
முன்பெல்லாம் வீடுகளில் மின் உபயோகப் பொருட்கள் அதிகமாக இருக்காது. குறிப்பாக, டி.வி. அதனால் மெல்லப் பேசினால் போதும். எல்லோருக்கும் கேட்கும். அப்படித்தான் பேசிக் கொண்டிருந்தோம். அப்படித்தான் பேசியாக வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். அப்படிக் கூறுவதன் காரணம் உடலில் சக்தி விரயமாகாது. அதனால் சோர்வடையாமல் நீண்ட நேரம் அவரவருக்கான வேலைகளைப் பார்க்கலாம் என்பதால்தான். தற்போது நாம் எப்படிப் பேசுகிறோம். அதனால் என்ன விதமான குளறுபடிகள் வருகின்றன. அதற்கு சீன வாஸ்து கலையான ஃபெங்சுயி தரும் தீர்வு என்ன என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
ஒலி: ‘வீட்டில் ஒருவருக்கொருவர் போதிய அளவு பேசிக்கொள்ள முடியவில்லை’ என்று சில வீடுகளில் கூறுவது உண்டு. இது தாங்களே தங்களுக்கு இழைத்துக் கொள்கிற தீங்கு என்றுதான் சொல்ல வேண்டும். குறைபட்டு கொள்கிறவர்கள் தாங்கள் உரையாடும் இடத்தின் பின்னணியை ஆராய்ந்தால், இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே தொலைக்காட்சி இயங்கிக் கொண்டிருக்கும். அறையில் இருப்பவர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ அது தொடர்ந்து இயங்கியபடியே இருக்கும்.
இப்படி ஒலி அலைகள் தொடர்ந்து பாயும்போது அறையில் உயிர் சக்தி நிலை பெற முடிவதில்லை. அதனால் அங்கு அமர்ந்து உரையாடுகிறவர் பேச்சில் அர்த்த பொருத்தம் இருக்காது. இதற்குத் தீர்வு எளியதுதான். நாம் நிகழ்ச்சி பார்க்காதபோது தொலைக்காட்சி பெட்டியை நிறுத்தி விடுவது தீர்வாக அமையும்தானே. அப்போது உயிர் சக்தி அறையில் நிலைப்படும். பேச்சில் ஒரு ஒழுங்கு இருக்கும். இளைப்பாற விரும்புகிறவர் பின்னணி இசையை ஒலிக்க விடலாம். ஆனால், ஓசை இன்றி அமைதியாய் அது ஒலிக்க வேண்டும். அப்போதுதான் இந்த இசை மனதை மென்மைப்படுத்தும். இப்படி எளிய தீர்வுகளைத்தான் சீன வாஸ்துவும் சொல்கிறது.
ஒளி: இயற்கை ஒளி அதிக அளவு வீட்டிற்கு உட்புகுமாறு முடிந்த மட்டும் ஊக்குவிக்க வேண்டும். பகல் நேரத்தில் ஜன்னல் திரைகளை ஒருபுறமாக ஒதுக்கி விடலாம். ஜன்னல் அருகே ஸ்படிகம் பொருத்துவதன் மூலமும், முகம் பார்க்கும் கண்ணாடியை தொங்க விடுவதன் மூலமும் அதிக ஒளியைப் பெறலாம். செயற்கை ஒளி பெறுவதை தவிர்க்கவும். காரணம், இவை 'யாங்' சக்தியை சிந்தாமல் சிதறாமல் உள்ளே கொண்டு வந்து விடுவதால் அறையில் இருப்பவர் அமைதியற்றவராகி விடுவார். மாலை நேரங்களில் ஒரு மேஜை விளக்கை ஒளிறச் செய்வதன் மூலம் இளைப்பாறுதலுக்கு ஏற்ற சூழலை உண்டுபண்ண முடியும்.
அது 'யாங்'கை விட 'யின்' கூடுதலான அளவு கிடைக்கச் செய்யும். அதனால் வீட்டில் உள்ள நபர்கள் தங்கள் மன உளைச்சலில் இருந்து விரைவாக விடுபட முடிகிறது. நாள் முழுக்க அலுவலகத்தில் பணிபுரிந்து விட்டு வீடு திரும்பும் மக்கள் பிறகு மாலைப் பொழுதில் இருந்து படுக்கைக்குச் செல்லும் வரை செயற்கை வெளிச்சத்திலேயே இருக்க நேரிடுகிறது. அதனால் அவர்களுக்கு உறங்குவதில் சிரமம் ஏற்படும். விஷயம் இதுதான். அவர்கள் பல மணி நேரம் 'யாங்' (பிரபஞ்ச சக்திகளில் ஆண் பகுதி) சூழலில் இருந்துவிட்டு திடுதிப்பென 'யின்' (பிரபஞ்ச சக்திகளில் பெண் பகுதி) சூழலுக்கு (உறக்கம்) மாறுவதுதான். வரவேற்பறை விளக்குகள் மெல்லிய ஒளி உமிழும் விளக்குகளாய் இருந்து விட்டால் உடனே பிரச்னை தீர்ந்து விடும். உங்கள் அறையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உயிர் சக்தியை ஊக்குவிக்க விரும்பினால் ஒன்றிரண்டு மெழுகுவர்த்திகளை எரிய விடுவது பலனளிக்கும்.
அறையின் கிழக்குப் பகுதியில் மெழுகுவர்த்தி எரிவது அறையின் சமநிலையைப் பாதிக்காது. உடல் நலத்தையும் மேம்படுத்தும். அதேமாதிரி தென்மேற்கு பகுதியில் எரியும் மெழுகுவர்த்தி அமைதியை கணிசமாக உயர்த்தும். மெழுகுவர்த்தி ஒரு அலங்காரப் பொருள் மட்டுல்ல, சுற்றிலும் உள்ள உயிர் சக்தியை ஊக்குவிப்பது. ஆதலால், சீன வாஸ்து மெழுகுவர்த்திக்கு இப்படி ஒரு முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்தத் தீர்வு நம்மால் செய்ய முடிகிற எளிய தீர்வுதான். தெரிந்து வைத்துக் கொண்டால் சூழ்நிலையை அழகாக சமாளிக்கலாம்.
செடிகள்: செடிகள் உயிர் உள்ளவை. ஆகையால், வட்ட வடிவான இலைகளைக் கொண்ட தொட்டி செடிகளை அறையின் மூலைகளில் வைக்கலாம். அது மந்தகதியான உயிர் சக்தியை ஊக்குவிக்கும். அதன் மூலம் ஒரு சமநிலை ஆற்றல் கிடைக்கும். ஜன்னலின் அருகே (முன்னால்) ஒரு செடியை வைக்க சூரிய சக்தி தடையின்றி ஈர்க்கப்படும். செடி 180 டிகிரி கோணத்தில் வைக்கப்பட்டால் அதன் வளர்ச்சி சீராக இருக்கும். வீட்டுக்கு வெளியே பரவி உள்ள அளவு உயிர் சக்தியை வீட்டின் உட்புறத்திலேயே உற்பத்தி செய்துகொள்ள போன்சாய் மரங்கள் உதவும். மலர்கள் கொண்ட பூச்சாடியும் வரவேற்பறைக்கு உற்சாகமளிப்பதாகும். குறிப்பிடத்தக்க அளவு உயிர் சக்தியையும் அது ஊக்குவிக்கும். சமூகத்திலும், தொழில்துறையிலும் பிரசித்தமடைய வரவேற்பு அறையின் தென்புறத்தில் பூச்சாடியை வைக்க வேண்டும். அறையின் மேல்புறத்தில் பூச்சாடியை வைப்பது வாழ்க்கையில் மன நிறைவைக் கொடுக்கும்.
பூக்களின் நிறம் இதமளிக்கும் விதமாக சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு நிற பூக்கள் அறையின் தென்பகுதியில் வைக்கப்படுவது சிறப்பு. குளுமை தரும் கருநீலம், ஆகாய நீலம் பொருந்திய பூக்களை அறையின் வடபகுதியில் வைக்க உகந்தவை.