முஷின் (Mushin) நுட்பம் ஜென் பௌத்தத்திலிருந்து உருவானது. பொதுவாக, கராத்தே, ஜூடோ மற்றும் கெண்டோ போன்ற ஜப்பானிய தற்காப்பு கலைகளில் நடைமுறையில் உள்ளது. பயம், கோபம் அல்லது ஈகோ போன்ற எண்ணங்களால் பாதிக்கப்படாமல் விழிப்புணர்வு மற்றும் தெளிவின் உயர்ந்த நிலையை அடையும் மனநிலையை இது குறிக்கிறது. ஆங்கிலத்தில், 'நோ மைண்ட்' அல்லது 'மைண்ட் வித் மைண்ட்' என்று இது அழைக்கப்படுகிறது.
முஷின் நுட்ப பயிற்சியை செய்வது எப்படி?
முதலில் ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து கொள்ளவும். தியானம் செய்ய மனதை தயார் செய்யவும். மனதில் தோன்றும் எண்ணங்களை எந்தவிதமான ஒட்டுதலும் இன்றி கவனிக்க வேண்டும். அந்த நேரத்தில் நன்றாக மூச்சை கவனிக்க வேண்டும். மனதில் தோன்றும் தேவையில்லாத உணர்வுகள் எண்ணங்கள் போன்றவற்றை வெறுமனே கவனித்துக் கொண்டிருந்தால் போதும். அவற்றுக்கு ரியாக்ட் செய்யக் கூடாது. இதை சில நிமிடங்கள் பயிற்சி செய்யலாம்.
பின்பு நாம் செய்யும் வேலைகளில், வீட்டு வேலையாக இருந்தாலும் சரி, அலுவலகப் பணியாக இருந்தாலும் சரி நமது உடல் எப்படி செயல்படுகிறது என்று மட்டும் கவனித்தால் போதும். மனதிலிருந்து எழும் எண்ணங்களை கவனிக்கக் கூடாது. உதாரணமாக, துணி துவைக்கும்போது வேறு எதையும் நினைக்காமல் கைகள் மற்றும் உடல் எப்படி செயல்படுகின்றன என்று கவனித்தால் போதும்.
முஷின் டெக்னிக்கை, நாம் விளையாடும்போது, வேலை செய்யும்போது என எப்பொழுதும் கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். எந்தவிதமான அதீத சிந்தனையிலும் ஈடுபடக்கூடாது. இந்த நுட்பம் முதலில் கைவரப் பெறுவதற்கு சிறிது நாட்கள் பிடித்தாலும் பொறுமையாக கற்றுக்கொண்டால் அது மிகுந்த பலனைத் தரும். அதனை தினசரி வேலைகளிலும் பயன்படுத்தும்போது தெளிவு, கவனம், வேலையில் நிதானம் என பணியை சிறப்பாக செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும்.
முஷின் டெக்னிக்கின் பயன்கள்:
1. கவனக்குவிப்பு எந்தவிதமான கவனச் சிதறல்களும் இல்லாமல். செய்யும் வேலையில் முழு கவனத்தையும் செலுத்த முடியும்.
2. நாம் செய்யும் செயல் மிகச் சிறப்பாக இருக்கும். இது அதீத சிந்தனை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும். எந்தஒரு செயலிலும் நிறைவான அனுபவம் கிட்டும் மற்றும் முடிவெடுக்கும் திறன் வளரும்.
3. மேம்பட்ட அறிவும், திறனும்; நம்மைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பது பற்றிய அறிவும் சுற்றுப்புற சூழ்நிலைகளை கவனிக்கும் திறனும் வாய்க்கும்.
4. மனதும் உடலும் நல்ல ரிலாக்ஸ்ட்டான நிலையில் இருக்கும். மனது அமைதியாக இருப்பதால் உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் லெவல் நன்றாகவே குறையும்.
5. தெளிவான, குழப்பம் இல்லாத மனநிலை உருவாகுவதால் சிந்திப்பது மிகவும் தெளிவாக இருக்கும்.
6. ஒருவிதமான விடுதலை உணர்வு கிடைக்கும். மனதில் இருக்கும் தேவை இல்லாத பயங்கள், தடைகள் போன்றவற்றிலிருந்து விடுதலை கிடைத்தது போன்ற உணர்வு இருக்கும்.
7. சுயக் கட்டுப்பாடு, ஒழுக்கம் போன்றவை நன்றாக கைவரப் பெறும். உணர்ச்சி வசப்படாமல் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் இது உதவும்.
8. மனதில் ஆழமான அமைதியும் ஒரு ஆத்ம திருப்தியும் கிடைக்கும். உள்ளுணர்வு நன்றாக வேலை செய்யும். அது தேவையான இடங்களில், நேரத்தில் நமக்கு வழிகாட்டியாக விளங்கும்.