
இறைவன் படைப்பில் எல்லாமும் சமம்தான். இருப்பினும் நம் முன்னோர்கள் செய்த, நாம் செய்த, செய்து கொண்டிருக்கின்ற பாவ, புண்ணியங்களுக்கேற்ப வாழ்க்கை அமைகிறது. குறையில்லா மனிதர்களும் இல்லை நிறைவான வாழ்க்கையைக் கடந்தவர்களும் இல்லை! நாம், நமது சிந்தனையை ஒருநிலைப்படுத்தி, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி வாழ வேண்டும்.
தெய்வ சாட்சியைப் போலவே மனிதனின் மனசாட்சிக்கும் சக்தி உண்டல்லவா? மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் வாழ்வதே குறையில்லா வாழ்க்கைதான். அடுத்தவனைக் கெடுத்து அதன் மூலம் வரும் அன்றைய தின சொகுசு வாழ்க்கை ஒருவருக்கு நிலைக்காது.
எல்லாம் உணர்ந்தவர் போல பேசுவது தவறான முன்னுதாரணம். வாழ்க்கையில் வாழ்ந்தாலும் ஏசுவது, தாழ்ந்தாலும் ஏசுவது போன்ற நிலைப்பாடு மனிதனின் மனதிலிருந்து மாற வேண்டும். நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டது போலவும், தராசு முள் நோ்கோட்டில் நிற்பது போலவும் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
‘எவ்வளவு நோ்மையாகப் பழகினாலும் கடவுள் எனக்கு சோதனையைத் தருகிறார், அவன் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு தவறு செய்கிறான், அவனை கடவுள் சோதிப்பதில்லை’ என்றெல்லாம் பலர் அங்கலாய்ப்பது உண்டு. அதற்காக நாம் சோர்ந்து போகலாமா? இல்லை இல்லை… போய்விடக் கூடாது. மாறாக, சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, இருக்கும் நியாயமான வாழ்க்கையை இழந்து விடவும் கூடாது!
‘பொய் சொல்லல் ஆகாது பாப்பா’ என்றும் ‘புறஞ்சொல்லல் ஆகாது பாப்பா, தெய்வம் துணையிருக்கு பாப்பா. ஒரு தீங்கு செய்யலாகாது பாப்பா’ என மகாகவி பாடிய பாடல் போல பொய் சொல்லுதல், புறஞ்சொல்லுதல் கூடாது. தெய்வம் துணையிருக்கும், தெய்வத்தால் ஆகாதது எதுவுமில்லை. நம்பிக்கையே வாழ்க்கை. நோ்மைக்கு இன்று இடமில்லை என்ற நிலை வந்தாலும், நமது நிலைப்பாட்டிலிருந்து நாம் மாறவே கூடாது. அதேபோல, எதிர்மறை சிந்தனையுடன் கூடிய வாழ்க்கை இனிக்காது.
மனித நேயம், மனசாட்சியை கடைபிடித்து வாழ்வது, பொய் சொல்லாமை, நோ்மை தவறாமல் வாழ்வது, தெய்வ சிந்தனை, நோ்மறை சிந்தனை இவற்றை ஒருபோதும் தவறாமல் கடைபிடித்து, தான தர்மங்கள் செய்து அனைவரையும் நேசித்து ஆன்றோர் சொல் கேட்டு அனைவரிடமும் பரிவு, பாசம், நேசம் காட்டி வாழ்ந்து வருவதோடு தாய், தந்தையரை மதித்து மனைவியின் நல்ல கருத்துக்களைக் கேட்டு எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் என்ற சிந்தனையோடு வாழ்ந்து வந்தால் நமக்கான அனைத்தும் இறைவன் திருவருளால் நீக்கமற நிறைந்திருக்கும்.
மனதில் வீண் சஞ்சலங்கள் வேண்டாமே? குறையென்றுமில்லை எனச் சொல்லி நோ்மையோடு வாழ்வோம். அதுவே அன்பான வாழ்க்கையின் அடித்தளம். உழைப்பின் தன்மை அறிந்து அதன் பாதையில் பயணிப்போம், வளமாக வாழ்வோம்.