
சமையலறை என்பது நம் வீட்டு பூஜை அறைக்கு சமமானது. இறைவனுக்குப் படைக்கும் நைவேத்தியப் பொருட்களிலிருந்து அலங்கரிக்கப் பயன்படுத்தும் பூக்கள் வரையிலான அனைத்தையும் எவ்வளவு நேர்த்தியாகத் தேர்ந்தெடுத்து செய்கிறோமோ, அதே நேர்த்தியுடன் சமையல் அறையையும் சுத்தமாக வைத்துப் பராமரிப்பது அவசியமாகிறது.
தற்போதைய நவீன காலத்தில், அநேகரது வீடுகளிலும் டைல்ஸ் பதித்த தரைகளையே காண முடிகிறது. டைல்ஸ் பராமரிப்பு என்று வரும்போது, சமையல் அறை தவிர்த்து மற்ற அறைகளை தண்ணீருடன் சிறிது லிசோல் (Lizol) போன்ற திரவத்தை சேர்த்து தரையை துடைத்து விட்டாலே தரை ‘பளபள’வென்று ஆகிவிடும்.
இதேபோல், சுலபமாக சமையலறை டைல்ஸ்களை சுத்தப்படுத்தி விட முடியாது. இரண்டு டைல்ஸ்களுக்கு இடையில் சேர்ந்திருக்கும் அழுக்குகளை நீக்க கூடுதல் கவனம் தேவை. அதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான சில ஆலோசனைகளை இப்பதிவில் பார்க்கலாம்.
1. தண்ணீரையும் வினிகரையும் சம அளவில் கலந்து, அதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி சமையல் அறை டைல்ஸ்கள் மீது தெளியுங்கள். சில நிமிடங்கள் வரை ஊற விடுங்கள். பின்பு வழக்கம் போல் தரையைத் துடைத்து விடுங்கள். தரை சுத்தம் ஆகிவிடும்.
கறை அதிகமாக இருந்தால், பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரைக் கலந்து பேஸ்ட்டை உருவாக்கி, கறை உள்ள இடங்களில் தடவி, சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு அந்த இடங்களை ஸ்பாஞ்ச் வைத்து தேய்த்து சுத்தப்படுத்தி விடலாம்.
2. சமையலறை டைல்ஸ்களை சுத்தப்படுத்துவதற்கென்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சில டைல்ஸ் கிளீனர்களும் கடைகளில் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கியும் உபயோகப்படுத்தலாம். ஒரு கப் தண்ணீரில் ஒரு கைப்பிடி கல் உப்பு மற்றும் சிறிதளவு டூத் பேஸ்ட் சேர்த்துக் கரைத்து அந்த லிக்விட்டை தரையில் தெளித்துப் பின்னர் மாப் போட்டு துடைத்து விட்டால் தரை பளபளப்புப் பெறுவதுடன், மனதில் நேர்மறை எண்ணங்களும் உருவாகும்.
3. சமையலறை மேடை மீது வைக்கப்பட்டிருக்குக்கும் அடுப்பிற்குப் பின்னால் உள்ள சுவற்றின் மீதும் சிறிது உயரத்திற்கு டைல்ஸ் பதிக்கப்பட்டிருக்கும். சமைக்கும்போது தெறிக்கும் எண்ணெய் சுவற்று டைல்ஸ் மீது படர்ந்து பிசுபிசுவென ஒட்டிக்கொண்டிருக்கும். அதன் மீது பேக்கிங் சோடா பேஸ்ட்டை தடவி சிறிது நேரம் ஊற விட்டு பின்னர் துணியால் துடைத்து விடலாம்.
இதற்கு இன்னொரு முறையையும் கையாளலாம். இரண்டு டம்ளர் தண்ணீரை சூடுபடுத்தி அதில் ஒரு ஸ்பூன் சர்ஃப் (Surf) மற்றும் ஒரு ஸ்பூன் குக்கிங் சோடா சேர்த்து நன்கு கரைத்து, அந்தக் கரைசலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, எண்ணெய்ப் பிசுக்குள்ள இடங்கள் முழுக்க ஸ்ப்ரே பண்ணி விடுங்கள். சிறிது நேரம் கழித்து ஒரு ஈரமான ஸ்பாஞ்சின் உதவியால் பிசுக்குகள் அனைத்தையும் துடைத்து வழித்தெடுத்து விடுங்கள். டைல்ஸ் சுத்தமாகிவிடும். உலர்ந்த காட்டன் துணியால் மீண்டும் துடைத்து உலர விடுங்கள்.
அதேபோல், கால் கப் ரெட் ஹார்பிக், கால் கப் வினிகர் மற்றும் இரண்டு ஸ்பூன் டூத் பேஸ்ட் கலந்து கரைத்து ஒரு லிக்விட் தயாரித்து அதை எண்ணெய் கறைகள் மீது தடவிப் பின் ஸ்பாஞ்ச் வைத்து தேய்த்துக் கழுவியும் சுத்தம் செய்யலாம்.
4. டைல்ஸ்களின் மீது படிந்துள்ள கடின நீர் கறைகளை அகற்ற, அவற்றின் மீது ஃபிரஷ் எலுமிச்சை ஜூஸைப் பிழிந்து சில நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு ஒரு மென்மையான பிரஷ்ஷால் தேய்த்து தண்ணீர் விட்டு கழுவி விடவும். ப்ளீச்சிங் பவுடர் மற்றும் ஆசிட் போன்றவையும் டைல்ஸ்களுக்கு இடையில் சேர்ந்திருக்கும் அழுக்கை நீக்கப் பயன்படும் என்றாலும், அவை டைல்களின் நிறத்தையும் சேர்த்து அரித்து மாற்றிவிடும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நலம்.