மனிதர்களின் நிம்மதிக்கு வேட்டு வைக்கும் குணங்களில் குறிப்பிடத்தக்கது பொறாமை. இந்த பொறாமை குணம் யாரையும் விட்டுவைப்பதில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினர் இடையேயும் இந்த பொறாமை குணம் இருப்பதைக் காணலாம்.
குழந்தைகளிடம் தங்களை அறியாமல் பொறாமை குணம் இருக்கும். பெரியவர்களிடம் அவர்கள் அறிந்தே இந்த குணம் காணப்படும். இந்த பொறாமை குணம், ஒருவரது வாழ்க்கையில் துன்பங்களையும், துயரங்களையும் தந்துவிடக் கூடும். எனவே, அறிந்தும் அறியாமலும் இந்த பொறாமை குணம் நம்மை அணுகாமல் இருக்க புத்திசாலித்தனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
ஒரு ஊரில் பரம ஏழை ஒருவன் இருந்தான். அவன் அன்றாடம் ஒரு வேளை உணவுக்கே அல்லல்பட்டுக் கொண்டு இருப்பவன். ஒரு நாள் அந்த கிராமத்திற்கு ஒரு புத்த பிட்சு ஒருவர் வந்தார். அவரைப் பார்ப்பதற்கு சென்ற அந்த ஏழை குடியானவன், அந்த புத்த பிட்சுவை சந்தித்து தனக்கு செல்வங்கள் கிடைத்து தான் நன்றாக வாழ வேண்டும் என்று அவரிடம் வேண்டினான்.
அவனது கோரிக்கைக்கு இரக்கப்பட்ட அந்த பிட்சு அவனைப் பார்த்து, ‘உனக்கு நான் சகல செல்வங்களும் கிடைத்து வளமான வாழ்க்கை வாழ்வதற்காக நீ கேட்பதை தருவேன். ஆனால், ஒரு நிபந்தனையோடுதான் தருவேன்’ என கூறுகின்றார். அந்த நிபந்தனை என்னவென்றால், ‘நீ உன்னுடைய செழிப்பான வாழ்க்கைக்கு எவ்வளவு செல்வங்களைக் கேட்கின்றாயோ, அதேபோல இரண்டு மடங்கு உன்னுடைய எதிர் வீட்டுக்காரன் பெறுவான்’ என்ற நிபந்தனையைப் போடுகின்றார்.
அதற்கு அந்த ஏழைக் குடியானவன் கலவரமடைந்து ஆலோசிப்பதைப் பார்த்த அந்த புத்த பிட்சு, 'நீ இன்று வீடு சென்று நன்றாக சிந்தித்து உனக்கு என்ன வேண்டும் என நாளை நீ என்னிடம் வந்து கூறு. ஆனால், நீ கேட்பதைப் போல இரு மடங்கு உன் எதிர்வீட்டுக்காரனுக்கு கிடைக்கும் என்று கூறி அவனை அனுப்பி வைக்கின்றார்.
அதேபோல, அடுத்த நாளும் அந்த ஏழைக்குடியானவன் அந்த பிக்குவை பார்ப்பதற்கு வருகின்றான். அவர் அவனைப் பார்த்து ‘உனக்கு என்ன வேண்டும் என தீர்மானித்து விட்டாயா...?’ எனக் கேட்கின்றார்.
அதற்கு அந்த ஏழைக் குடியானவன், 'எனது ஒரு கண்ணை எடுத்து விடுங்கள். நான் மகிழ்ச்சியுடன் இருப்பேன்' என்று கூறுகின்றான். இதைத்தான் பொறாமையின் உச்சக்கட்டம் என்று கூற முடியும்.
தனக்குக் கிடைப்பதைப் போல இரு மடங்கு எதிர் வீட்டுக்காரனுக்குக் கிடைக்கும் என்று அறியும்போது, அவனுடைய பொறாமையின் உச்ச வெளிப்பாடாக தனது ஒரு கண்ணை எடுத்துவிடும்படி அவன் கேட்கின்றான்.
இது ஒரு கற்பனைக் கதையாக இருந்தாலும் பொறாமையின் உச்சக்கட்டத்தை கூறி நிற்கின்றது. பொறாமை என்பது ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இன்றி சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பரந்துபட்டு காணப்படுகின்றது.
மற்றவர்கள் போல நாமும் வாழ்வில் முன்னேற முடியும் என்ற எண்ணம் தோன்றும்போது, யார் மீதும் நமக்கு பொறாமை ஏற்படாது. பொறாமை குணம் யாரையும் விட்டு வைப்பது இல்லை. மனிதர்கள் பொறாமையை விட்டு ஆரோக்கியமான போட்டியுடன் செயல்பட்டால் நல்ல ஒரு நிலையை அடைய முடியும்.
மனம் விட்டுப் பேசினாலே பெரும்பாலான சிக்கல்கள் தீர்ந்து விடும். பொறாமை குணம் உங்கள் மனதில் தோன்றும்போதெல்லாம் உங்கள் தன்னம்பிக்கை திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.
மற்றவர்கள் போல நாமும் வாழ்வில் முன்னேற முடியும் என்ற எண்ணம் தோன்றும்போது யார் மீதும் நமக்கு பொறாமை ஏற்படாது. பொறாமையை விட்டொழிப்போம், பெருந்தன்மையோடு வாழ்ந்து காட்டுவோம். பொறாமை நம்மை அழிக்கும்.