

தென்னிந்தியர்களின் மிக முக்கிய உணவான அரிசியை ஊறவைத்து சமைப்பது தான் பொதுவான வழக்கம். ஆனால் அசாமில் விளையும் கோமல் சால் அரிசியை (Komal Saul rice) சமைக்காமல் ஊறவைத்து அப்படியே சாப்பிடலாம். அத்தகைய கோமல் சால் அரிசி பற்றியும் அதில் இருக்கும் சத்துக்கள் பற்றியும் இப்பதிவில் காண்போம்.
உணவு தயாரிக்க சுலபமாக இருக்கும் கோமல் சால் அரிசி, ஒருவரது பசி உணர்வை போக்குவதோடு மட்டுமல்லாமல் நிறைவாக சாப்பிட்ட உணர்வையும் மிகுதியாக தரக்கூடியது.
அரிசியை ஊறவைத்து சமைத்து சாப்பிடுவது பொதுவான வழக்கமாக இருந்தாலும், அசாமில் விளைவிக்கக் கூடிய கோமல் சால் என்ற மந்திர அரிசியை 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைத்தால் சாதமாக மாறி உடனடியாக சாப்பிட தயாராகிவிடும்.
கோமல் சால் அரிசி பாரம்பரிய அரிசியான போரா சால் என்ற அரிசியை கைமுறையாக பதப்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இரவு முழுவதும் இந்த போரா சால் அரிசியை ஊற வைக்க வேண்டும். பிறகு மறுநாள் இந்த அரிசியை வேகவைப்பதோடு, நாள் முழுவதும் வெயிலில் உலர்த்த வேண்டும். அவ்வாறு செய்யும்போது உடனடியாக கோமல் சால் அரிசி தயாராகிவிடுகிறது.
கோமல் சால் அரிசி தனித்துவமான ஸ்டார்ச் அமைப்பை கொண்டுள்ளதால் அதனை ஊற வைக்கும்போது மென்மையாக சாதமாக மாறி விடுகிறது. அவ்வாறு மாறிய சாதத்துடன் வெல்லம், தயிர், பால் அல்லது வாழைப்பழம் சேர்த்து சாப்பிடும்போது சுவையாகவும், சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது .
பழங்காலத்தில் விவசாய வேலைக்குச் செல்லும் விவசாயிகளும், தொலைதூர பயணம் மேற்கொள்பவர்களும் சமைக்க வேண்டிய அவசியம் இல்லாததால் இந்த கோமல் சால் அரிசியை உடன் எடுத்துச் சென்று, தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவார்கள். இதனால் அந்தக் காலத்தில் கோமல் சால் அரிசிக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. எடுத்துச் செல்ல எளிதாகவும், உணவு தயாரிக்க சுலபமானதாக இருந்ததோடு, நிறைவாக சாப்பிட்ட உணர்வைத் தந்து பசியை போக்கியது.
மேலும் வீட்டு விசேஷங்கள், குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக கூடி மகிழும் நேரங்களில் இந்த அரிசி பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது.
கோமல் சால் அரிசியில் உடலுக்கு விரைவான ஆற்றலை அளிக்கக்கூடிய கார்போஹைட்ரேட், உற்சாக நிலையை தக்க வைக்கும் ஸ்டார்ச் அதிகம் உள்ளது. மேலும் செரிமானத்தை ஊக்குவிக்கும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. உடலுக்கு தேவையான இரும்புச்சத்து அதிக அளவில் இருப்பதோடு அத்தியாவசிய தாதுப் பொருட்களை போதுமான அளவு உணவிலிருந்து பெற முயற்சிப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக கோமல் சால் அரிசி இருக்கிறது.
பால், தயிர் சேர்த்து சாப்பிடுவதால் புரதம், கால்சியம் கொண்ட சமச்சீர் உணவாக மாறுவதோடு வெல்லம், வாழைப்பழம் சேர்ப்பதன் மூலம் அதிக அளவு இரும்புச்சத்தும் நார்ச்சத்தும் உடலுக்கு கிடைக்கிறது.
கோமல் சால் அரிசி அசாமின் பாரம்பரிய அரிசியாக இருந்தாலும் காலம் போக்கில் இதன் பயன்பாடு குறைந்து போனது. தற்போது நாட்டின் மற்ற பகுதிகளில் வசிப்பவர்கள் மத்தியிலும் கோமல் சால் அரிசிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் கோமல் சால் அரிசி என்று அழைக்கப்படும் மந்திர அரிசி ஆன்லைனிலும் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.