
பொதுவாக, மணி பிளாண்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும், கடன் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை. இந்தச் செடியை அனைவரும் எளிதாக வீட்டில் வளர்க்கலாம். அதேபோல் விருப்பப்பட்ட இடத்தில் வைத்தும் வளர்க்கலாம் என்பதால் அனைவரும் வளர்க்கக்கூடிய ஒரு செடியாக இது உள்ளது.
மணி பிளாண்டை வாஸ்து முறைப்படி வளர்க்க நல்ல பலனைப் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. இது தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு செடி வகையாகும். மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இது மிகவும் பிரபலம். இது வீட்டை அலங்கரிப்பதோடு, வீட்டிலுள்ளோருக்கு பாசிட்டிவ் எனர்ஜியையும் தரும் ஒரு செடியாகும்.
இதை வளர்ப்பதற்கு பெரிய இடமோ, செலவோ ஆகாது. இச்செடி ஒவ்வொரு இலையாக துளிர் விட்டு வளரும் இயல்புடையது. இதயம் போன்ற வடிவில் இலைகளைக் கொண்டு இது வளரக் கூடியது. இந்தச் செடியை சரியான திசையை அறிந்து வைத்து வளர்த்தால் சரியான பலன்களைப் பெறலாம். வாஸ்து நிபுணர்கள் மணி பிளாண்ட்டை தென்கிழக்கு திசை நோக்கி வளர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
இந்த திசையில்தான் மணி பிளாண்ட் நன்கு வளரும் மற்றும் இதனால் செல்வமும் பெருகும். யோகமும் பெற முடியும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. விநாயகருக்கு உகந்த திசையாக தென்கிழக்கு கருதப்படுகிறது. இது சுக்ரனை பிரதிநிதித்துவம் செய்யும் திசை எனவும் கூறப்படுகிறது.
இந்தக் காரணங்களுக்காகத்தான் மணி பிளாண்டை இந்த திசையில் வைக்கச் சொல்கிறார்கள். செல்வம் பெருக, விநாயகரின் அருளைப் பெற தென்கிழக்கு திசையில் மணி பிளாண்ட் செடியை வளர்க்கச் சொல்கிறார்கள். இந்தச் செடி வளர்ப்பின் காரணமாக சுக்ரனின் பார்வை பட்டு குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. வடகிழக்கில் வைக்க வேண்டிய துளசி செடியை வடக்கிலும் வைக்க வீட்டிற்கு சரியான எனர்ஜியை தரும்.
மணி பிளாண்ட்டை மண்ணிலும், நீரிலும் வளர்க்கலாம். அவரவர் விருப்பத்திற்கேற்ப சரியான திசையில் வைத்து வளர்க்க நல்ல பலன்கள் முழுமையாகக் கிடைக்கும். இந்தச் செடியில் ஓரிரு இலைகள் வாடினால் கூட உடனே அந்த இலைகளை அகற்றி விட வேண்டும். இது எதிர்மறை விளைவை தருவதோடு, செடியையும் பாழாக்கி விடும். எனவே, வீட்டில் வளர்க்கும் மணி பிளாண்ட் தாவரத்தை திசை அறிந்து வைக்க, குடும்பத்தில் மகிழ்ச்சி எந்நாளும் நீடித்திருக்கும்.