
வீடுகளில் பொதுவாக ஒரு குழந்தைக்கு 8 நிமிடங்களில் ஒரு முறை ஏதாவது ஒரு விதத்தில் தவறான முறையில் மருந்து வழங்கப்படுகிறது என்கிறது ஓர் ஆய்வு. பொதுவாக, குழந்தைகளின் வயது மற்றும் எடையை பொறுத்துதான் சொட்டு மருந்துகளின் அளவு தீர்மானிக்கப்படுகின்றன. அதைக் கொடுக்கும்போது இதன் அளவு அதிகமாக அல்லது குறைவாக கொடுப்பது குழந்தைகளுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும்.
குழந்தைகளுக்கு காய்ச்சலுக்குக் கொடுக்கப்படும் பாராசிட்டமால் சொட்டு மருந்து குழந்தைகள் வயது மற்றும் எடைக்கு தகுந்தவாறு 120mg/5ml, 125mg/5ml, 250mg/5ml என்று மூன்று வகைகளில் கிடைக்கிறது. பாராசிட்டமால் மருந்து அவசியமானதுதான் என்றாலும் அதை அளவிற்கு அதிகமாகக் கொடுக்கும்போது அது சிறுநீரகக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
ஒரு மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு லேசானது முதல் மிதமான வலி மற்றும் காய்ச்சலுக்கு நீங்கள் பாராசிட்டமால் பயன்படுத்தலாம். பாராசிட்டமால், குழந்தைகள், இளம் குழந்தைகள் மற்றும் பெரிய குழந்தைகள் உட்பட வெவ்வேறு வயதினருக்கு வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. அதிகப்படியான அளவு ஆபத்தானது என்பதால், உங்கள் குழந்தையின் வயது மற்றும் எடைக்கு ஏற்றவாறு சரியான அளவு மருந்தை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைக்கு எவ்வளவு பாராசிட்டமால் கொடுக்கலாம் என்பது அவர்களின் வயது மற்றும் எடையைப் பொறுத்தது. நீங்கள் எப்போதும் சரியான மருந்தளவு தகவலைப் பின்பற்ற வேண்டும்.
உங்கள் பிள்ளைக்கு ஒவ்வொரு 4 முதல் 6 மணி நேரத்திற்கும் ஒரு முறை பாராசிட்டமால் கொடுக்கலாம். ஆனால், 24 மணி நேரத்தில் 4 முறைக்கு மேல் கொடுக்கக் கூடாது. உங்கள் பிள்ளை 48 மணி நேரத்திற்கும் மேலாக பாராசிட்டமால் எடுக்க வேண்டியிருந்தால், ஒரு மருத்துவரைப் பார்க்கவும்.
குழந்தைகளுக்கு இருமலுக்கு கொடுக்கப்படும் குரோசின் டானிக் கொடுக்கும்போது டாக்டர்கள் சிபாரிசு செய்தபடியே கொடுக்க வேண்டும்.அளவிற்கு அதிகமாக கொடுக்கும்போது அது பயங்கர பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள். பொதுவாக, டானிக் மருந்துகளின் பாட்டில் மூடிகளில் மருந்து கொடுக்கும் அளவுகளுடன் வருகிறது. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்படி மருத்துவர்கள் சொல்லும் அளவிற்கு மட்டுமே கொடுக்க வேண்டும். அந்த நேரத்தில் மருந்து கொடுக்க ஸ்பூன்களை பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள். உதாரணமாக, அதில் 7ml மருந்து கொடுக்க வேண்டும் என்றால் அந்த அளவுக்குதான் கொடுக்க வேண்டும். குழந்தைகள் அதன் சுவைக்கு ஆசைப்பட்டு அதிகமாக கேட்கிறது என்று அதிகமாகக் கொடுக்கக் கூடாது.
சில நேரங்களில் டாக்டர் 0.5ml மருந்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்றால் அப்படியேதான் தர வேண்டும். அதை விடுத்து தவறுதலாக 5ml கொடுத்தால் என்னவாகும். அது டாக்டர் குறிப்பிட்டதை விட 10 மடங்கு அதிகம். எனவே, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கும்போது கவனமாக பார்த்து டாக்டர் பரிந்துரைத்தபடியே உள்ள ml அளவுகளில் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் முன் முதலில் இந்த அளவுகளை தெரிந்து கொள்ளுங்கள். Ml (milli litres)-எம்.எல். (மில்லி மீட்டர்), cc (cubic centimetre)-சிசி (கியூபிக் சென்டி மீட்டர்), Tea spoon (டீ ஸ்பூன் )-5 ml,Table spoon (டேபிள் ஸ்பூன்)-15 ml, Ounce (அவுன்ஸ்)-30 ml. இந்த அளவுகளில் டாக்டர் மருந்து கொடுக்க பரிந்துரை செய்தால் அந்த அளவில் மட்டுமே கொடுக்க வேண்டும். எந்த மருந்தாக இருந்தாலும் சரி அதை நீங்கள் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தைகள் தானே சாப்பிட அனுமதிக்காதீர்கள்.
குழந்தைக்கான மருந்து அளவு, வயது மற்றும் உடல்நிலையைப் பொறுத்து மாறும். எனவே, மருத்துவர் பரிந்துரைத்த அளவை மட்டுமே கொடுக்க வேண்டும். மருந்தின் காலாவதி தேதியைச் சரிபார்க்கவும். காலாவதியான மருந்துகளைக் கொடுக்கக் கூடாது. வீட்டில் வைக்கும் மருந்துகளை குழந்தைகள் எட்டி எடுக்க முடியாத இடங்களில் பாதுகாப்பாக வையுங்கள்.
பெற்றோர்கள், டாக்டரிடம் அல்லது மருந்து கடைகளில் குழந்தைகளுக்குத் தர வேண்டிய மருத்துகளை எப்படி, எதில் கலந்து (நீர், பால், ஜூஸ்) கொடுக்க வேண்டும், எப்படித் தர வேண்டும், சாப்பிடுவதற்கு முன்பு அல்லது சாப்பிட்ட பிறகா? எந்த அளவுக்கு என்று நன்கு தெளிவாக அறிந்து கொண்ட பிறகே கொடுக்க வேண்டும்.
பொதுவாக, மருந்து பாட்டில்களில் ஒரு மருந்தை எப்படி, எந்த அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த அளவுக்கு மட்டுமே குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு மருந்துகளை ml அளவில் மட்டுமே கொடுக்க வேண்டும். ஸ்பூன்களில் அல்ல என்கிறார்கள்.