
சமையலுக்கு மணம், சுவை, நிறம் அளிக்கப் பயன்படுபவை மசாலாக்கள். வீட்டின் சமையலறையில் தனித்தனி டப்பாக்களில் மசாலா பொருட்கள் இடம் பிடித்திருக்கும். ஆனால், காலையில் அவசரமாக சமைக்கும்போது தேடும் பொருள் கிடைக்காது. எந்த டப்பாவில் என்ன மசாலாப் பொருள் இருக்கிறது என்று தெரியாமல் ஒவ்வொன்றாக திறந்து மூடிக் கொண்டிருந்தால், நேர விரயம் ஆவதோடு சமையலும் பாதிக்கப்படும். ஜாரில் மசாலாப் பொருட்களை போட்டு வைத்து அவற்றில் முறையாக லேபிள் ஒட்டிவிட்டால் சட்டென்று எடுத்து உபயோகிக்க வசதியாக இருக்கும்.
மசாலா ஜார்களில் லேபிள் ஒட்ட உதவும் டிப்ஸ்:
கையால் எழுதப்பட்ட லேபிள்கள்: மசாலா ஜாரில் கையால் எழுதப்பட்ட லேபிள்களை ஒட்டலாம். மார்க்கர்கள், பெயிண்ட் பேனாக்கள் போன்றவற்றை பயன்படுத்தி எழுதலாம். சாதாரண பேப்பரில் எழுதி அதன் மீது செல்லோ டேப்பை ஒட்டி விடலாம். இதனால் தண்ணீர் பட்டு அழியாமல் இருக்கும். இது செலவில்லாத சிக்கன முறையாகும்.
வெள்ளை நிற ஸ்டிக்கர்கள்: கடைகளில் விற்கும் வெள்ளை நிற லேபிள்களை வாங்கி ஒட்டலாம். அவற்றில் மார்க்கர்கள் பயன்படுத்தி எழுதிக் கொள்ளலாம். மசாலா ஸ்டிக்கர்கள் பசையுடன் இருப்பதால் அவை பாத்திரத்துடன் நன்றாக ஒட்டிக் கொள்ளும். இவை வெள்ளை நிறத்தில் இருப்பதால் மார்க்கர் அல்லது ஸ்கெட்ச்சால் எழுதும்போது பெயர்கள் பளிச்சென்று தெரியும். இந்த ஸ்டிக்கர்கள் வாட்டர் ப்ரூப் தன்மை கொண்டதால் தண்ணீர் பட்டாலும் அழியாது.
கருப்பு நிற ஜார் ஸ்டிக்கர்கள்: இவை கருப்பு நிறத்தில் உள்ளதால் வெள்ளை நிறத்தில் பெயர் எழுதிக் கொண்டால் தெளிவாக இருக்கும். ஆன்லைனில் இவற்றுடன் வெள்ளை நிற பென்சிலும் கிடைக்கிறது. 200 ரூபாய்க்கு 80 ஸ்டிக்கர்கள் கிடைக்கும். சிறிய ஜாடிகளில் கூட ஒட்டுவதற்கென்று மினியேச்சர் லேபிள்கள் உள்ளன. அவற்றை இந்த ஜார்களின் ஒட்டிக்கொண்டால் அதில் பொருட்கள் வைத்துக் கொள்ளலாம்.
துணி ஸ்டிக்கர்கள்: மசாலா ஜாடிகளுக்கு அழகூட்டும் வகையில் துணி லேபிள்கள் கூட கிடைக்கின்றன. சாட்டின் துணியால் செய்யப்பட்ட இந்த லேபிள்களை பசையால் ஒட்டிக் கொள்ளலாம். வரிசையாக சமையலறையின் அலமாரியில் அடுக்கி வைத்திருக்கும்போது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தண்ணீர் பட்டால் லேபிளில் உள்ள விவரங்கள் அழிந்துவிடும். எனவே, அதை மாற்றிக் கொள்ளலாம்.
லேபிள்கள் ஒட்டும்போது கவனிக்க வேண்டியவை: ஜார்களில் பொருட்களின் பெயர்களை எழுதும்போது தெளிவான பெரிய எழுத்தில் எழுத வேண்டும். இதனால் காலை நேர அவசரங்களில் உடனே எடுப்பதற்கு சுலபமாக இருக்கும். படிக்கவும் எளிதாக இருக்கும் வகையில் பொருட்களின் பெயர்கள் சுருக்கமாக எழுதப்பட வேண்டும். அதோடு, குழப்பமின்றி தெளிவாக இருக்க வேண்டும்.
ஜாருக்குள்ளே இருக்கும் மசாலா பொருட்களுக்கு ஏற்ற நிறத்தில் லேபிள்களை பொருத்தலாம். மிளகாய் தூள் வைத்திருக்கும் மசாலா ஜாருக்கு ஆரஞ்சு நிற லேபிள் பொருத்தமாக இருக்கும். ஜார்களுக்கு டேபிள் எழுதி ஒட்டுனால் மட்டும் போதாது, அவற்றை முறையாக அடுக்கி வைக்க வேண்டும். தினசரி எடுக்கும் மசாலா பொருட்களை அடுப்புக்கு அருகில் இருக்கும் அலமாரியில் எளிதாக எடுக்கும் வகையில் அடுக்கி வைக்க வேண்டும். வாரம் ஒரு முறை உபயோகப்படுத்தும், உதாரணமாக பிரியாணி செய்வதற்குத் தேவையான லவங்கப்பட்டை, ஜாதிக்காய் போன்ற பொருட்களை அலமாரியின் உள்ளடுக்குகளில் வைக்கலாம்.
எப்போதாவது அரிதாக எடுக்கும் மசாலா பொருட்களை பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏதாவது ஜார்களில் பெயர்கள் அழிந்துவிட்டாலோ அல்லது லேபில் கிழிந்து விட்டாலோ உடனடியாக அதை மாற்றி புதிதாக பெயர் எழுதி ஒட்ட வேண்டியது மிகவும் அவசியம். இது சமைக்கும்போது ஏற்படும் குழப்பத்தை தடுக்கும்.