
ஆட்டுச் சந்தை, மாட்டுச்சந்தை, மீன் சந்தை, காய்கறி சந்தை என பலவற்றைப் பற்றிக் கேள்விபட்டிருப்போம். ஆனால், இட்லி சந்தையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமா? ஆமாம், இட்லிக்கு என்று ஒரு சந்தை இருக்கிறது. அது பற்றி இந்தப் பதிவில் அறிவோம்!
தமிழ்நாட்டின் ஈரோட்டில் உலகப் புகழ் பெற்ற இட்லி சந்தை ஒன்று உள்ளது. இது பாரம்பரிய சந்தையைப் போலவே செயல்படுகிறது. இங்கு தினசரி நாளொன்றுக்கு சுமார் 20 ஆயிரம் முதல் 30,000 இட்லிகள் வரை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சந்தையில் காய்கறிகள், பூக்கள் விற்பனை செய்யப்படும் சந்தைகள் போலவே இட்லிகளும் விற்கப்படுகின்றன.
ஈரோட்டின் அடையாளமாக மாறிய இட்லி சந்தை சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. ஈரோட்டில் உள்ள கருங்கல்பாளையத்தில் தினமும் இட்லிகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அதுவும் முகூர்த்த நாட்களில் ஒரு லட்சம் இட்லி வரை கூட விற்பனையாகும் என்று சொல்லப்படுகிறது. இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது.
பழனி பஞ்சாமிர்தம், மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஊட்டி வர்க்கி, விருதுநகர் பரோட்டா வரிசையில் ஈரோட்டின் அடையாளமாக இட்லி சந்தை மாறியுள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் மாட்டுச்சந்தை ஒன்று இருந்துள்ளது. ஈரோடு கருங்காலய மாட்டுச்சந்தை மிகவும் பிரபலமானது. இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வந்து மாடுகளை வாங்கிச் செல்வார்கள். அவர்களின் பசியைப் போக்குவதற்காக இங்கு முதலில் இட்லி கடைகள் ஆரம்பிக்கப்பட்டன.
காலையில் சந்தைக்கு வருபவர்கள் இங்கு இட்லி சாப்பிடுவதுடன் வீட்டிற்கும் பார்சல் வாங்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். பலர் இங்கு இட்லி சாப்பிடுவதற்காகவே வர ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் அதிகாலையில் ஆவி பறக்க சுடச்சுட இட்லிகளை சுவைத்த பிறகுதான் விற்பனையே துவங்கும் என்ற நிலை உருவானது. மக்களின் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க இட்லி கடைகளும் விரிவானது. மாட்டுச்சந்தை இடம் மாறியபோதும் இந்தப் பகுதியில் இட்லி சந்தை தொடர்ந்து இயங்கி வருகிறது. இப்போது இப்பகுதிகள் முழுக்க இட்லி சந்தையாகவே மாறிவிட்டது.
இட்லி சந்தை பிரபலமடைந்ததால், ஈரோடு அருகில் உள்ள சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நடக்கும் விசேஷங்கள், கோயில் விழாக்கள், திருமணம் போன்ற பலவற்றுக்கும் காலை உணவுக்கு இங்கிருந்துதான் இட்லி சப்ளை செய்யப்படுகிறது. அத்துடன் ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரங்களிலும் பெரும்பாலான ஓட்டல்களுக்கு இங்கிருந்துதான் இட்லி எடுத்துச் செல்லப்படுகிறது. அதிகாலை முதல் இரவு 10 மணி வரையிலும் சுடச்சுட இட்லிகள் அதற்கு பக்கவாத்தியங்களான சட்னி வகைகளுடன் கிடைக்கிறது.
மிகவும் மென்மையான மல்லிகைப் பூ இட்லி, குஷ்பூ இட்லி, இளநீர் இட்லி, ரவா இட்லி, ஜவ்வரிசி இட்லி, சாண்ட்விச் இட்லி, மிளகு, சீரகம், கொத்தமல்லி சேர்த்த காஞ்சிபுரம் இட்லி, கப் இட்லி, மினி இட்லி என அனைத்து வகை இட்லிகளும் இங்கு கிடைக்கின்றன.
என்ன மக்களே… ஈரோடு பக்கம் போனீர்கள் என்றால், அப்படியே கொஞ்சம் இந்த இட்லி சந்தைக்கும் போய் சாப்பிட்டுதான் பாருங்களேன!