

சமையலறைகளில் சூடான பாத்திரங்களைக் கையாளவும், அடுப்பு மேடையைத் துடைக்கவும் காலம்காலமாக பெண்கள் பழைய ஆடைகளை சிறிதாக வெட்டி உபயோகப்படுத்துவார்கள். ஆனால் அவற்றிலிருக்கும் பிசுக்கை அகற்ற, கஷ்டப்பட்டு துவைத்துக் காயவைக்கவேண்டும். ஆனால் மைக்ரோஃபைபர் துணிகள் (Microfiber cloths) பருத்தித் துணிகளைவிடப் பல மடங்கு செயல்திறன் கொண்டவை. சமையலறையைத் தூய்மையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க எப்படி உதவுகின்றன என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
மைக்ரோஃபைபர் துணி என்றால் என்ன?
மைக்ரோஃபைபர் என்பது மனித முடியைவிட நூறு மடங்கு மெலிதான பாலியஸ்டர் மற்றும் பாலிஅமைடு போன்ற செயற்கை இழைகளால் ஆன ஒரு துணியாகும். இதன் தனித்துவமான வடிவமைப்பு, தூசிகள் மற்றும் திரவங்களை எளிதில் ஈர்த்துத் தங்களுக்குள் தக்கவைத்துக்கொள்ளும் தன்மையைக் கொண்டது.
சமையலறையில் மைக்ரோஃபைபர் துணியின் முக்கியப் பயன்கள்:
காஸ் அடுப்பு சுத்தம்: இன்றைய நவீன காஸ் அடுப்புகள் பலவும் கண்ணாடி அல்லது 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இவற்றை கம்பி நார் கொண்டு தேய்த்தால் கீறல்கள் விழுந்துவிடும். மைக்ரோஃபைபர் துணி மிகவும் மென்மையானது என்பதால், அடுப்பில் எந்தக் கீறலையும் ஏற்படுத்தாமல் பாதுகாக்கும்.
சமையல் செய்யும்போது மேடையில் எண்ணெய்ப் பிசுக்கு, மசாலாக் கறைகள் மற்றும் தண்ணீர் சிந்துவது இயல்பு. சாதாரண துணியால் துடைத்தால் எண்ணெய்ப் பிசுக்கை மேடை முழுதும் பரப்பிவிடும். ஆனால், மைக்ரோஃபைபர் துணியை லேசாக நனைத்துத் துடைக்கும்போது, அது எண்ணெய் பிசுக்கை வேரோடு உறிஞ்சி, மேடையை நொடியில் சுத்தமாக்குகிறது. அடுப்பைப் புதியது போலப் பளபளக்க வைக்கும்.
பாத்திரங்கள் மற்றும் கண்ணாடிப் பொருட்கள்: கண்ணாடி க்ளாஸ்கள், பீங்கான் தட்டுகள் மற்றும் விலையுயர்ந்த பாத்திரங்களைக் கழுவிய பின், இந்தத் துணியால் துடைத்தால் தண்ணீர் கறைகளோ அல்லது துணியின் நூலிழைகளோ பாத்திரங்களில் ஒட்டாது. அவை புதியது போலப் பளபளக்கும்.
மின்னணு சாதனங்கள்; மிக்ஸி, கிரைண்டர், மைக்ரோவேவ் ஓவன் மற்றும் ஃபிரிட்ஜ் போன்ற சாதனங்களின் வெளிப்புறத்தில் படிந்துள்ள தூசிகளையும், கறைகளையும் துடைக்க இது மிகச்சிறந்தது. இந்தத் துணிகள் மிகவும் மென்மையானவை என்பதால், சாதனங்களின் மேல் எந்தவிதமான கீறல்களையும் ஏற்படுத்துவதில்லை.
பாக்டீரியா மற்றும் கிருமி நீக்கம்: மைக்ரோஃபைபர் துணிகளின் இழைகள் மிக நுணுக்கமாக இருப்பதால், அவை கண்களுக்குத் தெரியாத கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் 99% வரை ஈர்த்து அகற்றும் திறன் கொண்டவை என ஆய்வுகள் கூறுகின்றன.
மைக்ரோஃபைபர் துணியின் சிறப்பம்சங்கள்:
அதிக நீர் உறிஞ்சும் திறன்: இந்தத் துணிகள் தங்களின் எடையை விட 7 முதல் 8 மடங்கு அதிகத் தண்ணீரை உறிஞ்சிக்கொள்ளும். இதனால் தண்ணீரை விரைவாகத் துடைக்க முடிகிறது.
இரசாயனங்கள் தேவையில்லை: சோப் அல்லது க்ளீனிங் லிக்விட் இல்லாமலேயே, வெறும் தண்ணீரை மட்டும் பயன்படுத்தி இந்தத் துணியால் துடைத்தால் தூய்மையான சுத்தம் தரும். இது பணத்தை மிச்சப்படுத்துவதோடு ஆரோக்கியத்திற்கும் நல்லது.
நீடித்த உழைப்பு: பருத்தித் துணிகளைப்போல இவை விரைவில் கிழிந்து போவதில்லை. பல நூறு முறைகள் துவைத்த பிறகும் தன் தன்மையை இழக்காமல் உழைக்கக் கூடியவை.
நினைவில் கொள்ள வேண்டியவை: மைக்ரோஃபைபர் துணிகளைத் துவைக்கும்போது துணிக்கு பயன்படுத்தும் சாஃப்ட்னர்களையோ, கடினமான வாஷிங் லிக்விடையோ பயன்படுத்தக் கூடாது. அவை துணியின் நுண்ணிய துளைகளை அடைத்து, அதன் ஈர்க்கும் திறனைக் குறைத்துவிடும். வெறும் சாதாரண சோப் நீரில் துவைத்து, வெயிலில் உலர்த்தினாலே போதுமானது.
சமையலறை சுத்தமாக இருந்தால்தான் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குறைந்த நேரத்தில், சமையலறையை நூறு சதவீதம் தூய்மையாகவும் கிருமிகள் இல்லாமலும் மாற்ற நினைக்கும் ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் மைக்ரோஃபைபர் துணி ஒரு சிறந்த, சிக்கனமான மற்றும் நவீனக் கருவியாகும்.