குழந்தைகளை சாப்பிட வைப்பது பெரும்பாலான பெற்றோருக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. சில குழந்தைகள் எல்லா உணவையும் சுவைத்துப் பார்க்க ஆர்வமாக இருப்பார்கள். சில குழந்தைகள் சில குறிப்பிட்ட உணவுகளை மட்டும் சாப்பிட விரும்புவார்கள். இதில் ஒரு சிலர் மட்டும் எந்த உணவையும் சாப்பிட மாட்டார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளின் பெற்றோர்கள் என்ன செய்வது? குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி? என இந்தப் பதிவில் பார்க்கலாம்.
குழந்தைகளின் உணவுப் பழக்க வழக்கங்கள்:
குழந்தைகளின் உணவு பழக்கவழக்கங்கள் அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சரியான ஊட்டச்சத்து குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அவர்கள் ஆரோக்கியமாக வளர உதவுகிறது. மேலும் சீரான உணவு குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தி அவர்களின் மனநிலையையும் சிறப்பாக வைத்திருக்கும்.
குழந்தைகள் சாப்பிட மறுப்பதற்கான காரணங்கள்:
சில உணவுகளின் சுவை குழந்தைகளுக்கு பிடிக்காமல் போகலாம். ஒரு சில உணவின் தோற்றம் மற்றும் நிறம் குழந்தைகளை கவரவில்லை என்றால் அவர்கள் அதை சாப்பிட மாட்டார்கள். உணவு நேரம் மற்றும் சுழற்சி குழந்தைகளுக்கு பிடிக்கவில்லை என்றால், நீங்கள் தவம் இருந்தாலும் அவர்களுக்கு உணவு ஊட்ட முடியாது. ஒரு சில குழந்தைகளுக்கு உணவு தொடர்பான பயம் இருக்கும். உதாரணமாக அவர்கள் குறிப்பிட்ட உணவை விழுங்க கடினமாக இருக்கும் என நினைக்கலாம். குழந்தைகள் விளையாட்டு, டிவி பார்ப்பது போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தால் அவர்கள் உணவை மறுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அடம்பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைப்பதற்கான யுக்திகள்:
உங்கள் குழந்தைகள் எதை விரும்பி உண்கிறார்கள் என்பதை கவனியுங்கள். ஓரளவுக்கு வளர்ந்த குழந்தை என்றால் அவர்களிடம் பேசி அவற்றை அறிந்து கொள்ளுங்கள். உணவை வித்தியாசமான வடிவங்களில் அல்லது வண்ணங்களில் தயாரித்து அவர்களுக்கு பிடித்தது போல பரிமாறவும்.
உணவு தயாரிப்பில் குழந்தைகளை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்கள் உணவு மீதான ஆர்வத்தை அதிகரிக்க முடியும். ஒரே நேரத்தில் அதிக அளவு உணவு கொடுக்காமல் சிறிய அளவில் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து பழக்கப்படுத்துங்கள்.
உணவு உண்ணும் நேரத்தை சிறப்பாக மாற்றுவதற்கு உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த பொம்மைகளை கையில் கொடுத்து விளையாட்டு காட்டுங்கள். ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் உணவு கொடுப்பது உங்கள் குழந்தையின் உடல் சுழற்சிக்கு நல்லது.
அவ்வப்போது தொடர்ச்சியாக புதிய உணவுகளை அறிமுகப்படுத்துங்கள். அவற்றை அவர்கள் வேண்டாம் என மறுத்தால் வற்புறுத்தி ஊட்ட வேண்டாம். உங்கள் குழந்தைக்கு முன்னால் நீங்கள் முதலில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். அவற்றைப் பார்த்து அவர்களை சாப்பிட கற்றுக் கொள்வார்கள்.