
குழந்தைகள் சிலர் தொலைக்காட்சியில் வன்முறை சம்பவங்களைப் பார்த்து விட்டாலோ, பெரியவர்கள் சாப்பிடும்பொழுது ஏதாவது பேய், பிசாசு கதைகள் சொல்லி பயமுறுத்திவிட்டாலோ தூக்கத்தில் எழுந்து அழுவார்கள். காரணம் கேட்டால் ஒருவித பயத்துடன் விழிப்பார்கள். அவர்களின் பயத்தைப் போக்குவதற்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
பீதி, அச்சம், மனதில் எழும் சஞ்சலங்கள், சோர்வுகள் போன்ற உணர்வு ரீதியான பிரச்னைகள் ஏற்படும்போது குழந்தைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பு தேவை. கோபத்திலும், பயத்திலும், ஆனந்தத்திலும் சமநிலை இழப்பு, கட்டுப்பாடு இழப்பு ஏற்படுவது எல்லோருக்கும் நிகழும் பொதுப் பிரச்னை. அதுபோன்ற நேரங்களில் பெற்றோர்கள் குழந்தையை அரவணைத்து ‘நாங்கள் இருக்கிறோம்; பயப்படாதே. இது கஷ்டமானது இல்லை. இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாய்?’ என்று கேட்டு முத்தம் கொடுக்கலாம். பிள்ளைகளை அரவணைத்து முதுகில் தடவி விடலாம். குழந்தைகளின் கரங்களைப் பற்றிக் கொள்ளலாம்.
விளையாட்டுப் பொருட்களின் மீது கவனத்தைத் திருப்பலாம். தூங்கும்போது பக்கத்திலேயே நெருக்கமாயிருந்து இரவில் வெளிச்சம் இருக்குமாறு லைட்டை போட்டு வைக்கலாம். தனிமையில் விடாமல் பார்த்துக் கொள்ளலாம். பிள்ளைகளுக்கு ஏற்ற நிகழ்ச்சிகளை டிவியில் பார்க்கும்போது அருகாமையில் இருந்து பிள்ளைகளுடன் சேர்ந்தே பார்க்கலாம். பிள்ளைகளுடன் சேர்ந்து இருக்கும் நேரத்தை அதிகரிக்கலாம். பிள்ளைகளுக்கு நெருங்கியவர்களையும், தெரிந்தவர்களையும் கூறி அவர்களும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறலாம்.
பிரச்னைக்கு உரியவர்கள் உங்கள் அருகில் இல்லை என்பதை தெளிவாகக் கூறி , நம்மைச் சுற்றி இருக்கும் இடம் மிகவும் பாதுகாப்பானது என்பதை பயந்த பிள்ளைகளுக்கு உணர்த்துவதும் மிகவும் முக்கியம். பிள்ளைகளின் மனநிலை மாற்றங்களை கவனித்து அதை சமநிலைக்குக் கொண்டு வர வேண்டும். தூக்கத்தில் பயப்படுவார்கள். ஏங்கிப் போவார்கள். திடுக்கிடுவார்கள், திடீரென கண் விழித்துப் பார்ப்பார்கள். அப்பொழுது பிள்ளைகளுடன் சேர்ந்து அவர்கள் போக்கில் போய் அவர்களை மாற்ற வேண்டும்.
பிள்ளைகளின் கேள்விகளுக்கு அவர்களின் சுய மதிப்பு, தன் உணர்வு பாதிக்காதபடி நடைமுறைகளுக்கு சாத்தியமான பதில்களைக் கூற வேண்டும். அவர்களுக்கு தேவையற்ற கற்பனைகளை உருவாக்கி விடக் கூடாது . தெரியாததை தெரியாது என்று கூற வேண்டும். நன்கு தெரிந்த பின்பு அவர்கள் கேட்டவற்றுக்கு பதில் அளிக்கலாம்.
இதுபோல் நடந்து கொண்டால் உங்களின் உண்மை தன்மைகளை பிள்ளைகள் மதிப்பார்கள். அதை விடுத்து நீங்கள் பொய்யாக நடித்துக் கதைத்தால், பிள்ளைகளின் நம்பிக்கையை இழப்பீர்கள். பிள்ளைகள் உங்களை நம்ப மாட்டார்கள். ஆதலால், பிள்ளைகளின் நம்பிக்கையை எக்காரணத்தை கொண்டும் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.
இரவில் பிள்ளைகள் அமைதியாக தூங்குகிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். உணவு சரிவர உட்கொள்கிறார்களா என்பது முக்கியம். இவர்களை மேலோட்டமாக அவதானிக்க வேண்டும். படிக்கும்போது மனம் ஒரு நிலையில் இருக்கிறதா என்பது மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். குழந்தைகள் பயந்து இருக்கும்பொழுது அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்கள்தான் அவர்களுடன் பேச வேண்டும். குழந்தைகள் அவர்களைத்தான் நம்புவார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக பத்திரிக்கை, தொலைக்காட்சி, பொது இடங்களில் பார்க்கும் வித்தியாசமான உடைகள், உணவுகள், மத அடையாளங்கள், கலாசாரங்கள் போன்ற வித்தியாசங்கள் குழந்தைகளின் கண்ணுக்குப் புலப்படும். அதனால் குழம்பிப் போவார்கள். அவற்றை தெளிவுபடுத்த வேண்டியது பெற்றோரின் கடமை.
இவற்றை சரிவர செய்தால் குழந்தைகள் பாதுகாப்பு உணர்வை உணர்வார்கள். பயத்திலிருந்தும் மீள்வார்கள்.