலாசார நிகழ்வுகள் மற்றும் சடங்குகள் சமூக உணர்வையும் மக்களின் மன ஆரோக்கியத்தை சாதகமாக மாற்றவும் செய்கிறது. அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்படுவது வழக்கம். அந்த நாளின்போது தங்கள் மூதாதையர்கள் மற்றும் முன்னோர்கள் தங்கள் சந்ததியினருக்கு பலவிதமான சுபிட்சங்களை வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது. நதி அல்லது கடற்கரையில் சென்று தர்ப்பணம் செய்யப்படுகிறது. இதனால் முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடையவும், பித்ரு தோஷம் நீங்கி, குடும்பம் விருத்தி அடையும், செல்வம் பெருகும், மகப்பேறு கிட்டும் என்பது மக்களின் நம்பிக்கை.
ஜோதிட நம்பிக்கைகள்: ஜோதிட நம்பிக்கைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு அமாவாசை நாள் பெரும்பாலும் உணர்ச்சி சிகிச்சைக்கான ஒரு சக்தி வாய்ந்த நேரமாகக் கருதப்படுகிறது. இந்த நம்பிக்கை மனிதர்களின் மன அணுகுமுறைகளை வடிவமைக்கும் மற்றும் நடத்தை மாற்றங்களை ஊக்குவிக்கும் என்று கருதப்படுகிறது.
உளவியல் ரீதியான தாக்கங்கள்: மனித உணர்வுகளுக்கும் அமாவாசைக்கும் இடையிலான தொடர்பைப் பற்றி உளவியலில் ஒரு உறுதியான முடிவு எட்டப்படவில்லை. ஆனால், சாத்தியமான தொடர்புகளை ஆராயும் சில பகுதிகள் உள்ளன. புதிய நிலவு மக்களின் மனநிலை அல்லது நடத்தைகளை பாதிக்கிறது என்று தனி நபர்கள் நம்பினால் அந்த நம்பிக்கைகள் உளவியல் விளைவுகளுக்கு வழிவகுக்கலாம். இது மருந்துப் போலி போன்ற விளைவின் நிரூபணம் போன்றது. மருத்துவர் கொடுக்கும் மருந்தை இது தனக்கு நன்மை செய்யும், நோயைத் தணிக்கும் என்று ஒருவர் மனதார நம்பினால் மட்டுமே அந்த மருந்து வேலை செய்து அவருக்கு ஆரோக்கியத்தைத் தரும். அதுபோல அமாவாசை நாள் என்பது புதிய நாளுக்கான தொடக்கம் என்று ஒருவர் நம்பினால் அவரது எதிர்பார்ப்புகள் மற்றும் உணர்ச்சிகள் நேர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
தூக்கம் முறைகள்: அமாவாசை நாள் அன்று வானில் நிலவு இல்லாமல் இருட்டாக இருக்கும். இது சில நபர்களுடைய ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கிறது. உணர்ச்சி கட்டுப்பாடுகளில் தூக்கம் முக்கியப் பங்கு வகிப்பதால் உறக்கத்தில் ஏற்படும் மாற்றங்களும், மனநிலை மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மையும் பாதிக்கலாம்.
இயற்கை சுழற்சிகள்: சில கோட்பாடுகள் மனிதர்கள் சர்க்காடியன் மற்றும் அல்ட்ராடியன் ரிதங்கள் உட்பட இயற்கையான ரிதங்களால் பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றன. மனிதர்கள் இயற்கை சுழற்சிகளுடன் ஒத்துப்போகிறார்கள் என்கிற எண்ணம் அவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கலாம்.
ஆன்மிக ரீதியான ஈடுபாடு: அமாவாசை நாளன்று குலதெய்வ கோயிலில் வழிபாடு செய்வது, தியானம் மற்றும் உணர்ச்சி சுத்திகரிப்புக்கான சக்தி வாய்ந்த நேரம் என்று மக்கள் கருதுகிறார்கள். சில புதிய செயல்களைத் தொடங்கவும் ஆன்மிக ரீதியான செயல்களைச் செய்யவும் இந்த நாளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
அமாவாசையின் உணர்ச்சித் தாக்கம் குறித்து தெளிவான அறிவியல் கருத்து இல்லை என்றாலும், தனிப்பட்ட நம்பிக்கைகள், கலாசார விவரிப்புகள் மற்றும் தனிப்பட்ட உளவியல் வழிமுறைகள் ஆகியவை மக்களின் உணர்ச்சிகள் மற்றும் நடத்தைகளை பாதிக்கலாம் என்று தெரிகிறது.