வசதிகள் பெருகிவிட்டாலும் அதன் காரணமாக உடல் ரீதியான பல பிரச்னைகளும் சேர்ந்தே வருகிறது. அந்தக் காலத்தில் சத்துள்ள உணவுகளால் வலுவான எலும்புகளைப் பெற்று இறுதி வரை நடமாடிக் கொண்டிருந்தனர். ஆனால், இப்போது 30 வயதிலேயே சிறு அடி என்றாலும் எலும்பு முறிவு அல்லது எலும்பு பாதிப்பு என்பது சகஜமாகி வருகிறது. எலும்புகளில் வலுவின்றி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.
எதிர்பாராத விதமாக எலும்பு முறிவு ஏற்பட்டால் ஆங்கில மருத்துவரிடம் செல்லலாமா? அல்லது இயற்கை வைத்தியரிடம் செல்லலாமா என்பதில் துவங்கி இது எத்தனை நாட்களில் குணமாகும்? வளைந்த எலும்பு நேராக சேர்ந்து விடுமா? என்ன சாப்பிடலாம்? என்பது போன்ற பல சந்தேகங்கள் வரிசைக் கட்டி நிற்கும். வலியுடன் சந்தேகங்கள் ஒரு பக்கம், ஆலோசனை சொல்பவர்கள் மறுபக்கம் என திணறிப் போய்விடுவார்கள் எலும்பில் அடிபட்டவர்கள். எலும்பு முறிவு குறித்த சில சந்தேகங்களையும் அதற்கான தீர்வுகளையும் இப்பதிவில் காண்போம்.
பெரும்பாலான சிறிய எலும்பு முறிவுகள் 6 முதல் 8 வாரங்களுக்குள் குணமடையலாம். இருப்பினும் சில முறிவுகள் அதன் தீவிரமான அளவைப் பொறுத்து குணமாக அதிக காலம் எடுத்துக்கொள்ளும்.
எலும்பு முறிவு குணமாகவில்லை என்பதன் அறிகுறிகளாக வலி, வீக்கம், சிதைவு, எடை தாங்க இயலாமை மற்றும் பலவீனம் ஆகியவை ஆகும். எலும்பு முறிவின்போது இவை அனைத்தும் பொதுவானவை என்றாலும், இந்த அறிகுறிகள் மருத்துவ முறைகளினால் படிப்படியாக குறையும். அப்படி குறையாமல் இருந்தால் மேலும் கவனிப்பு தேவை.
மேலும், எலும்பு வளர்ச்சியைத் தூண்டுவதற்கு உதவும் மருத்துவ நுட்பங்கள் பல உள்ளன. இருப்பினும் சில குணப்படுத்த முடியாத எலும்பு முறிவுகளுக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படும்.
எலும்பு முறிவுகளுக்கு வெந்நீர் நல்லதா அல்லது ஐஸ் கட்டி நல்லதா எனும் சந்தேகம் பலருக்கு எழும். ஐஸ் கட்டிகள் வீக்கத்தைக் குறைக்கும். ஆனால், கூடுமானவரை வெப்பம் நல்லது. சுடு நீர் ஒத்தடம் போன்றவை தசை விறைப்பைக் குறைக்கும் மற்றும் இயக்கத்தை ஊக்குவிக்கும்.
உடைந்த எலும்புகள் வேகமாக குணமடைய சமச்சீர் சத்துள்ள உணவுகள் தேவை. அன்றாட உணவில் காய்கறிகள், பழங்கள், மெலிந்த புரதம் மற்றும் நீர் ஆகியவை அடங்கும். குறிப்பாக, கால்சியம், வைட்டமின் டி, புரதம் ஆகியவை உணவில் முக்கியமானதாக இருக்க வேண்டும்.
வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுவதால், எலும்புகளுக்கும் தசைக்கும் வலிமை கிடைக்கும். வைட்டமின் கே நிறைந்த புளுபெர்ரி, ராஸ்பெர்ரி, பிளம்ஸ், திராட்சை, அத்திப்பழம் போன்ற பழங்கள் எலும்புகளுக்கு நல்லது. எலும்பு வலிமையாக இருக்க, இரும்புச்சத்து நிறைந்த பேரீச்சம் பழமும் சாப்பிடலாம். ஆரஞ்சு பழத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி நிறைவாக உள்ளன. இதுவும் எலும்புக்கு வலிமை தரும். முட்டையில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. தினம் ஒரு முட்டை உண்பது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
எலும்புகள் கூடியதும் பழைய நிலைக்கு வருவதற்கு பிசியோதெரபி எனும் இயன்முறை மருத்துவம் பயன் தரும். அவரவர் திறனுக்கு ஏற்றாற்போல் சிகிச்சை மாறுபடும். வலி மற்றும் குணம் குறித்து தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.