
நாம் நம் வீடுகளில் ஏசி, வாஷிங் மெஷின் போன்ற நவீன வசதிகளுடன் வாழ்ந்து வந்தபோதும், வீட்டின் வளமும் மகிழ்ச்சியும் தொடர்ந்து பெருகி வர, வாஸ்து சாஸ்திரப்படி சில வகை தாவரங்களை வைத்து வளர்த்து வருவதும் அவசியமாகிறது. வீட்டிற்கு செல்வச் செழிப்பையும் அமைதியையும் கொண்டு வரும் தாவரங்களில் ஒன்றாக ஜேட் (jade) பிளான்ட் உள்ளது. இதை வீட்டில் வைத்துப் பராமரிக்கும் முறை எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஜேட் பிளான்ட் ஓர் அழகான சதைப்பற்று மிக்க நாணய வடிவ இலைகளுடைய செடி மட்டுமல்ல, வளர்ச்சி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. வாஸ்து சாஸ்திர வழிகாட்டல்படி ஜேட் பிளான்டை வீட்டின் நுழைவு வாயில் அருகில் வைப்பது, எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வருவதைத் தடுத்து, நேர்மறை சக்தி உள்ளே வர உதவி புரியும்.
வேலை செய்யும் இடம் மற்றும் அலுவலக மேஜை மீது ஜேட் வைத்து வளர்ப்பது, தொழில் முறை வளர்ச்சி, தன லாபம், வாடிக்கையாளர் வளர்ச்சி போன்றவற்றிற்கு கூடுதல் மேன்மை பெற்றுத் தரும். பால்கனி மற்றும் உட்புற முற்றத்தின் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசைகளில் ஜேட் பிளான்ட் வைத்திருப்பது வீட்டிற்குள் அமைதி, புத்துணர்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்திருக்க உதவி புரியும்.
வீட்டின் நிதி நிலைமை செழிப்புற்று, புதிதாய்த் தொடங்கும் அனைத்து வேலைகளிலும் வெற்றிக்கனி பறிக்க, ஜேட் பிளான்ட்டை ‘வெல்த் கார்னர்’ (wealth corner) எனப்படும் தென்கிழக்கு மூலையில் வைத்து வளர்க்கும்படி வாஸ்து சாஸ்திரம் பரிந்துரைக்கிறது.
ஜேட் பிளான்ட்டை சமையலறை, படுக்கையறை மற்றும் குளியலறைகளில் வைப்பதைத் தவிர்ப்பது நலம். ஏனெனில், இம்மாதிரி இடங்கள் ஜேட் பிளான்டின் சக்தியை நிலையற்ற தன்மை கொண்டதாக்கிவிடும்.
வீட்டின் வடதிசையில் செடி கண்ணில் தென்படுமாறான இடத்தில் வைக்கலாம். அப்படி இல்லையெனில் தவிர்த்து விடலாம். ஜேட் வீட்டில் நல்லிணக்கம் மற்றும் அமைதி நிலவ உதவும். அதிர்ஷ்டமும் தொழில் முறை வளர்ச்சியும் தரும். காற்றை சுத்தப்படுத்தவும் ஸ்ட்ரெஸ் குறையவும் உதவும். கவனமுடன் செயலாற்றி உற்பத்தியைப் பெருக்க துணை நிற்கும்.
ஜேட் பிளான்டிலிருந்து அதிகபட்ச நன்மை பெற அதற்குத் தேவையான அளவு சூரிய வெளிச்சம் (indirect sunlight) தந்து, மண் உலர ஆரம்பிக்கும்போது மட்டும் நீரூற்றி, பழுத்த இலைகளை நீக்கி, பசுமை மாறாமல் பத்திரமாகப் பாதுகாத்து வருவது அவசியம்.
இது ஓர் அலங்கார செடி என்பதையும் தாண்டி, சொத்துக்களையும் வேறு பல நன்மைகளையும் கொண்டு வரக்கூடிய சக்தி வாய்ந்த தாவரம் இது என்பதை உணர்ந்து, வைக்க வேண்டிய சரியான இடத்தில் வைத்து அன்போடும் அக்கறையோடும் வளர்த்து வந்தால் பலவகை நன்மைகளை கண்கூடாகக் காணலாம்.