கடுகடுப்போடு இல்லாமல் கலகலப்பாக இருப்பதன் நன்மைகளை அறிவோம்!

Kadukaduppodu Illaamal Kalakalapaga Iruppathan Nanmaigalai Arivom!
Kadukaduppodu Illaamal Kalakalapaga Iruppathan Nanmaigalai Arivom!

கைச்சுவை உணர்வு என்பது எல்லோருக்கும் தேவையானது மட்டுமல்ல, அவசியமானதும் கூட. ஆனால். அந்த உணர்வு எல்லோருக்கும் வந்து விடுவது இல்லை. சிலர் எப்போதும் கடுகடுவென்றே இருப்பார்கள். சிலர் எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருப்பார்கள். வாழ்க்கையில் நகைச்சுவை உணர்வு இருந்தால் எல்லா சவால்களையும் சமாளித்து வாழ்ந்து விடலாம்.

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு நோய்கள் அதிகம் வருவதில்லை. காரணம், வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும். நகைச்சுவை உணர்வு என்பது நம் உடலில் எவ்வளவு பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் வாழ்க்கையின் முக்கியமான அம்சத்தை எட்டிப்பிடித்து இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. நகைச்சுவை என்பது அடுத்தவரைக் காயப்படுத்தும் அளவுக்குக் கிண்டல் செய்வது என்பது சிலரின் வழக்கம். அதை விட்டு விடுங்கள். நகைச்சுவை உணர்வு இருக்கும் மனிதர்கள் தங்களைச் சுற்றி மிக எளிதில் நண்பர் படையை உருவாக்கி விடுவார்கள். அவர்கள் மிக எளிதில் மற்றவர்களோடு பழகவும் செய்வார்கள்.

தலைமைப் பண்பின் மிக முக்கியமான செயலாக இந்த நகைச்சுவை உணர்வைக் குறிப்பிடுகிறார்கள். காரணம், நகைச்சுவை உணர்வு உடைய தலைவர்கள் நல்ல கடுமையான முடிவுகளைக் கூட எளிமையாய் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் சொல்வார்கள் என்பதுதான்.

இன்றைக்கு உலகில் ஆட்டிப்படைக்கும் சிக்கல் மன அழுத்தம். அத்தகைய மன அழுத்தம் வராமல் தடுக்கும் வல்லமை நகைச்சுவை உணர்வுக்கு அதிகமாகவே உண்டு. வாழ்க்கை எப்போதும் வசந்தங்களையே தருவது இல்லை. உருட்டிப் போடும் தாயக்கட்டையில் எப்போதும் ஒரே எண் வருவது இல்லை.

இதையும் படியுங்கள்:
இரவில் ஏன் அவசியம் பல் துலக்க வேண்டும் என்று தெரியுமா?
Kadukaduppodu Illaamal Kalakalapaga Iruppathan Nanmaigalai Arivom!

வாழ்க்கை என்பது பல கலவையான உணர்வுகளின் சங்கமம். வாழ்வில் வருகின்ற நிகழ்வுகளையெல்லாம் இயல்பாகவும், இலகுவாகவும் எடுத்துக்கொள்ள நகைச்சுவை உணர்வு அவசியம். அதுதான் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் மாற்றும். உள்ளத்தில் எப்போதும் நகைச்சுவை உணர்வைக் கொண்டு இருங்கள். நம் வாழ்நாளில் எவ்வளவு காலம் சிரிக்கிறமோ, அவ்வளவு காலம் நல்ல ஆரோக்கியமாக  வாழ்வோம்.

சிரிப்பு இல்லாத வாழ்க்கை வெறும் செயற்கையான வாழ்க்கை ஆகி விடும். அதனால் நம்மால் இயன்றவரை சிரித்து வாழ்ந்து, நமது ஆயுள் காலத்தை அதிகரிப்போம். இனி, யாரிடமும் கடுப்போடு இல்லாமல் கலகலவென இருந்து, சந்தோஷமாக காலத்தை தள்ளுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com